லாக்-டவுனில் செம ஐடியா…!!
முயற்சி செய்துதான் பார்க்கலாமே…!!
இந்த லாக்-டவுன் நேரத்தில் நீங்களும் காய்கறி தோட்டம் அமைக்க ரெடி ஆகிட்டிங்களா..!!
தற்போது உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரே விஷயம் கொரோனா. கொரோனாவை தடுக்கவும், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கவும் அனைவரும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.
ஊரடங்கில் வீட்டில் பொழுதை எப்படி கழிப்பது என்று தெரியவில்லையா? நமக்கு கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் காய்கறி தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைக்கலாமே!!
வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் தேவையானபோது காய்கறிகளை தோட்டத்தில் இருந்து பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். இது நம் அத்தியாவசிய செலவுகளை குறைத்து, நமக்கு லாபத்தையும் பெற்று தரும்.
முதலில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும். மாடியில் தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் மண் நிரப்புவதற்கான தொட்டிகளிலோ அல்லது சாக்கு பைகளிலோ செடிகளை வளர்க்கலாம்.
மாடித்தோட்டத்தில் செடி வைப்பதற்கு தேவையான மண்ணை உங்கள் நண்பரின் தோட்டத்திலோ அல்லது உங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலோ இருந்து சேகரித்து கொள்ளலாம். பின்னர் தோட்டத்தை எளிதாக அமைத்துவிடலாம்.
அதென்ன இவ்வளவு எளிதாக சொல்லிவிட்டீர்கள் என கேட்கிறீர்களா? நிஜம்தான்..!
செடி வளர்ப்பதற்கு தேவையான இடம், மண், நீர், விதை மட்டும் இருந்தாலே போதுமானது. பின்னர் செடி வளரும்போது அதற்கு தேவையான இயற்கை உரங்களை நாமே தயார் செய்து அளித்துவிடலாம்.
கீரை வகைகளை விளைவிக்க 1/2 அடி ஆழத்திற்கு மேல் மண் இருந்தால் போதுமானது. செடி வகைகளுக்கு 1 அடி ஆழத்திற்கு மேல் மண் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
கொடி வகைகளுக்கு 3 அடிக்கு மேலாக இருக்கும்படி பைகளில் மண்ணை எடுத்துக்கொள்ளவும்.
மண் போடும்போது அதோடு சம அளவு இயற்கையாக மக்கும் குப்பைகள் எதுவாயினும் மண்ணுடன் சேர்த்து கொள்ளலாம்.
குப்பைகளையும், மண்ணையும் நன்கு கலந்து பைகளில் இடவேண்டும். குப்பைகளுக்காக நீங்கள் எங்கும் தேடிப்போக வேண்டிய அவசியமில்லை.
உங்கள் வீட்டு அன்றாட குப்பைகளிலேயே மட்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள் மற்றும் வீட்டின் முன் உதிர்ந்துள்ள மர இலைகள் என எதுவாயினும் உபயோகித்து கொள்ளலாம்.
முதலில் நீங்கள் மண்ணை இடும்போது கால்நடைகளின் சாணம் கிடைத்தால் சேர்த்து கொள்ளலாம். அது செடிகளுக்கு நல்ல உரமாக இருக்கும்.
பின் நீங்கள் சேகரித்து வைத்துள்ள காய்கறி விதைகளை மண்ணில் ஊன்றி காலை, மாலை என தண்ணீர் ஊற்றி வளர்த்தால் போதும்!
அதன்பின் இயற்கை தன் விளையாட்டை ஆரம்பித்துவிடும். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உங்கள் வீடுகளில், உங்கள் மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த கீரை கூட்டாகவும், வெண்டைக்காய், புடலங்காய் குழம்பாகவும், தக்காளி பச்சடியாகவும் மணமணக்கும்.
தினமும் காலையில் எழுந்ததும் செடிகளை கண்டு அதனுடன் சிறிது நேரம் உறவாடுங்கள். இதனால் செடிகள் நன்றாக வளர்வதுடன் நம் மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.