ஐ.பி.எல் என்றால் ரசிகர்கள் : ரசிகர்கள் என்றால் ஐ.பி.எல். உலகில் எத்தனையோ கிரிக்கெட் தொடர்கள் இருந்தும் கூட உலகளாவிய புகழ்பெற்றதும், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க விரும்புவதும், அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டதுமான தொடர் ஐ.பி.எல் தான். ஒட்டு மொத்த இந்திய சனத்தொகையின் 90% பேரால் ரசிக்கப்படுகிறது ஐ.பி.எல். இதனைத் தவிர உலகம் முழுவதிலும் இருந்து பல மில்லியன் மக்களால் நேரடியாகவும் தொலைகாட்சி மூலமும் ரசிக்கப்படும் ஐ.பி.எல் இந்த வருடம் அவ்வாறு இருக்கப் போவதில்லை.
ஐ.பி.எல் 2020 ஆனது, ரசிகர்களால் நேரடியாக மைதானத்திலிருந்து ரசிக்கப்பட முடியாதது, இப்போதைக்கு. ஐக்கிய அரபு ராச்சிய அரசாங்கம் தன்னுடைய கோவிட் – 19 கொள்கைகளில் இறுக்கமாக இருப்பதனால் நேரடியான ரசிகர் பார்வையிடல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் போட்டிகள் ரசிகர்களின்றியே நடைபெறவுள்ளது. ஆனாலும், எமிரேட்ஸ் கிரிக்கட் சபையானது அனுமதியைப் பெறுவதற்காக முழு வீச்சில் செயற்படுவதற்காகக் கூறப்பட்டுள்ளது. அதுவரை, போட்டிகள் முற்று முழுதாக தொழில்நுட்பத்தின் உதவி கொண்டே வெளிவரப் போகின்றன.
ஐ.பி.எல் 2020 இல் என்ன வித்தியாசம் ?
ஐ.பி.எல். 2020 ஆனது கடந்த ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்ட போதும் கோவிட் – 19 காரணமாக முழுமையாக தள்ளிப் போடப்பட்டது. அதன் பின்னதாக சிக்கல்கள் தீர ஆரம்பித்ததும், போட்டிகளை நடாத்த இந்தியாவின் அதிகரித்து வந்த தொற்று சூழ்நிலை பெரும் சிக்கலாக அமைந்தது. இதனால், போட்டிகள் ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடத்தப்பட திட்டமிடப்பட்டன. ஐக்கிய அரபு ராச்சியத்தில் போட்டி நடப்பது இது முதன் முறையல்ல. இதற்கு முன் 2014 இல் 6 போட்டிகள் ஷார்ஜா மைதானத்திலும் 7, டுபாயிலும், மிகுதி 6 அபுதாபியிலும் நடைபெற்றுள்ளன. ஆனால், இந்தப் போட்டிகளில் பறக்கும் சிக்ஸர்களைப் பிடிப்பதற்கோ அல்லது, ஒவ்வொரு ஆட்டமிழப்புக்கும் எழுந்து நடனமாடுவதற்கோ ரசிகர்கள் இருக்கப்போவதில்லை.
அணிகளின் சொந்த மைதானங்கள்
ஐ.பி. எல் லின் ஒவ்வொரு அணியும் இந்தியாவின் ஒவ்வொரு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலே பெயர்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன. அதற்கேற்றாற் போல ஒவ்வொரு நகரமும் தனக்கான சொந்த மைதானத்தைக் கொண்டிருக்கும். அதுவே அவ் அணியின் கோட்டையாக இருக்கும். சொந்த மைதானப் போட்டிகளில் ஒவ்வொரு அணிக்கும் ஏகோபித்த ஆதரவு நிறைந்திருக்கும். சில அணிகள் (சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), பிற அணிகளின் மைதானத்திலும் அதிக ஆதரவைப் பெறும்.
அணிகள் | சொந்த மைதானங்கள் |
---|---|
சென்னை சூப்பர் கிங்க்ஸ் | எம்.ஏ.சிதம்பரம் மைதானம் |
மும்பை இந்தியன்ஸ் | வான்கடே மைதானம் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | எம்.சின்னஸ்வாமி மைதானம் |
டெல்லி கேப்பிடல்ஸ் | பெரோஸ் ஷா கொட்லா மைதானம் |
சன் ரைஸஸ் ஐதராபாத் | ராஜீவ் காந்தி சர்வ.மைதானம் |
ராஜஸ்தான் ராயல்ஸ் | ஸ்வாமி மன்ஸிங் மைதானம் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | ஈடன் மைதானம் |
கிங்க்ஸ் XI பஞ்சாப் | ஐ.எஸ். பிண்டரா மைதானம் |
இம்முறை ஐ. பி.எல் ஐ.அ.இ ல் நடைபெறுவதால் இந்த மைதானங்கள் எதுவுமே பயன்படப்போவதில்லை. அதுமட்டுமில்லாமல்,அணிகளுக்கான தாயகமாகவோ, அவர்களின் பலம் பொருந்திய மைதானமாகவோ எதுவும் இல்லை. அவ்வாறில்லாவிட்டாலும், அந்த உணர்வைக் கொடுக்கக் கூடிய ரசிகர்களுக்கும் உள்ளே வர அனுமதி இல்லை. இது அணிகளின் மானசீக ரீதியான பலத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தும்.
மைதானம் | அமைவிடம் | கொள்ளளவு |
---|---|---|
ஷேய்க் சயீத் கிரிக்கட் மைதானம் | அபுதாபி | 41000 |
ஷார்ஜா கிரிக்கட் மைதானம் | ஷார்ஜா | 17000 |
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் | டுபாய் | 25000 |
நேரம்
வழக்கமாக ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவைச் சுற்றி நடைபெறுவதால் நமக்கு நேர வித்தியாசம் ஏதும் இருக்காது. போட்டி நடக்கும் அதே நேரம்தான் நமக்கும் ஒளிபரப்பப்படும். இம்முறையும் போட்டிகள் நேரலையாகவே ஒளிபரப்பாகின்றன. நமக்கு அது வழக்கமான ஐ.பி. எல் நேரமாக இருக்கலாம் அனால் வீரர்களுக்கு அவ்வாறல்ல. வழமையாக ஐ.பி.எல் போட்டிகள் இரவானால் 7.30 மணிக்கும், பகல் பொழுதுகளில் 3.30 மணிக்கும் நடைபெறும்; ஒளிபரப்பப்படும்.
ஆனால், இம்முறை ஒளிபரப்பை அடிப்படையாகக் கொண்டே போட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதால், நாம் சனிக்கிழமை இரவு 07 மணிக்கு நேரலையாக காணும் போட்டிகள், அபுதாபி நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கே நடைபெறும். இதனால், வீரர்கள் மாறுபட்ட விளையாட்டு நேரங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். இது, அவர்களின் விளையாட்டை பாதிக்குமா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒளிபரப்பு
இம்முறை ஐ.பி.எல் ஒட்டுமொத்தமாக தங்கியிருக்கும் ஒரு முக்கிய காரணி இந்த ஒளிபரப்புதான். வழக்கமாக, ரசிகர்களிடமிருந்து மைதான வாயிலில், அனுமதிச்சீட்டு கட்டணம் அறவிடுவதன் மூலம் அதிகளவு லாபம் சம்பாதிக்கும் ஐ.பி.எல் நிர்வாகத்துக்கு இம்முறை அந்தக் கொடுப்பனவு இல்லை. அவர்கள் தனிப்பட விளம்பரதாரர்கள் மற்றும் அனுசரணையாளர்களையே நம்பி இருக்கின்றனர். ஆனால், இம்முறை மைதான அனுமதி இல்லாமையால், ஒட்டு மொத்த ரசிகர் பட்டாளமும் தொலைக்காட்சி மற்றும் இணைய வழி இணைந்துதான் ஐ.பி.எல்லை ரசிக்க வேண்டி இருக்கிறது. இங்குதான் வருகிறார் ஐ.பி. எல்லின் அதிகாரபூர்வ ஒளிபரப்பாளர் ஹாட்ஸ்டார்.
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிக்கொண்ட இறுதிப்போட்டியை கிட்டத்தட்ட 18.6 மில்லியன் பார்வையாளர்கள் ஹாட்ஸ்டாரில் ஒரே நேரத்தில் பார்வையிட்டதன் மூலம், ஹாட்ஸ்டார் சமகாலத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தளத்துக்கான சாதனையை படைத்தது. இந்த ஆண்டு, “அதிகரித்த சாதன பார்வையாளர்களைக்” கொண்ட தொடர் என்பதனால் அச்சாதனையை மீண்டும் முறையடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
அத்துடன் கடந்த ஆண்டு ஒவ்வொரு இந்திய மொழிக்கும் தனித்தனியாக வழங்கப்பட்ட போட்டி வர்ணனைகள் இம்முறை இருக்குமா என்பது தொடர்பாகத் தெரியவில்லை. ஏனெனில், ஐ.அ.இ ல் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொரு நபருக்கும், அவரது சுகாதாரத்துக்கும் ஐ.பி.எல் நிர்வாகம் பொறுப்புக்கு கூற வேண்டி வரும். அதிகப்படியான, வர்ணனையாளர்களை கொண்டு செல்வது இந்த இடத்தில் நல்ல யோசனை அல்ல. ஆனால், வர்ணனையை மட்டும் இந்தியாவில் உள்ள ஐ.பி.எல் மத்திய தயாரிப்பகத்தில் இணைத்து ஒளிபரப்பப்படலாம். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களை ஐ.பி.எல் எவ்வாறு கையாளும் எனப் பார்க்க வேண்டும்.
ரசிகர்கள்
எது மாறுகிறதோ இல்லையோ என்றும் மாறாமல் அன்பு செலுத்தும் அணியின் ரசிகர்கள் இம்முறை நிச்சயமாக மாறியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தங்கள் அணிக்கு சொந்த மைதானத்தில் விளையாட முடியாததால் புனே சென்றதைக் கண்டு, அவர்களோடே புனேக்கு தனியே ஒதுக்கப்பட்ட, ரயிலில் சென்ற சென்னை ரசிகர்கள். #அன்புடன் (#AnbuDen) எனவும் யெல்லோவ்ஆர்மி எனவும் தொடர்ந்து செல்லும் அன்பர்கள் சென்னை அணியின் பெரிய பலம்.
எங்கு நடந்தாலும் எல்லாப் போட்டிகளுக்கும் சென்று பார்க்கும் சில உயிர் ரசிகர்கள், பெங்களூரு போன்ற அணிகளுக்கே உரிய தனித்துவ உற்சாகம். திடீரென பிரபலமான பெங்களூரு அணி ரசிகைப் பெண்ணின் சிரிப்பும், சென்னை அணியின் தீபக் சஹாரின் சகோதரியின் முகமும் 2020இல் நமக்கு இல்லை.
சினிமா பிரபலங்கள் தங்களை மறந்து, போட்டியில் மூழ்கும் தருணங்கள் கண்கொள்ளாக் காட்சி. போட்டியில் அடிக்கும் சிக்ஸர்களை ஒற்றைக் கையால் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசும் இம்முறை இல்லை. இவை எல்லாவற்றையும் விட கைதட்டல்களும், விசில்களும், புன்னகைகளும் அழுகைகளும் பிரார்த்தனைகளும் கூட இம்முறை கண் முன்னே அரங்கேறப்போவதில்லை. ஆனாலும், தொலைக்காட்சியின் பின்னே இருந்து நம் அன்பை வெளிப்படுத்துவோம்.
ஐ.பி.எல் 2020 தொடர் செப்டெம்பர் 19 சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான இரவுப் போட்டியுடன் ஆரம்பமாகிறது. போட்டிகளின் ஆரம்பம் முதல் அணிகளின் நிலை தொடர்பாக தெரிந்து கொள்ளக் கூடிய அழகிய அட்டவணை நமது முகப்பு பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும். தொடர்ச்சியான போட்டி முடிவுகள் மற்றும் வாக்கெடுப்புக்களில் பங்கேற்க எம்மோடு எமது பேஸ்புக் பக்கம் மற்றும் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் இணைந்திருங்கள்.
பட உதவி : IPLT20.com