இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கிளேர் கோனர் மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் என்.சி.சி புதிய தலைவராக பொறுப்பேற்றார்.
என்.சி.சி கழகத்தின் 234 ஆண்டுகால வரலாற்றில் அக் கழகத்தின் தலைவர் பதவிக்கு முதன் முறையாக ஒரு பெண் தெரிவாகியுள்ளமை வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெறும் ஒரு நிகழ்வாகும்.
கிரிக்கெட் விதிகளை உருவாக்குவதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஐ.சி.சி முன்னோடியாக இருக்கும் லண்டனில் செயற்படும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் எம்.சி.சி தலைவராக இலங்கை முன்னாள் தலைவர் சங்கக்கார கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார்.
பொதுவாக இதன் தலைவர் பதவிக் காலம் ஓராண்டாகும் இந்த நிலையில் கொரோனாவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இந்தக் கழகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைக் கருத்தில் கொண்டு சங்கக்காரவின் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சங்கக்கார இவ்வாண்டு செப்டம்பர் இறுதி வரை பதவியில் இருந்தார்.
எம்.சி.சி தலைவராக ஒருவர் ஓராண்டுக்கு மேல் நீடிப்பது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி சங்கக்கார மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக தொடர்ந்து இரண்டு வருடங்கள் பணியாற்றினார்.
எம். சி.சி யின் தலைவர் பதவியில் அமர்ந்த உலகின் முதல் பிரிட்டிஷ் அல்லாத நபர் குமார் சங்கக்கார என்பது விசேட அம்சமாகும்.
மேலும் மேரில்போன் கிரிக்கெட் கழகத்தின் 234 ஆண்டுகால வரலாற்றில் முதலாவது பெண் தலைவராக கிளேர் கோனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
43 வயதான கிளேர் கோனர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் மகளிர் கிரிக்கெட்டின் உறுப்பினராக கடமையாற்றி வருகின்றார்.