அமெரிக்காவின் பாதுகாப்பு துறையான பெண்டகன் ஆனது யூ.எஃ.ஓ எனப்படுகின்ற இனம் காணப்படாத விண்வெளி பொருள் ஒன்று பறப்பதற்கான வீடியோக்களை வெளியிட்டுள்ளது. ஏலியன்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக நாம் பயப்பட வேண்டிய தருணம் இதுதானா ? ஆனால் பென்டகன் ஆனது இதனை யூஃப்ஓ அல்ல எனவும் யூ பீ ஏ அதாவது இனங்கான படாத வான்வெளி நிகழ்வு எனவும் வெளிப்படுத்தியிருக்கிறது.
இவர்கள் எப்போது வந்தனர் ?
உண்மையிலேயே பென்டகன் வெளியிட்டுள்ளதாக அறிவித்து இருக்கின்ற இந்த வீடியோக்கள் இந்த உலகத்துக்குப் புதிதானவை அல்ல. 2004 ஆம் ஆண்டு கடற்படையினரால் எடுக்கப்பட்ட இந்த செங்கீழ் கதிர்களால் ஆன கருப்பு வெள்ளை வீடியோ 2014 ஆம் ஆண்டு ஒரு குறித்த தனியார் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. அந்த வீடியோவில் இருக்கின்ற விடயமும் அது தொடர்பான கதைகளும் உண்மை என்பதனையே கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி 2020 அன்று பென்டகன் உறுதி செய்தது.
கதை என்ன ?
2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி அமெரிக்காவினுடைய கடற்படையினர், தமது நிமிட்ஸ் யுத்த தாங்கிக் கப்பல் குழுவினருடன் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம் அது. அப்பொழுது திடீரென்று ரேடார் சிக்னலில் எட்டு வான் பொருட்கள் ஒரே நேரத்தில் பறந்து வருவதாக அதுவும் ஒரே ஒழுங்கில் பறப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அது என்னவென்று பார்ப்பதற்கு அதனை நோக்கி இரண்டு விமானங்கள் சென்றன. அந்த குறித்த வான் பொருட்களுக்கு அண்மையில் சென்றால் அங்கு இருந்தது ஒரே ஒரு பொருள்தான். அதுக்கு அருகில் இவர்கள் சிறிது சிறிதாக செல்ல ஆரம்பித்தவுடன் திடீரென வேகத்தை அதிகரித்து மறைந்துவிடுகிறது.
இதனால் அனைத்து விமானங்களும் வந்து தங்களை மீண்டும் கப்பலில் நிலைநிறுத்தியது. பின்பு மீண்டும் அந்த பொருள் இருப்பதாக கண்டறியப்படுகிறது. வானில் அப்பொழுது சுற்றி பயிற்சி செய்து கொண்டிருந்த இரண்டு விமானங்களுக்கு உடனே அறிவிக்கப்படுகிறது. அந்த இரண்டு ஹோர்நெட் ரக விமானங்களும் குறிப்பிட்ட பொருளை துரத்தி செல்கின்றன. அவை அண்மிக்க அண்மிக்க அது மீண்டும் முன்பு போலவே அதிக வேகத்தில் காணாமல் போய்விடுகிறது.
கண்டிப்பாக இவை UFO தானா ?
இவை வேறு விமான பொருட்களாக அல்லது பயிற்சி டிரான்களாகவும் இருக்க முடியாதா என்று கேட்கிறார்கள். அவற்றை உறுதி செய்ய முடியாத நிலையை நமக்கு கொடுப்பது சில காரணிகள்.
1. அந்த பறக்கும் பொருளானது ஓவல் வடிவத்தில் அதாவது ஒரு முட்டையின் வடிவத்தில் இருக்கிறது.
2. அதற்கு செங்கீழ் கதிர்களைப் பயன்படுத்தி பார்க்கும்பொழுது எந்த ஒரு எரிபொருள் தகனமோ அல்லது உந்து சக்தியை கொடுப்பதற்காக புவியில் பயன்படுத்தப்படும் எந்த ஒரு எரிபொருள் முறையும் இல்லை என்பது தெரிய வருகிறது.
3. ஹார்ர்நெட் விமானிகள் அண்மித்த உடனேயே அவை அவற்றிலிருந்து விலகி செல்கின்ற வேகமானது மணித்தியாலத்துக்கு 42,000 மைல்கள் அதாவது ஒரு மணித்தியாலத்துக்கு 86 ஆயிரம் கிலோமீட்டர்கள் என்கின்ற வேகத்தில் பறந்து உள்ளன. புவியில் உள்ள எந்த ஒரு பொருளும் இந்த அளவு வேகத்தில் பறந்தால் காற்றுக்கு வெப்பமாகி முழுமையாக எரிந்து சாம்பலாகிப் போய்விடும்.
4. இரண்டாவது முறை கண்ட பொழுது கடல் மட்டத்துக்கு அருகில் கிட்டத்தட்ட 0 என்கின்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்து இருக்கிறது அந்த வித்தியாசமான பொருள். அந்த அளவு மெதுவாக ஒரு பொருளானது கடல் மட்டத்தில் இருந்து சில அடிகள் உயரத்தில் பறந்தால் நிச்சயமாக சமநிலை இன்று கீழே விழுந்து விடும் ஆனால் இது மிகவும் மெதுவாகவும் திடமாகவும் பறந்து கொண்டிருந்தது. இந்த முறை ஹார்நெட் விமானங்களை கண்டவுடன் அந்த பொருளானது, இரண்டு செக்கன்களில் கீழிருந்து மேலாக மணித்தியாலத்துக்கு 12000 மைல்கள் என்ற வேகத்தில் மேலெழுந்து உள்ளது. நிச்சயமாக இவ்வளவு பலமான ஒரு பொருள் பூமியில் இதுவரை பயன்படுத்தப்படவில்லை.
UFO இல்லை என சொல்ல வாய்ப்புண்டா ?
சிலர் கூறுகின்ற கருத்துப்படி விமானமானது பறக்கின்ற கோணத்தை சிறிதளவு மாற்றி எதிர் திசையில் வேகமாக பறந்து செல்லும் பொழுது அது இவ்வாறான வேகத்தில் தூரமாக விலகிச் செல்வது போன்ற மாயத்தோற்றம் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் கண்டுபிடிக்கமுடியாது உருண்டை வடிவத்தில் நீருக்குள் பயணித்துக் கொண்டிருந்தது விமானத்தின் நீர்மூழ்கி கப்பல் தொகுதி ஆகவே இருக்கலாம் என்றும் கூட கூறுகிறார்கள்.
ஆனாலும் இவையெல்லாம் நாம் ஏற்றுக் கொள்வதற்கு கடினமான அல்லது நூற்றில் தசம் ஒரு சதவீத வாய்ப்புள்ள விடயங்களாகவே இருக்கின்றன.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெரிய பிரபஞ்சத்திலே நிச்சயமாக நாம் மட்டுமே அபிவிருத்தி அடைந்த உயிரினங்களாக வாழ வாய்ப்பில்லை. ஆகவே ஏலியன்கள் இருப்பது உண்மையாக இருக்கலாம். அவர்கள் நம்மை விட அதிக தொழில்நுட்பங்களை கொண்டவர்களாக கூட இருக்கலாம். இதைப் பற்றி எந்த ஒரு தகவலும் நமக்கு நேரடியான அடுத்த தொடர்பாடல் கிடைக்கும் பொழுது உறுதி செய்ய முடியும்.
image source:http://www.dailynews.lk/2020/04/29/world/217426/pentagon-releases-%E2%80%9Cufo%E2%80%9D-videos