1600 களின் பிற்பகுதியில், மொரீஷியஸின் பசுமையான காடுகளில், கடைசி டோடோ பறவை அதன் கடைசி மூச்சை சுவாசித்தது. வெப்பமண்டல வளர்ச்சியில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இந்த இனம் அதன் அகால முடிவை மனிதர்களின் கைகளில் சந்தித்தது. மனிதர்கள் அத்தீவுக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருந்தனர். வேட்டை, வாழ்விட அழிவு மற்றும் ஆக்கிரமிப்பு உயிரினங்களை வெளியிடல் ஆகியவற்றில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வத்தால், மனிதர்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியைக் குறைத்து, இந்த பறவையை பூமியின் மேற்பரப்பிலிருந்து விரைவாக அகற்றினர்.
டோடோவின் அழிவு
அப்போதிருந்து, மனிதனால் நிகழ்த்தப்படும் அழிவின் முதல் முக்கிய எடுத்துக்காட்டாக டோடோ நம் மனசாட்சிகளுக்கு குற்ற உணர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எங்கள் குற்றங்களை மூடி மறைப்பதற்காக மனித இனம் டோடோ பறவையை பருத்த, சோம்பேறி மற்றும் முட்டாள் பறவை என பட்டம் கதை கட்டி அதன் விதியை மறைத்து விட்டது.
ஆனால் உண்மையில், நாங்கள் இதைவிட மோசமானவர்களாக இருந்துள்ளோம் என்று ஐக்கிய ராச்சியத்தில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு புவியியல் நிபுணரும் ஆராய்ச்சி கூட்டாளருமான ஜூலியன் ஹியூம் கூறினார். அழிந்துபோன உயிரினங்களின் புதைபடிவங்களை அவர் ஆய்வு செய்கிறார்.
மேலும் டோடோ மீது போடப்பட்ட பழிப்பெயரை சரிசெய்ய தனது தொழில் வாழ்க்கையின் ஒரு பகுதியை அர்ப்பணித்துள்ளார்.இறந்த டோடோவின் எலும்புக்கூட்டின் எச்சங்களை டிஜிட்டல் முறையில் மாடலிங் செய்வதன் மூலம், அவர் ஒரு 3D டிஜிட்டல் புனரமைப்பை உருவாக்கியுள்ளார். இது அப் பறவையினைப் பற்றிய முழுமையாக மாறுபட்ட விம்பத்தை காட்டுகிறது. இப்பறவை நம்பப்பட்டதை விட மிக வேகமானதாகவும், செயல்வேகம் கொண்டதாகவும் அதீத புத்திசாலியாகவும் இருந்துள்ளது. “பெரிய,கொழுத்த, பருமனான பறவை என்பதற்கான ஆதாரம் ஒன்றும் இல்லை. இந்த பறவை மொரீஷியஸின் சூழலுக்கு ஏற்றதாக இருந்தது” என்று ஹியூம் லைவ் சயின்ஸ் பக்கத்திடம் கூறியுள்ளார். அதற்கு பதிலாக, டோடோவின் அகால அழிவுக்கு பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளி மனிதர்களின் இடைவிடாத சுரண்டல் தான் என அவர் கூறுகிறார்.
காலப்பயணம் (Time Travelling) செய்வது சாத்தியமாகுமா ?
வேறு விலங்குகள்
ஆனால் நாங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். பொதுவாக நம்பப்பட்டவிஷயம் இதுவாக இருப்பினும், டோடோ உண்மையில் மனிதர்களால் அழிந்துபோன முதல் உயிரினம் அல்ல. உண்மையில், டோடோ மீது நாம் கண்களை வைப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மனிதம் உலகின் விலங்கினங்களை அழித்துக் கொண்டிருந்தது. “அந்த நிகழ்வுக்கு முன்னும் பின்னும் இன்னும் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று ஹியூம் கூறினார்.
ஆகவே, எல்லோரும் அறிந்த டோடோ நம்மால் அழிக்கப்பட்ட முதல் இனம் அல்ல என்றால், அதற்கு பதிலாக எந்த விலங்குக்கு இந்த வருத்தமளிக்கும் பட்டம் உள்ளது ?
மனிதனால் விலங்குகள் அழிக்கப்படுவதை நம் வரலாற்றில் ஒப்பீட்டளவில் சமீபத்திய போக்காக சிந்திக்கப் பழகிவிட்டோம். அதாவது மிகப் பழங்காலத்திலேயே மனிதர்கள் விளங்கி அழிக்க ஆரம்பித்து விட்டனர். ஆயினும்கூட, ஆராய்ச்சியாளர்கள் அந்த யோசனையை அகற்றும் உறுதியான பழங்காலவியல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
“மனிதர்களாகிய நாங்கள் குடியேறத் தொடங்கியபோதுதான் உண்மையான பிரச்சினை தொடங்கியது” என்று ஹியூம் கூறினார். அந்த தொடக்கப் புள்ளி இன்னும் விவாதத்தில் உள்ளது. ஆனால் மிக சமீபத்திய மதிப்பீடுகள்படி உலகெங்கிலும் பரவியுள்ள மனிதர்களின் நீடித்த குடியேறலுக்கு வழிவகுத்த இயக்கம், ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து , சுமார் 125,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமினிட்களுடன் (நியண்டர்டால்கள் மற்றும் பிற பண்டைய மனித உறவினர்கள், மற்றும் ஹோமோ சேபியன்கள்) தொடங்கியது. இங்குதான் சான்றுகள் சுவாரஸ்யமாகத் தொடங்குகின்றன.
மனிதர்கள் தங்கள் மூதாதையர் வீடுகளை விட்டு வெளியேறி, பின்வந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் யூரேசியா, ஓசியானியா, வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை குடியேற்றச் சென்றபோது, அந்த கண்டங்கள் முழுவதும் கிடைக்கும் புதைபடிவ பதிவுகள் பெரிய உடலுடைய விலங்குகள் அழிந்து வருவதற்கு இணையான வளர்ச்சியைக் காட்டுகிறது.
“[ஹோமினிட்கள்] ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியதால், இந்த நம்பமுடியாத அழிவு முறை வடிவத்தை நீங்கள் காண்கிறீர்கள்” என்று நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியலின் பேராசிரியர் ஃபெலிசா ஸ்மித் கூறினார், அவர் விலங்குகளின் உடல் அளவுகள் எவ்வாறு மாறிவிட்டன என்பதை ஆய்வு செய்கிறார். அவரும் அவரது சகாக்களும் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2018 ஆய்வில் விளக்கமளித்தபடி, ஒவ்வொரு முறையும் நம் முன்னோர்கள் புதிய இடங்களில் காலடி எடுத்து வைக்கும் போது, மிகப் பெரிய உயிரினங்களான தற்கால யானை மற்றும் கரடி முதலியவற்றின் முன்னோர்கள் 100 – 1000 வருடங்களுக்குள் முற்றிலும் அழிந்து போயுள்ளதை படிவுகள் காட்டுகின்றன. இத்தகைய விரைவான அழிவு நேர அளவுகள் கடந்த பல மில்லியன் ஆண்டுகளில் வேறு எந்த இடத்திலும் ஏற்படவில்லை (ஏவியன் அல்லாத டைனோசர்கள் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுகோள் மூலம் அழிக்கப்பட்டது தவிர). “மனிதர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ அங்கெல்லாம் அழிவுகள் இடம்பெற்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது ” என்று ஸ்மித் கூறினார்.
ஆரம்பத்தில் இழந்த அந்த உயிரினங்களில் சில இன்று பூமியில் சுற்றி வந்தால் அற்புதமான மிருகங்களைப் போல் தோன்றும். எடுத்துக்காட்டாக, “சிறிய பஸ்ஸின் அளவாக இருந்த கிளிப்டோடன் என்று அழைக்கப்படும் ஒரு எறும்புதின்னி அக்காலத்தில் இருந்துள்ளது” என்று ஸ்மித் லைவ் சயின்ஸிடம் கூறினார். சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த பனி யுகத்தின் முடிவில், அமெரிக்காவிலிருந்து பயங்கரமான தோற்றமுள்ள வாலைக் கொண்ட கிளிப்டோடன்கள் பல காணாமல் போனது அநேகமாக அங்கு இடம்பெற்ற மனிதர்களின் காலத்துக்கு முந்தைய குடியேற்றத்துடன் தொடர்புடையது. இன்று உள்ள கிரிஸ்லி கரடிகளை விட பல நூறு பவுண்டுகள் எடையுள்ள பிரம்மாண்டமான யூரேசிய குகை கரடிகளின் எண்ணிக்கை சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு சடுதியாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் தான் மனிதர்கள் அந்த இடம் முழுவதும் பரவத் தொடங்கினர்.
பெரிய விலங்குகள், குறிப்பாக, மனிதகுலத்தின் பரவலுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுவது ஏன்?
பெரிய மிருகங்கள்(Mega Fauna) குடியேறும் மனிதர்களுக்கு உணவாக அல்லது அச்சுறுத்தலாக இருந்துள்ளது. மேலும் என்னவென்றால், இதற்கு முன்பு மனிதர்களை சந்திக்காத விலங்குகள் இந்த விசித்திரமான புதுமுகங்கள் தங்களது நிலங்களுக்கு குடிபெயர்ந்ததைப் பற்றி அறிந்திருக்கவில்லை.இது அவற்றை தாக்குவதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கக்கூடும். மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யும் மற்ற சிறிய விலங்குகளைப் போலல்லாமல்,இவை மெதுவாக இனப்பெருக்கம் செய்பவை. எனவே மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது சிறிய கூட்டத்தையே கொண்டது, என ஹ்யூம் விளக்கினார். “எனவே நீங்கள் அவற்றின் பெரிய தொகையை அழித்துவிட்டால், அவை அதே அளவுக்கு சந்ததியை மீண்டும் உருவாக்க போதுமான அளவு இனப்பெருக்கம் செய்ய முடியாது. “
வேட்டையாடுதல் மட்டுமல்ல – மனிதனால் ஏற்படும் தீ பரவுவதும் வாழ்விடங்களை அழித்து விட்டிருக்கிறது. மேலும் உணவுக்காக மனிதர்களிடம் போட்டி அதிகரித்தது. உதாரணமாக, தான் பயன்படுத்தும் அதே தாவரவகைகளை பெரிதும் உண்டதற்காக குறுமுகக் கரடிகளை (11,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன 10 அடி உயர விலங்கு) மனிதன் அழித்துள்ளான். வேட்டையாடுதல் போன்ற மனித தாக்கங்களுடன் இணைந்த காலநிலை மாற்றம், சில பெரிய விலங்குகளுக்கு ஒரு ஆபத்தான கலவையாக நிரூபிக்கப்பட்டது. அதிலும் மிகவும் பிரபலமானது சுமார் 10,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன மம்மத் (ரஷ்யாவின் தீவுகளில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை உயிர் பிழைத்த குள்ள கம்பளி மம்மத் தவிர மற்றவை). “நீங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்மறையான மனித தாக்கத்துடன் இணைத்தால், அது ஒரு பேரழிவு” என்று ஹியூம் கூறினார்.
உண்மையில் முதன் முதலில் அழிந்து விலங்கு palaeomastodon, அல்லது stegodon எனப்படும் யானை வகையைச் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால், அது தொடர்பான விரிவான ஆய்வுகள் இன்னும் நடைபெறுகிறது என அவர் கூறினார்.
முகப்பு உதவி : reddit