இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
பூப்புனித நீராட்டு விழா என்பது பெண்கள் தங்கள் பருவ வயது அடைந்ததை முன்னிட்டு தமிழர்களால் கொண்டாடப்படும் சடங்காகும்.
பூப்புனித நீராட்டு விழா என்பது பூப்படைந்த பெண்ணை புனிதமாக்கும் விழாவாகும். இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன.
கிராமப்புறங்களில் பூப்புனித நீராட்டு விழா மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக நிகழ்த்தப்படுகிறது.
பூப்புனித நீராட்டு விழா
ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் தாய்மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குடிசை கட்டும் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது. தென்னை ஓலைகளால் குடிசை அமைத்து அதில் பூப்பெய்திய பெண்ணை அமர்த்துவார்கள்.
தாய்மாமன் சீர்கள்
சகோதரியின் மகள் பூப்பெய்திய பிறகு தாய்மாமன் சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, சீப்பு, கண்ணாடி, பச்சை ஓலை குச்சில் கட்டுவது, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் போன்றவற்றை வழங்குவார்கள்.
முதற்தண்ணி வார்த்தல் (நீராட்டல்)
அக்காலத்தில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் பெண்ணை அமர்த்தி தாய்மாமன் தேங்காய் உடைக்க, தந்தையின் சகோதரி தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். இது முதற்தண்ணி எனப்படும்.
பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து தாய்மாமனிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் ஒரு தனியறையில் பெண்ணை விடுவர்.
தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் செய்ய வேண்டிய சடங்கு
தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள் தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டுவர். அதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண்ணை அலங்கரிக்கப்பர்.
சடங்கு செய்வதற்கு சுபநாள் ஒன்றை தேர்வு செய்து அச்சடங்கை விழாவாக வீட்டிலோ அல்லது மண்டபத்திலோ செய்வதாக முடிவு செய்வர். அத்துடன் அவர்கள் தம் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அவ்விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுப்பார்கள். சிலர் தலைக்கு தண்ணீர் வார்த்தலை வீட்டிலும், அதற்கான கொண்டாட்டத்தினை மண்டபத்திலும் ஆடம்பரமாக கொண்டாடுவார்கள்.
சிலர் இரண்டையும் வீட்டிலேயே செய்வார்கள். இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்த ‘பூப்பு நன்னீராட்டல்” சடங்கு தமிழர்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.
இந்த நாளை பூப்பு நன்னீராட்டு விழாவாக கொண்டாட தங்களுடைய மாமன், மைத்துனர்கள் மற்றும் உற்றார் உறவினர்களை அழைத்து கொண்டாடுகின்றனர். இது எதற்கு தங்கள் வீட்டிலும் திருமண வயதில் மகள் இருக்கிறாள் என்று மறைமுகமாக தெரியப்படுத்தவே கொண்டாடப்படுகிறது..