பெண்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது தோள்பையை எடுத்து செல்ல ஒருபோதும் மறக்கமாட்டார்கள். எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் அவர்களுடன் சளைக்காமல் தோள்பையும் பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.
பெண்கள் எவ்வளவு அழகான தோள்பையை எடுத்துச் செல்கிறார்கள்
என்பதைவிட, அதன் உள்ளே என்னென்ன பொருட்களை வைத்து எடுத்துச் செல்கிறார்கள் என்பது தான்.
பெண்கள் வெளி இடத்திற்கு செல்லும்போது, எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? அதுவரை பயன்படுத்துவதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிறைய பேர் அது பற்றி சிந்திப்பதில்லை. தேவைக்கு அதிகமாக தோள்பையில் பொருட்களை திணித்து வைத்திருப்பார்கள். அதில் பாதி பொருட்களை பயன்படுத்தாமலேயே விட்டுக்கு திருப்பிக் கொண்டு வருவார்கள்.
பெண்கள் தங்கள் தேவைக்காக பொருட்களை வாங்கும் போது, தங்கள் தோள்பையில் வைக்கும் அளவுக்கு ஏற்ப சிறிய பொருட்களை வாங்குவார்கள்.
கண்ணாடி என்றால் சிறிய கண்ணாடி, சீப்பு என்றால் சிறிய சீப்பு. இப்படி வகைவகையாக புதிய டிசைன்களில் வாங்குவார்கள்.வெளியே புறப்படும்போது
தேவைப்படும் பொருட்கள் என்று நினைத்து அத்தனையையும் தோள்பைக்குள்
திணித்துவிடுவார்கள். அப்போது அது சுமையாக தெரியாது.
வெளியே பயணங்களின் போதுதான் அது சுமையாக மாறுவதை உணருவார்கள்.அத்தோடு பெண்கள் தண்ணீர் போத்தல், புத்தகம், மதிய உணவு, செல்போன்,அலங்கார அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்து செல்வது வழமை.
இவ்வாறான அதிகமான சுமை தோளை அழுத்தும்.அதனால் தோளில் இருக்கும் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். அதை தொடர்ந்து கைவலி, கழுத்துவலி, முதுகுவலி, தலைவலி போன்ற தொந்தரவுகள் உருவாகக்கூடும்.
பெண்களின் தோள்பட்டை இயற்கையாகவே சற்று வளைந்திருக்கும். சற்று கடினமாக பையை தோளில் தூக்கினாலும் எலும்புக்கு பாதிப்பு ஏற்படாமல்
அது பார்த்துக்கொள்ளும். ஆனால் சுமை அதிகமாவதும். தொடர்ந்து அதை தூக்கிக்கொண்டு செல்வதும் வளைவுப் பகுதியின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால் உடல் சமநிலையை இழக்கும்.கனமான கைப்பை வைத்திருப்பவர்கள்
சற்று முன்னோக்கி வளைய வேண்டியிருக்கும். அது முதுகெலும்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வலியை உண்டாக்கும்.
தோளில் மாட்டிக்கொண்டு செல்லும் பைகள் 2 முதல் 3 கிலோ எடை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எடை இருந்தால், பெண்கள் ஒரு பக்கமாக சாய்ந்து நடக்கவேண்டியதாகிவிடும்.
தோள்பையை பயன்படுத்தும் பெண்கள் கவனிக்க வேண்டியவை
- பெரிய பெல்ட்டுகளை கொண்ட பைகளை தேர்ந்தெடுங்கள்.
- கனமான பைகளை எடுத்துச் செல்லும் போது ஹைஹீல்ஸ் செருப்பு அணியக் கூடாது.மிதமான வேகத்தில் செல்ல வேண்டும்.அப்போது தான் உடலை சமநிலைப்படுத்தமுடியும்
- அதிக நேரம் தோளில் சுமப்பதால் கைகளும்,விரல்களும் மரத்துப் போய்விடக்கூடும்.இரத்த ஓட்டம் தடைப்படுவதால் அந்தபாதிப்பு தோன்றும். அந்த சமயத்தில் ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.
- எடை அதிகமான பைகளை வாங்கக்கூடாது. லைட் வெயிட் பைகளை வாங்குங்கள்.