டெல்டாவை விட வீரியம் மிகுந்த வைரஸ் தோன்றலாம் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை.
கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பல வடிவங்களில் திரிபடைந்து தற்போது டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என்ற வடிவங்களில் உலகை அச்சுறுத்தி வருகின்றது.
இந்நிலையில் இதை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு திரிபு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவரான ரெட்ரோஸ் கேப்ரியேசஸ் இது குறித்து கூறும் போது உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும்.
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் கண்டுபிடிப்பு மற்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இருந்த போதிலும் உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன
அதில் முக்கியமானது அனைவருக்கும் சமமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காமையாகும். குறிப்பாக குறைந்த வருமான கொண்ட நாடுகளில் வெறும் ஒரு சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி பெற்றிருக்கின்றார்கள்.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் மற்றும் பிற வழிகளைப் பகிர்ந்து கொள்வதில் தற்போதைய உலகளாவிய அநீதி சமூக மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்கு மட்டுமின்றி வைரஸ் மேலும் பரவுவதற்கும் வழிவகுக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் குறைந்தபட்சம் 10 சதவீத மக்கள் தொகைக்காவது தடுப்பூசி சென்றடைந்திருக்க வேண்டும். ஆண்டிறுதிக்குள் 40 சதவீதமாகவும் அடுத்த ஆண்டு 2022 மத்திய பகுதிக்குள் 70 சதவீதமாக உயர்ந்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.