விஞ்ஞானம் விளக்க முயலும் இந்த உலகத்தில் இன்று வரை தீர்க்கப்படவோ விளக்கம் சொல்லப்படவோ முடியாத விடயங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. அவ்வாறான விடயங்களுள் ஒன்றுதான் இருள் மந்திரங்கள் அல்லது சாபங்கள். ஒரு புத்தகம் முதல் கண்ணாடி , நகை, சீப்பு என நீங்கள் எதிர்பார்க்கமுடியாத எல்லா விடயங்களிலும் இவ்வாறன சாபங்களை பிரயோகிக்க முடியும் எனவும் அவ்வாறான பொருட்களை தன்னுடைய சபிக்கப்பட்ட / பேய்களால் ஆட்கொள்ளப்பட்ட பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றை நடத்தும் Zak Bagans என்பவர் தன்னுடைய அருங்காட்சியகத்தில் இருக்கும் இவ்வாறான பொருட்களில் மிக மோசமாக சபிக்கப்பட்ட பொருள் – Dybbuk பெட்டி எனவும் கூறுகிறார்.
Dybbuk பெட்டி
யூத கதைகளின் படி, dybbuk என்பது உயிர் வாழும் உடல்களை பயன்படுத்தி பயங்கரமான செயல்களை செய்யும் இருள் ஆவி ஒன்றாகும். இந்த ஆவி தீய செயல்கள் செய்யாமல் கட்டுப்படுத்த அதனை ஒரு பெட்டிக்குள் சிறை வைக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பெட்டி திறக்கப்படும் வரை,
பல வருடங்கள் முன்பு, இந்த புகைப்படத்தில் காட்டப்படும் dybbuk பெட்டி, eBayல் விற்பனைக்கு வருகின்றது. விற்பனையாளர், இந்தப் பெட்டியை இரண்டாம் உலகப் போரில் உயிர் பிழைத்த எஸ்டேட் பெண்மணி ஒருவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பழங்கால வைன் பெட்டி எனக் கூறி விற்கிறார். அந்த விற்பனையாளரான கெவின் மன்னிஸ், அதனைத் தான் வாங்கும்போது அந்த பெட்டியின் முதல் உரிமையாளரின் பேத்தி, அதில் dybbuk உள்ளதாக தன் பாட்டி சொன்னதாக கூறிப் பயத்தில் விற்றதை ஒப்புக்கொண்டார். அதனை வாங்கிய பின்னர் இவருக்கு அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் நடந்ததுடன் விகாரமான கிழவி தன்னை கொடூரமாக தாக்குவதாக கனவுகள் வந்ததாகவும் விழிக்கும்போது தன்னுடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறுகிறார். அது மட்டுமல்லாமல் பூனை சிறுநீர் கழித்த நாற்றம் போன்ற ஒரு நாற்றம் மிகவும் மோசமாக வீடு முழுக்க பரவியதாகவும், அதனைத் திறக்க முயற்சித்தபோது அவரது அன்னைக்கு பக்கவாதம் வந்ததாகவும் கூறுகிறார்.
அவரிடம் இருந்து இந்தப் பெட்டியை மிசோரியைச் சேர்ந்த மருத்துவ அருங்காட்சியகம் ஒன்றுக்கு விற்கப்பட்டது. அந்த இடத்தின் உரிமையாளர் Jason Haxton என்பவர் இந்தப் பெட்டியினுடைய சக்தியை ஆராய்வதற்காக அதனை வாங்கியுள்ளார். ஆனால் அவர் வெகு சீக்கிரத்திலேயே தன்னுடைய தீர்மானத்தை மாற்றிக் கொண்டார். அதனை வாங்கியதில் இருந்து, அவருடைய உடல் பல மருத்துவ சிக்கல்களை எதிர்நோக்கியது. கண்ணிலிருந்து இரத்தம் வழிய ஆரம்பித்துள்ளது. அதுபோதாதென்று உடல் முழுதும் வித்தியாசமான அரிப்புகள் உருவாகியுள்ளது. அவரும் விகாரமான கிழவி தன்னை கொடூரமாக தாக்குவதாக கனவுகள் வந்ததாகவும் விழிக்கும்போது தன்னுடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறுகிறார். அவருடைய வீட்டு அடித்தளத்தில் அந்தப் பெட்டி இருக்கும்போது, அங்கு ஒரு நபர் இறந்ததாகவும், அவருடைய உடல் பெட்டிக்கு அருகில் கிடந்ததாகவும் கூறுகிறார். பயந்துபோய் யூதகுருக்களை நாட அவர்கள் மரப் பேழையொன்றை வடிவமைத்து அதனை 24 கரட் தங்கத்தால் இழைத்து அதற்குள் பெட்டியை வைத்து மண்ணுக்குள் புதைக்க சொல்லியுள்ளனர்.
Jason Haxon உரிமையில் இருக்கும்போது அந்தப் பெட்டி திறக்கப்பட்டது. அவர் புதைத்த இடத்தில் இருந்து அந்த பெட்டியை எடுத்து Zak Bagans உடைய Deadly Possessions நிகழ்வில் வைத்து அந்தப் பெட்டி திறக்கப்பட்டது. Zak Bagans தெரிவிப்பதாவது, “ நான் அதனை ஒரு கட்டுப்பாட்டு அறைக்குள் வைத்து திறக்க ஆயத்தங்கள் செய்தேன். இதன் முன்னைய உரிமையாளர் kevin Mannis ஐயும் அழைத்து அவரது பயங்களை எதிர்கொள்ள செய்ய முடிவெடுத்தேன். அவர் அந்த பெட்டியை திறந்தபோது பொருட்கள் அப்படியே இருந்தன. அதில் ஒரு காய்ந்த ரோசா, 1920ன் இரண்டு நாணயங்கள், இரு கட்டு முடி, ஷப்பட் எனப்படும் ஒக்டோபஸ் காலாலான மெழுகுவர்த்தி தாங்கி மற்றும் “shalom” (சாந்தி) எனப் பொறிக்கப்பட்ட வேலைப்பாடு என்பன காணப்பட்டன.”
அவர் அந்தப் பெட்டியை திறந்தபோது, கட்டடத்தின் விளக்குகள் பளிச்சிட்டு அணைய ஆரம்பித்துள்ளதோடு வித்தியாசமான சப்தங்களும் கேட்டுள்ளது. கெவின் ஒரு சுவரைப் பார்த்து திரும்பினார். அவரது முகபாவங்கள் விகரமாயிருந்துள்ளதோடு, அவர் நிழல் மனிதன் பற்றிய கதையொன்றை சொல்ல ஆரம்பித்துள்ளார். அதன் பின் அவர் தாய்மொழிகளில் பேசத் தொடங்கியதோடு வித்தியாசமான விசில் சத்தங்களையும் எழுப்பியுள்ளார். அவருக்கு பயங்கரமாக வியர்த்ததோடு கட்டுப்பாடின்றி இருமவும் தொடங்கி இருக்கிறார்.
அவரிடம் இருந்து Zak Bagans அதனை வாங்கி தனது அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார். அவரது நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட,பொறுப்புத் துறப்பு பத்திரத்தில் ஒப்பமிட்ட நபர்கள் மட்டுமே அந்த அறையைப் பார்க்க விடப்படுவதாகவும் கூறுகிறார். அவர் கூறும்போது, “இது பார்வையில் இருந்த காலத்தில் பார்க்கவந்த பலர் மயங்கி விழுந்துள்ளனர், நோயுற்றுள்ளனர். சிலர் துணி அணிந்த ஒரு நிழல் உருவம் அந்தப் பெட்டி உள்ள அறையின் மூடப்பட்ட கதவுகள் வழியாக செல்வதனை அவதானித்துள்ளனர். என்னுடைய பயண வழிகாட்டியொருவருடைய தலையை ஏதோவொரு அறியாத சக்தி அந்தப் பெட்டி மீதி மோத வைத்தது.”
“2018ல் என்னுடைய நண்பரும் பாடகருமான post malone இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தந்தபோது இருவரும் அந்த அறைக்கு சென்றோம். இருவரும் ஒரே மாதிரி சிறுமியின் குரலைக் கேட்டோம். கொஞ்ச நேரத்துக்குப் பின் ஏதோ ஒரு சக்தி என்னை என்னவோ செய்தது. நான் அந்தப் பெட்டியை திறக்க வேண்டும். அதன் மீதுள்ள காப்பை கழற்ற வேண்டுமென என்னுள்ளம் துடித்தது. நான் கொஞ்ச நேரத்தில் ஏதோ ஒரு எண்ணத்தில் அந்த பெட்டியைத் தொட்டேன். தொட்டவுடன் நான் பயந்து கத்தவும் அலறவும் தொடங்கியதும் மோசமாக மூச்சு வாங்கியது, உடனே post என் தோளை தொட்டார். என் உடலுக்குள் ஏதோ சென்றதை உணர்ந்தேன். அதன் பின் பலரும் பார்த்த அந்த நிழல் உருவம் எங்களைப் பின் தொடர்வதாக கண்டதாக post சொன்னார்.”
“அடுத்த நாள் அவர் தனது இடது தோளில் ஒரு மர்மான சிராய்ப்பு உருவாகியிருப்பதை புகைப்படமெடுத்து அனுப்பினார். அதன் பின் அவரது தனி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது, கார் விபத்தில் சிக்கியது, வீடு ஆயததாரிகளால் தாக்கப்பட்டது. இதற்கெல்லாம் அந்த பெட்டியின் சாபம் காரணமாக இருக்கலாம்.”
“ஹலோவீன் 2018 இன் போது அந்த பெட்டியை நான் ஒரு நிகழ்வில் நேரலையாக திறக்க திட்டமிட்டேன். ஆனால் நடந்த இவ்வளவுக்கும் பிறகு நான் அதனை செய்ய விரும்பவில்லை. ஏனெனில் அதற்கு நாம் இப்பொழுது நேரலையில் உள்ளோம் என தெரியும். அது தன்னை தன விருப்பம்போலவே காட்டிக்கொள்ளும். அந்த இடத்தில் உள்ள சக்தி மிகப்பயங்கரமாக நிறைந்திருந்தது. அசம்பாவிதம் நடக்குமென உணர்ந்து நான் அதனை திறக்கவில்லை. அன்றைய இரவில் அங்கிருந்த பலருக்கும் சிக்கல் உருவாகப்போவதை நான் உணர்ந்தேன். அன்று அதனைத் திறந்தாள் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுமென எனக்குப் புரிந்தது. அன்று நேரலையில் பார்த்த எல்லோரும் பின்னாளில் பலவாறாக என்னைக் கேள்வி கேட்டனர். ஆனால் நான் சரியானதைத்தான் செய்தேன் என எனக்குத் தெரியும்” என்கிறார் அவர்.
இப்பொழுதும் அந்தப் பெட்டி அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. யாரேனும் அது பற்றி அறியவோ, உணரவோ விரும்பினால் சென்று பார்க்கலாம்.
இவ்வாறன தலைப்புக்கள் உங்களுக்கு பிடிக்குமா ? உலகின் பயங்கரமான இடங்கள் பற்றி பாருங்கள்
Image source : https://www.dummies.com/religion/spirituality/the-most-haunted-objects-in-the-world/