இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.
மார்கழி மாதம் அதிகாலையில் கோலம் போடுவது ஏன்?
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் சிறப்புகளுடன் விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம். அதில் மார்கழி மாதம் பக்தி மணம் நிறைந்த மாதமாகும்.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப் பொழுதாகவும் அமையும். அப்படி பார்க்கும் போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில் தான் வருகிறது. தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாக இருப்பதால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்ததாகிறது.
இந்த ஒரு மாதம் தினமும் விடியற்காலை ஆலயத்திற்கு சென்றால் வருடம் முழுவதும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். எல்லா நாளும், எல்லா மாதங்களும் கோலம் போடுவோம். ஆனால், மார்கழி என்றால் தனிச் சிறப்பு. இறைவனை தொழுவதற்காக சிறந்த மாதமாக இதை கூறுகிறார்கள்.
வாழ்நாளை வீணாக்காமல் எங்கும் நிறைந்த இறைவனை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரப்போகும் துன்பங்களும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்துவிடும்.
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கை, கால்களை அசைத்து இடுப்பை வளைத்து வாசல் தெளித்து கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம்(கதிரவன்) கிடைக்கிறது. அதிகாலை நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.
வான்வெளியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும், ஆசிகளும் கிடைக்கும். நல்ல காற்று, ஓசோன் வாயு கிடைக்கிறது. ஒளி வடிவமான இறைவனை வணங்கும்போது ஒளி ஆற்றல் கிடைக்கிறது. கோவிலை வலம் வரும்போது நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.
அக்காலத்தில் அரிசி மாவால்தான் வீட்டின் முற்றத்தில் பலவகை கோலம் போடுவார்கள். கோலங்கள் தீயசக்திகளை வீட்டினுள் வருவதை தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பித்துருக்கள் வீட்டினுள் வருவதற்கு ஏதுவாகவும், அவர்களிடம் ஆசிபெற ஏதுவாகவும் அமாவாசை, சிரார்த்த தினங்களில் வீட்டில் கோலம் இடாத வழக்கமும் உண்டு.
ஊருக்கு முன் வாசல் தெளித்து கோலம் போடு, இருள் பிரியும் முன் கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன் கோலம் போடு என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். யாராவது வீட்டை விட்டு அதிகாலையில் வெளியில் செல்வதாய் இருந்தால் அவர்கள் செல்வதற்கு முன் வாசல் தெளித்துக் கோலம் போடு, அவர்கள் சென்றபின் தெளிக்காதே என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவார்கள். கோலங்கள் வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பு தரும்.
கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மன ஒருமைப்பாடு இருந்தால்தான் புள்ளிகளை சரியாக இணைத்து கோலம் போடமுடியும். நம் மனதை பிரதிபலிப்பதுதான் கோலம்.
மார்கழி மாதத்தின் சிறப்பு.. தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெற விஷ்ணுவை வழிபட தவறாதீர்கள்
தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் மட்டுமே இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும்தான் மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.
மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். ஏனென்றால் இந்த மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்தில் எந்தவித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.
ஆலயங்களில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனைகள் நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவையும் பாடப்படும். மார்கழி மாதம் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் தரப்படும் மாதமாக போற்றப்படுகிறது.
மார்கழி மாதத்தில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறலாம். இந்த மாதத்தில் இருக்கும் விரதங்களின் பலன்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
மார்கழி மாதத்தில் விரதம் இருப்பவர்களுக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி இலாபம் பெருகும். இதனால் தான் மார்கழி மாத நோன்பு மிகவும் சிறந்தது என்று முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
இந்த மாதத்தில் விரதம் இருக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, வாசலில் கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடினாலே பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மார்கழி மாத காற்று சருமத்திற்கும், வெள்ளை, சிவப்பு உயிர் அணுக்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இதை விஞ்ஞான பூர்வமாக அறிவியல் ஆராய்ச்சியும் உண்மை என்று ஆராய்ந்துள்ளது.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!
பொருள் : இனிதே துவங்கி இருக்கின்ற மார்கழி மாதத்தில் முழு நிலவு ஒளி வீச துவங்கிவிட்டது. பல வளங்கள் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் எழில்மிகு மங்கையர்களே! வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்களை சூடிய கன்னியர்களே! எழுந்திருங்கள். நம்மை பாதுகாக்கும் அரிய தொழிலை செய்பவரும், கரங்களில் கூறிய வேலினை ஏந்திய நந்தகோபன் மற்றும் அழகிய விழிகளை உடைய யசோதாபிராட்டியாரின் வீரம் நிறைந்த சிங்கம் போன்ற கம்பீரமான தோற்றம் கொண்ட அவர்களுடைய புதல்வனும், கார்முகில் நிறங்களை உடையவனும், சேய் நிற விழிகளை கொண்டவனும், ஆதவனை போன்ற பிரகாசமான ஒளிகளை உடைய திருமுகத்திற்கு சொந்தக்காரரும், நாராயணனின் அம்சமுமாக இருக்கக்கூடிய கண்ணபிரான் நமக்கு அருள்புரிவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார். அவரை போற்றி புகழ்ந்தால் இவ்வையோர் யாவும் நம்மை வாழ்த்துவர்.