சூரியன்
நவக்கிரக மண்டலத்தில் முதலாவதாகவும் நடுநாயகமாகவும் விளங்குபவர் சூரியன் ஆவார். அவர் ஒரு முகமும் இரண்டு கைகளையும் உடையவர். மாணிக்கம் பதித்த முடியையும் இரத்தின மாலையையும் உடையவர். செஞ்சந்தனத்தையும் செவ்வாடையையும் தரித்தவர். உஷி- ப்ரத்யுஷா என்ற இரண்டு மனைவியரை உடையவர் ஆவார். சூரியனுக்கு அதிதேவதை அக்கினியும் பிரதி தேவதை உருத்ரனும் ஆவார். சூரியனை வழிபடுவதால் கண் சம்பந்தமான நோய்களும் சகல உடற்பிணிகளும் நீங்கப்பெற்று நலமுடன் வாழலாம்.
சந்திரன்
நவக்கிரக மண்டலத்தில் இரண்டாவதாகவும் இருக்கும் சந்திரன் சூரியனுக்கு தென்கிழக்கில் விளங்குபவர். இவர் ஒரு முகமும் இரண்டு கைகளும் உடையவர். அமைதி தவழும் பார்வையையும் வெண்ணிற ஆடையையும் வெண்சந்தனமும் பலநிற மலர் மாலைகளையும் தரித்தவர். அமிர்ததேவதையும்- ரோகிணியையும் மனைவியாகக் கொண்டவர். சந்திரனுக்கு அதிதேவதை வருணனும் பிரதிஅதி தேவதை கௌரியும் ஆவர். இவரை வழிபடுவதால் ஆயுள் விருத்தியையும் செல்வ வளங்களையும் பெறலாம்.
அங்காரகன்
நவக்கிரக மண்டலத்தில் மூன்றாவதாகவும் சூரியனுக்கு தெற்கிலும் விளங்குபவர். புன்னகை முகத்துடன் நான்கு கைகளையும் உடையவர். செம்மேனியையும் செந் நிற கண்களையும் செவ்வாடையையும் செம்மலர் மாலையும் செஞ்சந்தனத்தையும் தரித்தவர். சக்தி தேவியை மனைவியாகக் கொண்டவர். அங்காரகனுக்கு அதிதேவதை. சுப்பிரமணியர் ஆவார். இவரை வழிபடுவதால் நினைத்த காரியங்களில் வெற்றியையும் தைரியத்தையும் பெரியோர்களிடத்தில் நன்மதிப்பையும் பெறலாம்.
புதன்
நவக்கிரக மண்டலத்தில் நான்காவதாக சூரியனுக்கு வடகிழக்கிலும் விளங்குபவர். ஒரு முகத்துடன் நான்கு கைகளை உடையவர். இவர் பச்சை நிறத்துடன் அழகு பொலியும் முகத்துடன் மஞ்சள் ஆடையையும் மஞ்சள் சந்தனத்தையும் தரித்தவர். ஞான தேவியை மனைவியாகக் கொண்டவர். புதனுக்கு அதிதேவதை விஷ்ணுவும் பிரதி அதிதேவதை நாராயணனும் ஆவார்கள் இவரை வழிபடுவதால் அழகினையும் ஞானத்தையும் சீரும் சிறப்பினையும் பெறலாம்.
குரு
நவக்கிரக மண்டலத்தில் ஐந்தாவதாகவும் ம் சூரியனுக்கு வடக்கிலும் விளங்குபவர். ஒரு முகமும் நான்கு கைகளையும் உடையவர். இவர் பொன்னிற மேனியும் பொன்னிற சந்தனத்தையும் பொன்னாபரணங்களையும் பொன்னாடையும் தரித்தவர். தாரா தேவியை மனைவியாகக் கொண்டவர். குருவிற்கு அதி தேவதை பிரம்மாவும் பிரதி அதி தேவதை இந்திரனும் ஆவார். இவரை வழிபடுவதால் நல் வாழ்க்கையும் மக்கட்பேறும் பெறலாம்.
சுக்கிரன்
நவக்கிரக மண்டலத்தில் ஆறாவதாகவும் சூரியனுக்கு கிழக்கிலும் விளங்குபவர். ஒரு முகமும் நான்கு கைகளையும் உடையவர். வெண்ணிற கட்டழகையும் வெண்ணிற மணியையும் வெண்மலர் மாலையையும் வெண்ணிற சந்தனமும் ஒரு கண் பார்வையும் உடையச் சுக்கீர்த்தியை மனைவியாக கொண்டவர். சுக்கிரனுக்கு அதிதேவதை இந்திராணியும் பிரதி அதி தேவதை இந்திரன் ஆவார்கள். இவரை வழிபடுவதால் சுபகாரியங்களையும் புகழையும் செல்வத்தையும் பெறலாம்.
சனி
நவக்கிரக மண்டலத்தில் ஏழாவதாகவும் சூரியனுக்கு மேற்கிலும் விளங்குபவர். ஒரு முகமும் நான்கு கைகளையும் உடையவர். நீல மேனியையும் சடை முடியையும் கறு நிற வஸ்திரத்தையும் நீல மலர் மாலையையும் தரித்தவர். நீலா தேவியை மனைவியாக கொண்டவர் சனி பகவானுக்கு அதிதேவதை எமனும் பிரதி அதி தேவதை பிரஜாபதியும் ஆவார்கள். இவரை வழிபடுவதால் நீண்ட ஆயுளையும் விரும்பிய பயன்களையும் பெறலாம்.
ராகு
நவக்கிரக மண்டலத்தில் எட்டாவது ஆகவும் சூரியனுக்கு தென்மேற்கிலும் விளங்குபவர். ஒரு முகமும் நான்கு கைகளையும் செதில்கள் அமைந்த பாம்பு உடலையும் உடையவர். கரிய மலர் மாலையையும் கருஞ் சந்தனத்தையும் தரித்தவர். ஸ்மஹீயை மனைவியாக கொண்டவர். ராகுவிற்கு அதிதேவதை துர்க்கை அல்லது பிரதி அதிதேவதை காலன் அல்லது பாம்பும் ஆவார்கள். இவரை வழிபடுவதால் சகல நோய்களையும் விஷஜந்துக்களால் ஏற்படுகின்ற பயத்தினையும் நீங்கப் பெறலாம்.
கேது
நவக்கிரக மண்டலத்தில் ஒன்பதாகவும் சூரியனுக்கு வடமேற்கிலும் விளங்குபவர். மூன்று அல்லது ஐந்து தலைகள் கொண்ட பாம்புத் தலையோடும் இரண்டு கைகளையும் உடையவர். கருமை கலந்த செந்நிற வடிவத்தோடு பல வர்ண ஆடைகளையும் பல நிற மலர்களையும் பல நிற சந்தனத்தையும் தரித்தவர். சித்ரலேகாவை மனைவியாகக் கொண்டவர். கேதுவிற்கு அதிதேவதை சித்ர குப்தனும் பிரதி அதிதேவதை பிரம்மா இவரை வழிபடுவதால் தைரியம் செல்வம் ஞானம் வெற்றி புகழ் ஆகியவற்றைப் பெறலாம்.