தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னை மிரட்டிய இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் யார் என்பதை இலங்கை அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதான் வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுக்களையும் ( 133 டெஸ்ட் ) ஒரு நாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுக்களையும் ( 350 ஆட்டம் ) கைப்பற்றியுள்ளார்.
இவ்விரு வடிவிலான கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய உலக சாதனையாளர் இவர் தான். 2011 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த முரளிதரன் தற்போது ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக உள்ளார்.
49 வயதான முரளிதரன் தான் விளையாடிய காலத்தில் பல துடுப்பாட்ட வீரர்களை தனது சுழலால் மிரட்டியவர். ஆனாலும் அவரையும் இரு துடுப்பாட்ட வீரர்கள் நடுங்க வைத்துள்ள தகவலை அவரே இப்போது வெளியிட்டுள்ளார்.
எனது காலகட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா இந்தியாவில் வீரேந்திர ஷேவாக் ஆகியோருக்கு பந்து வீசுவது தான் மிகவும் கடினமாக இருந்தது.
எனக்கு எதிராக நிறைய அபாயகரமான துடுப்பாட்ட வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவின் அடம் கில்கிறிஸ்ட் கூட நான் எப்படி பந்து வீசுவேன் என்பதை கணிக்க முடியாமல் திணறுவார்.
ஆனால் மற்ற எல்லோரை விடவும் ஷேவாக்கும் லாராவும் தான் எனக்கு அதிகமாக குடைச்சல் கொடுத்தவர்கள். இருவரும் நான் எப்படி பந்து வீசுவேன் என்பதை புரிந்து செயற்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.