லண்டனில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அண்டர்சன் 31ஆவது முறையாக 05 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
1951 ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக அதிகமான வயதில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் அண்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது 39-ஆவது வயது 14 நாட்களில் இந்த சாதனையைச் செய்துள்ளார். இதற்கு முன் ரிச்சார்ட் ஹாட்லி 39 வயதில் இந்த சாதனையைச் செய்திருந்தார்.
எனினும், அவுஸ்திரேலியாவின் பெர்ட் அயன்மங்கர் தனது 49 வயது 313 நாட்களில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 1932 ஆம் ஆண்டில் மெல்பர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக உள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக 5 முறை இங்கிலாந்து அணியில் அண்டர்சன் களமிறங்கியுள்ளார். இதில் 4 முறை 5 விக்கெட்களை அண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.
ஒரே மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக அதிகமான முறை 5 விக்கெட்களை வீழ்த்தியவர் அண்டர்சன் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.