கேள்வி : தினமும் சத்தான பேலன்ஸ்டு டயட் சாப்பிட்டு, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி வெளியில் எங்கும் அலையாமல் இருந்தால்கூட கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?
பதில் : சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் பிரவீன் ராஜ்.
நீங்கள் பின்பற்றுவதாகச் சொல்கிற பேலன்ஸ்டு டயட்டும், தனிமனித இடைவெளியும், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பதும் மிகச் சரியான விஷயங்களே. அவையெல்லாம் உங்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயத்தைப் பெரிய அளவில் தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவை உங்களுக்கு கொரோனா தொற்றே வராமல் காக்கும் என்று சொல்ல முடியாது.
கொரோனா தொற்று ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமலிருந்தாலும் உங்கள் வீட்டுக்கு வரும் வேலையாட்கள், டிரைவர், உங்கள் வீட்டிலிருந்து வெளியே சென்று வருவோர் என யார் மூலமாகவும் உங்களுக்குத் தொற்று பரவலாம். கொரோனா தொற்றுள்ளவர்கள் புழங்கிய இடங்களை, பொருள்களைத் தொடுவதால் அடுத்தவருக்குத் தொற்று பரவுமா என்பதும் இன்னும் சரியாக நிரூபிக்கப்படவில்லை.
பேலன்ஸ்டு டயட் என்பது உங்களுடைய நோய் எதிர்ப்பாற்றலுக்கு அவசியமானது. நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ளோருக்கு தொற்று வரும் வாய்ப்புகள் குறையும். அப்படியே வந்தாலும் அது தீவிரமாகாமல் இருக்கும். ஆனால் தடுப்பூசி என்பது நம் உடலின் ஆன்டிபாடி செல்களை அதிகப்படுத்தக்கூடியது. அதாவது கொரோனா தொற்றிலிருந்து பெரிய அளவுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடியது தடுப்பூசி மட்டுமே.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுவதோடு, சரிவிகித உணவு உட்கொள்வது, கூடவே தடுப்பூசி போட்டுக்கொள்வது என எல்லாம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்போது உங்களுக்குத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பாதுகாப்பாக இருப்பதாக உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு, தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்கவோ, தாமதிக்கவோ செய்யாதீர்கள்.
கேள்வி : ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான பின்னர் அவரிடமிருந்து மற்றொருவருக்கு அது பரவுமா?
பதில் : சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.
ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது என்றால் அந்த வைரஸ் அவர் உடலுக்குள் போய்விட்டது என்று அர்த்தம். அந்த வைரஸ் உள்ளே போய் தன்னால் முடிந்த அளவுக்கு அந்த உடலுக்குள் சேதங்களை ஏற்படுத்தப் பார்க்கும்.
சில நேரம், நம்முடைய இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் அந்த வைரஸ் நம் உடலைப் பெரிய அளவில் பாதிக்காமல் பாதுகாக்கும். அப்போது அந்த வைரஸ் செயலிழந்து போகும்.
செயலிழந்த அந்த வைரஸ் உடலைவிட்டு வெளியே வரவோ, அடுத்தவருக்குத் தொற்றவோ வாய்ப்புகள் கிடையாது. ஆனால் வைரஸ் உடலுக்குள் புகுந்த முதல் ஐந்து- ஆறு நாள்களான இன்ஃபெக்டிவ் ஸ்டேஜ் எனப்படும் காலத்தில் தொற்று பாதித்தவரிடமிருந்து இன்னொருவருக்கும் அது பரவும்.
ஆனால் தொற்றுக்குள்ளான நபர் முழுமையான சிகிச்சையின் மூலம் குணமான பிறகு அவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவுவது அரிதினும் அரிது. ஒருவேளை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அதை வெளியே சொல்லாமல், க்வாரன்டீனில் இல்லாமல், அறிகுறிகளை அலட்சியப்படுத்தியும், மாஸ்க் அணிவது உள்ளிட்ட முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமலும் இருந்தால் அவர் மூலம் மற்றவர்களுக்கும் பரவும்.
தொற்று வந்து சிகிச்சை எடுப்பவர்கள் இரண்டு வாரங்களுக்கு க்வாரன்டீனில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவரிடமிருந்து அவரின் குடும்ப நபர்கள் உள்ளிட்ட யாருக்கும் தொற்று பரவாமலிருக்கும்”.
உணவின் மூலம் கொரோனா தொற்று பரவுமா?
கேள்வி :உணவின் மூலம் கொரோனா தொற்று பரவுமா? ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது ஆபத்தானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் அப்துல் கஃபூர்.
உணவின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று நிச்சயம் பரவாது. அது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளித் திவலைகள், சுவாசப்பாதை திவலைகளின் மூலம் மட்டுமே பரவும். சமீபத்திய லான்செட் கட்டுரையில் கொரோனா வைரஸானது காற்றின் மூலமும் பரவும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆன்லைனில் ஆர்டர் செய்தோ, வெளியிடங்களில் உணவு பார்சல் வாங்கும்போதோ அதற்கு முன்பும் பிறகும் கைகளை சானிடைஸ் செய்துவிடுங்கள். கைகளை அடிக்கடி சானிடைஸ் செய்தோ சோப்பு போட்டுக் கழுவியோ சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வாக்சின் பாஸ்போர்ட் அவசியம்தானா?
- தகவல் உதவி :
- மருத்துவர் பிரவீன் ராஜ்
- மருத்துவர் சஃபி
- மருத்துவர் அப்துல் கஃபூர்.