இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
நோய் தாக்கம் காரணமாக ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதித்துள்ளன. வீட்டிலிருந்தே வேலை செய்வது ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல சலிப்பை ஏற்படுத்தும்.
நமது குடும்ப உறுப்பினர்கள் வழக்கமாக பேசுவதைப் போல பேசித் தொல்லை கொடுப்பார்கள். குழந்தைகள் வேலை செய்யும்போது நமது மடியில் அமர்ந்து கவனத்தை திசை திருப்பும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒலி, வேலைக்குப் போகும்போது நாம் கடைபிடித்த உணவு நேரங்கள் எல்லாம் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது மாறிவிடும்.
பெரியவர்கள் சொல்வார்கள், சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றி கொள்ள வேண்டும் என்று. அதுபோல் தான் இதுவும். தற்போது வொர்க் ப்ரம் ஹோம்மிற்கு காரணம் நோய் தாக்கமே. இதை நாம் புரிந்து கொண்டு வீட்டில் இருந்து கொண்டு எளிதாக வேலை பார்க்க நம்மை நாம் தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
உங்களின் வழக்கத்தை விட்டுவிடாதீர்கள்
வீட்டிலிருந்து தானே வேலை செய்கிறோம் என்றில்லாமல், அலுவலகம் செல்லும்போது நீங்கள் கடைபிடிக்கும் பழக்கங்களை விட்டுவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, காலை உணவை சாப்பிட்டு விட்டு வேலையை தொடங்கினால் மனம் புத்துணர்வுடன் இருக்கும். வீட்டில் தானே இருக்கிறோம் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்று இருக்க வேண்டாம்.
இடம் ஒதுக்குங்கள்
வீட்டில் நீங்கள் வேலை செய்வதற்கான தனியொரு இடத்தை ஒதுக்குங்கள். உங்களுக்கான இடத்தில் வேலை செய்வதால் உங்களின் எண்ணம் வேலையில் மட்டுமே இருக்கும். சிலர் படுக்கையில் படுத்து கொண்டு வேலை செய்வார்கள். சிலர் லேப்டாப்பை மடியில் வைத்து கொண்டு வேலை செய்வார்கள். சிலர் தரையில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வார்கள். இது உங்களுக்கு சௌகர்யமாக இருந்தாலும், சில மணி நேரத்தில் சலிப்பை கொடுத்துவிடும். இதுவே, உங்களுக்கான இடத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேலை செய்யும் போது அலுவலகத்தில் வேலை செய்வது போன்று உணர்வை தரும்.
வேலையை தொடங்கும் முன் திட்டமிடுங்கள்
முதலில் இன்று என்ன என்ன வேலைகளை செய்ய வேண்டும் என்று திட்டமிடுங்கள். எதை முதலில் செய்வது, எதை அடுத்து செய்வது என்பதை திட்டமிட்டு செய்யுங்கள். யாரோடு எல்லாம் இன்றைக்கு தொலைபேசியில் பேச வேண்டும்? சக பணியாளர்களுடன் அல்லது வாடிக்கையாளர்களுடன் என்னென்ன விஷயங்களை பேச வேண்டும்? என்பதை நாளின் தொடக்கத்திலேயே திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் தொடர்பில் இருங்கள்
ஒரு நாளின் தொடக்கம் முதல் அன்றைய வேலை முடியும் வரை எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை உடனே எடுத்து பேச வேண்டும். இ மெயில்களை உடனுக்குடன் பார்க்க வேண்டும்.
இடைவெளி எடுங்கள்
அலுவலகத்தில் வேலை செய்யும்போது டீ டைம், லஞ்ச் டைம் என இடைவெளிகள் இருக்கும். ஆனால், வீட்டில் நாமாக இடைவெளியை எடுத்து கொள்ள வேண்டும். முழுநேரமும் லேப்டாப் அல்லது கணினியை பார்க்காமல் கண்களுக்கும், மூளைக்கும் சிறிது ஓய்வை கொடுங்கள்.
அலுவலக நேரத்தை பின்பற்றலாமே
தனியாக வேலை செய்வதால், வேலையில் முழுநேரமும் நாட்டம் இருப்பது குறைவதுதான். இதை நீங்கள் மாற்றியமைக்க உங்களின் அலுவலக நேரத்தை பின்பற்றிடுங்கள். அலுவலகத்தில் எத்தனை மணிநேரம் வேலை செய்கிறோமோ அதுபோன்று வீட்டிலும் வேலை செய்ய வேண்டும். ஒரு சிலருக்கும் அலுவலகமே நேரத்தை விதித்திருக்கும். அலுவலக நேரத்திற்குள் வேலையை முடித்து விட்டு அலுவலகத்தில் எப்படி கிளம்புவீர்களோ, அதேபோன்று நாற்காலியை விட்டு எழுந்திடுங்கள்.