அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் ஒரே ரக (USB-C) சார்ஜர் நிபந்தனை விதிக்க தயாராகிறது ஐரோப்பிய ஒன்றியம்.
அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அமுல்படுத்தவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இத் தீர்மானமானது அப்பிள் நிறுவனத்துடன் மோதல்லொன்றை ஏற்படுத்தக் கூடும் என கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட் தொலைபேசிகளும் ஒரே மாதிரியான அதாவது யூஎஸ்பிசி (USBC) ரக சார்ஜரை கொண்டிருக்க வேண்டும். இத் தீர்மானமானது இலத்திரனியல் கழிவுகளை குறைப்பதற்கு உதவும் என ஐரோப்பிய ஆணைக்குழு நம்புகிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 45 கோடி மக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் லைட்னிங் ரக சார்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஏனைய போன்களில் மைக்ரோ யூஎஸ்பி மற்றும் யூஎஸ்பிசி ரக சார்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒன்றுடனொன்று பொருந்தாத சார்ஜர்கள் தமது ட்ரோயர்களில் நிறைவது குறித்து ஐரோப்பிய பாவனையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்றதிகார உபதலைவர் மார்க்கரேத்தா வெஸ்ட்டேயர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒரே ரக சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிப்பது புத்தாக்கங்களை தடுப்பதுடன் மாசடைதலை அதிகரிக்கச் செய்யும் என அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.