கடந்த வாரம் சித்தர்களின் வாழ்வுதான் சிறந்ததா ? அவர்களின் வாழ்க்கைமுறை எவ்வாறானது என்பது சந்தேகங்களை தீர்த்து வைக்கும் கட்டுரைக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி.இந்த வாரமும் இலங்கை சித்தர் பீடத்தைச் சேர்ந்த யோகி காகபுஜண்டர் கோபிநாத் அவர்கள் பகிர்ந்த பதிவினை அவர்களது அனுமதியுடன் வெளியிடுகிறோம்.
இந்த வாரக் கட்டுரையில் சித்தர்கள் பற்றிய கேள்விகளும் பதில்களும்
கேள்விகளும் பதில்களும்
சித்தர்கள் என்பவர் யாவர்?
சித்தர்கள் இந்த பிரபஞ்ச குடிமகன்கள். அக்காலத்திய அறிவியலார். அன்பின் அடிப்படையில் இன்பமாக வாழும் மகத்தான நெறிமுறைகளை மனித இனத்துக்கு வகுத்துக் கொடுத்தவர்கள். மனித பிறவியின் குறிக்கோளைச் சொல்லி அதை அடையும் முறையையும் சொன்னவர்கள். மனிதன் இந்த உலகில் இரண்டு வகை இன்பம் பெறவேண்டும். ஒன்று உலக வாழ்வில் பெரும் சிற்றின்பம். மற்ற ஒன்று இறைவனை தன்னுள் கண்டு அடையும் பேரின்பம் இரண்டு இன்பங்களையும் பெறும் அறிவியல் தொழில் நுட்பம் சொன்னார்கள்.
அந்த வழிமுறைகளில் வெற்றி பெறுவதைச் சித்தி என்றார்கள். அவ்விதம் வெற்றி பெற்றவரைச் சித்தர் என்றார்கள். இந்த வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் கல்வியைச் சித்தர் கல்வி என்றார்கள். இந்த கல்வியைச் சொல்லி கொடுப்பவரை யோக குரு அல்லது ஞானகுரு என்றனர், இந்த சித்தர்கள் அறிவியல் நிகழ்வாகச் செய்ததை அமானுஷ்ய சக்தி என்றும் அற்புதங்கள் என்றும் சாதாரண மனிதர்கள் நினைத்தனர்.
மனிதன் சிற்றின்பமும் பேரின்பமும் பெற அடையவேண்டிய சித்திகள் நான்கு.
நான்கு சித்திகள்
- காயசித்தி
நோய்கள் நீங்கப்பெற்று, ஆரோக்கியமான, இளமையான நீண்ட ஆயுள் உள்ள மரணம் இல்லாத உடல் பெறுதல். இத்தகைய உடலே சிற்றின்பம மற்றும் பேரின்பம் அனுபவிக்கத் தகுதி வாய்ந்தது . - வேதை சித்தி
அறிவியல் முறையில் ஒரு பொருளை வேறு பொருளாக மதிப்பு மிக்கதாக மாற்றுதல், உலக ஆதாயம் பெறுதல், தொழில்வெற்றி, பாசானங்களை மருந்தாக மாற்றுதல் . தீராத நோய்கள் தீர்த்து காய சித்திக்கு உதவுதல். - யோகசித்தி
யோகா என்றால் இணைத்தல். இல்லறவாழ்வில் இணைந்து உலக இன்பம் பெறுதல், இறைவனுடன் இணைந்து பேரின்பம் பெறுதல் ஆகிய இரண்டுக்கும் அடிப்படையானது. யோகசித்தி பெற்றால் யோகி. யோகியே உயர்நிலை யோகம் செய்து சித்தர் ஆவார். சித்தரே ஞான சித்தி பெறமுடியும். - ஞானசித்தி
இறைவனை தன்னுள் ஓளியாகக் கண்டு இறைவனுடன் இணைதல். அதில் கிடைக்கும் பேரின்பத்தை அனுபவித்தல். இதுவே முக்தி. முக்தி பெற்ற சித்தர்கள் ஞானிகள்.
பேரின்பப் பாதை
நான்கு படிகளைக் கொண்டது
- சரியை
இறைவனை வணங்குதல், போற்றுதல், பாடல், வேண்டுதல். பூஜை செய்தல். - கிரியை
இறைவனை வேள்விகள், சடங்குகள் செய்து பூசித்தல் - யோகம்
வாசியோகம் முதலிய வழிகளில் இறைவனைத் தன்னுள் ஒளியாகக் காணுதல் - ஞானம்
இறைவனைக் கண்டு இறைவனுடன் ஒன்றுதல்.
சரியை கிரியை பக்தி மார்க்கம். இதை பக்தி யோகம் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இது யோகமார்க்கம் இல்லை. யோகமும் ஞானமும் யோக மார்க்கம்.
யோக மார்க்கத்தில் சித்தி அல்லது வெற்றி பெற்றவர் சித்தர்கள்.
சித்தர்கள் செய்ததை அறிந்தால் சித்தர்களை நன்கு புரிந்துகொள்ள முடியும்.
சித்தர்களின் சக்தி
- படைத்தல், காத்தல், அழித்தல் , மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் செய்பவர்கள்.
- இறவா நிலை பெற்று ஒளி உடலுடன் வாழ்பவர்கள்.
- சிலர் துரிய தியான நிலையில் இருப்பவர்கள்.
- சமூக சீர்திருத்தவாதிகள், அறிவியலார், இறைவனோடு ஒன்ற அஷ்டாங்க யோகம் என்ற வாசி யோகம் சொன்னவர்கள் .
- இது சித்தர்கள் செய்த யோகம் சித்தர் யோகம் மற்றும் சிவயோகம் (இது வாசி யோகத்தின் உயர் நிலை)
- சித்த மருத்துவம் என்ற மருத்துவ முறை நிறுவியவர்கள்.
- மனிதன் இறந்து போகாமல் நோய் இல்லாமல் இளமையுடன் வாழும் சாகாக்கலை எனும் அறிவியலை உலகிற்கு கொடுத்தவர்கள்.
- அதில் இன்றைய மருத்துவ அறிவியல் முன்னேற்றமான ஸ்டெம் செல் தியரி பற்றி சொன்னவர்கள் .
- கேன்சர், எயிட்ஸ் போன்ற தீரா நோய்களுக்கு மருத்துவ முறை சொன்னவர்கள்.
- எல்லை அற்ற கருணை மிக்கவர்கள் . வேண்டியதை தரும் வல்லமை மிக்கவர்கள்
- பிரபஞ்ச பயணியாக பிரபஞ்சத்தை சுற்றி வந்தவர்கள். பிறகோள்களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை சொன்னவர்கள்.
- காலப்பயணம் செய்தவர்கள்
- அல்கெமி என்ற ரசவாதம் சொன்னவர்கள்
- அஷ்டமா சிக்தி என்ற அதீத எட்டுவகை சக்திகள் பெற்றவர்கள் .
- பத்து அறிவுகள் பெற்றவர்கள்
- அறுபத்து நான்கு வகை சித்திகள் பெற்றவர்கள்.
எப்படி சித்தர் ஆகிறார்கள் ?
சாதாரண மனிதர்கள் சித்தர் கல்வி கற்று வாசி யோகம் செய்து சித்தி பெற்று அதன் பின் 10 ஆண்டுகள் சிவயோகம் என்ற தச தீச்சை செய்து சித்திபெற்று சித்தர் ஆகிறார்கள் .
சித்தர்கள் எந்த வடிவில் உள்ளார்கள் ?
- மனித உடலுடன் மனிதர்களாக வாழ்பவர்கள் . மக்களோடு மக்களாக வாழ்பவர் . சிலர் குகைகளில் வாழ்பவர் .
இவர்கள் தனது மூச்சு காற்றை அதன் வழியில் இயக்காமல் மூச்சு காற்றை தனது விருப்பம் போல் இயக்குபவர்கள் . இது அவர்களை அடையாளப்படுத்தும் .
- துரிய தியானத்தில் சமாதி நிலையில் இருப்பவர்கள் .இவர்களுள் இரண்டு வகை உண்டு . முதல் வகை சமாதி செல்பவர் .போகர் : இவர் முதல் சமாதி பழனி யில் உள்ளது இவர் சமாதியில் இருந்து வெளியே வந்து அருள் பாலிப்பதாக கோரக்கர் சந்திர ரேகை என்ற நூலில் சொல்கிறார்.
ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் 1000 ஆண்டுகளாக துரிய தியானியில் இருக்கிறார் . இத்தகைய சித்தர் சமாதியில் இருந்து மீண்டு வந்து மக்களுக்கு அருள் புரிவார் . இரண்டாம் வகை சமாதி செல்பவர் மீண்டு வராமல் சமாதியில் இருந்து அருள் பாலிப்பவர் சுந்த்தரா ஆனந்தர் மதுரையில் முதல் சமாதி ஆகி பின்பு பட்டமங்கலத்தில் இரண்டாம் சமாதி ஆகி சமாதியில் இருந்து அருள் செய்கிறார். - இறைவனுடன் ஒன்றி ஒளிவுடம்பு பெற்றவர்கள் .
இவர்கள் ஒளி வடிவில் தரிசனம் தருபவர்கள் திருமூலர், காக புசுண்டர் , அகத்தியர் ஆகியவர்கள் இத்தகைய சித்தர்கள்.
சித்தர்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா ?
பேச முடியுமா? முடியும்.
3 வழிகள்
வழி1: தியான நிலை தொடர்பு
சித்தர்கள் இருக்கும் நிலையான துரிய தியான நிலைக்கு நம்மை தயார் செய்யவேண்டும் . அகத்தியர் ஞானம் 30 இதுபற்றி சொல்கிறது. காகபுசுண்டர் வாசியோகத்தில் ஒளிகண்டால் அந்த ஒளியில் (ஒளி உடலுடன் ) இருக்கும் சித்தர்களில் நானும் ஒருவன் உன்னை காண காத்திருப்பேன் என்கிறார் பாடல் 522 மற்றும் 523 ல்
(துரியதியானம்)
வழி2: கனவு நிலையில் தொடர்பு .
இரவு துங்கும் முன் சித்தர்களை வணங்கி தியானம் செய்து நீங்கள் கேட்கவேண்டியத்தை கேட்டு தூங்குங்கள். இரவு கனவில் பதில் சொல்லுவார்கள் . அல்லது காலையில் விடை கிடைக்கும் .
வழி 3: நூல்கள் வழி தொடர்பு
சித்தர் நூல்களில் உங்களுக்கு உத்தரவு அல்லது வழி சொல்லி இருப்பார்கள் . நீங்கள் படிக்கும் போது உங்களுக்கு மட்டும் தெரியும்.
சித்தர்கள் எப்படி இருப்பார்கள் ?
சித்தர் என்பரின் இலக்கணம் என்ன?
அடையாளம் காண்பது எப்படி?
நாம் வாழ்க்கையில் இப்போது காணும் வித்தியாசமான மனிதர்கள் அனைவரையும் அதாவது சாக்கடை குடிப்பவர், மிளகாய் தண்ணீர் குடிப்பவர், சுருட்டு பிடிப்பவர், அழுக்கு மூட்டை தூக்கிகொண்டு திரிபவர் இவர்கள் எல்லோரையும் சித்தர்கள் என அழைக்க பழகிவிட்டோம். உண்மையில் சித்தர்கள் என்பவர் யார் அவர்களுடைய இலக்கணம் என்ன என்பது பற்றி சித்தர்களே அவர்களின் நூல்களில் பல இடங்களில் விளக்கி கூறியுள்ளார்கள் அதனை முழுமையாக புரிந்துகொண்டால் நாம் காணும் நடைமுறைக்கு வித்தியாசமான மனிதர்கள் அனைவரும் சித்தர்கள் இல்லை என்பது தெளிவாக புரியும்.
குறிப்பு : கீழ்வரும் பாடல் நூல்களை முழுமையாக மக்கள் வாசித்து பயன்பெற வேண்டுமென்பது யோகி அவர்களின் விருப்பம்.
நூல்களின் இணைப்புகள் அவற்றின் பெயரோடு வழங்கப்பட்டுள்ளன. பெயரின் மீது அழுத்துவதன் மூலம் அவற்றை வாசிக்கலாம்.
வாசியோகம் செய்து சித்தி அடைந்து கை தொடாமல் வாசியை நினைத்தபடியெல்லாம் இயக்க வல்லமை பெற்ற வாசியோகியர்,நஞ்சாகிய சிவகல்பம் உண்டு சிவயோகம் செய்து அதில் தசதீட்சைகளும் முடித்து வெற்றி பெறுபவரே சித்தர்(ஞானி) தகுதி பெறுவார்கள். அப்படி சித்தர் தகுதி பெற்றவர்கள் வாலை ஒளியை நித்தம் நித்தம் தரிசித்து வாலை பூஜை செய்வார்கள். இவை அனைத்தும் செய்யும் வல்லமை உடையவர்களே சித்தர் ஆவார்.
அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி : பாடல் 217,218
சாகாமல் இருப்பேன் என திடமான மன உறுதியோடு இருந்து யோகம் செய்து, எல்லா விதமான சாத்திரங்களும் படித்து அதில் முழுமையான தெளிவு பெறுவார்கள். நஞ்சாகிய சிவகல்பம் உண்டு சிவயோகம் செய்து அதில் தசதீட்சைகளும் முடித்து வெற்றி பெறுபவரே சித்தர்(ஞானி) தகுதி பெறுவார்கள், அப்படி சித்தர் தகுதி அடைந்தவர் உயிரோடு இறவாமல் இந்த உலகில் இருப்பார்கள்.
அகத்தியர் கன்ம காண்டம் 277
இல்லறம்தான் சிறந்தது, சக்திமிக்கது என கோடியில் ஒருவர் இல்லற வாழ்க்கையின் மகிமை அறிந்து வாழ்ந்து வருவார். அந்த கோடியில் ஒருவர் உலகமக்களோடு ஒட்டி மனதாலும், அறிவாலும் அவர்களை போலவே மக்களோடு மக்களாக வாழ்வார். வறுமையில் வாழும் ஏழை சிறுவன் போல தன்னடக்கத்தோடு இருப்பார் வெளியே தனது அறிவு பெரிது என காண்பித்து கொள்ளமாட்டார் ஆனால் அவரிடம் சித்துக்கள் மிகுதியாக இருக்கும். கற்று கொடுத்த குருவின் மொழியை மறக்காமல் அவரது வழிகாட்டலில் இருந்து விலகாமல் நடந்துகொள்வார் அப்படி இருப்பவரே குரு ஆவார். அப்படிப்பட்ட குருதான் குண்டலி என்றால் என்ன ? குண்டலியின் நந்தி ஒளி என்றால் எது? வாலை ஒளி என்பது எது ? என்பதை தெளிவாக விளக்கி இந்த உலகத்திற்க்கு கூறுவார். இப்படி வாழும் அவர் திரு என்கிற இறைவன் எங்கு இருக்கிறார் என்பது அறிந்து சிவயோகம் செய்து வெற்றி பெற்று வாலை ஒளியை தரிசித்து மானச வாலை பூஜை செம்மையாக செய்வார்.
ராமதேவர், சிவயோகம் 200-ல் பாடல் 19
யாரெல்லாம் சித்தர் இல்லை என்பதை வால்மீகி ஞானம் 16 பாடல் 4 ல்
பக்திமார்கத்தில் இருக்கும் பெருமளவு நூல்கள் அனைத்தையும் படித்துவிட்டு அவரவர் நினைப்பதையும் செய்வதையும் சரியை என்பார்கள். கல்லில் செய்ததையும், செப்பில் செய்ததையும், மரத்தில் செய்ததையும் வைத்து அதன் முன் பூஜை,யாகம் செய்து மக்களை ஏமாற்றி அதைதான் கிரியை என்பார்கள். ஒரு சிலர் நான் யோகி என சொல்லிகொண்டு கனி, காய் மட்டுமே சாப்பிடுவேன் என்று சொல்லிகொண்டு, மெளனயோகம் என்று சொல்லி வாய் பேசா ஊமை போல திரிவார்கள். இவைதான் சரியை,கிரியை,யோகம் மற்றும் ஞானம் என்று சொல்லி காக்கை,பித்தன்,மிருகம் போல திரிவார்கள்.
பூரகமே சரியை மார்க்கம், கும்பகம் கிரியை மார்க்கம், ரேசகம்தான் யோக மார்க்கம் இங்கு அவர் குறிப்பிடுவது வாசி உருவாக்கி வாசியோகம் செய்வதை அதன்பின் பிசகாமல் பயிற்சி செய்வதுதான் ஞான மார்க்கம். உடலில் பிராண சக்தி எங்கு அடங்குகிறது என்பது அறிந்து அதுதான் இறைவனின் வீடு என்பதை தன்னுள்ளே கண்டு உணர்ந்து உடலில் இருக்கும் இறை சக்தியும் பரத்தில் இருக்கும் இறை சக்தியும் ஒன்று என புரிந்து இறைவனோடு கலந்துவிடுபவரே சித்தர்கள்.
சித்தர்களின் சக்திகள் மற்றும் சித்திகள்.
அகத்தியர் பாடல் படி மகத்தான சித்தர் யார்?
96 தத்துவத்தை நன்கு அறிந்து அவர் எல்லா செயலும் செய்வார். அனைத்து மத நூல்களின் விளக்கமும் நுணுக்கமாக அறிந்திருப்பார், உலகில் இருக்கும் எல்லா நல்லது கெட்டதும் தெரிந்து வெற்றி பெற்றவர்கள்தான் சித்தர்கள்.
தசதீட்சை பத்தும் செய்து சித்தி பெறுபவரே சித்தர்கள். சிவதீட்சை,சக்தி தீட்சை இரண்டிலும் சித்தி பெற்று இருக்க வேண்டும். முக்தியை தனக்குள் பார்த்து சித்தி பெற வேண்டும் தனக்குள் ஒளியை நினைத்த போதெல்லாம் பார்க்க கூடியதாக இருக்க வேண்டும். மந்திரம் அனைத்தும் சித்தி பெற வேண்டும். தனக்குள் இருக்கும் 6 தலங்கள் மட்டும் இல்லாமல் வெளியில் இருக்கும் 6 தலங்களையும் பார்த்து சித்தி அடைய வேண்டும். மக்கள் சாதாரண வாழ்க்கையில் செய்யும் அனைத்து செயல்களை பற்றிய முழுமையான அறிவு வேண்டும் அதுதான் வேதாந்த சித்தி. சித்தாந்த சித்தி என்பது எல்லா விசயங்களின் உண்மைதன்மை தெரிந்து இருக்க வேண்டும். சித்திகள் பல தானாக பெற்று இருப்பர். காயத்திரி சித்தி என்பது உனக்குள் இருக்கும் வாலையை பரவெளியில் இருக்கும் வாலையோடு சேர்ப்பது. எட்டெழுத்து மந்திர சித்தி என்பது சிவ, சக்தி மந்திர சித்தி எல்லா மந்திரங்களையும் சித்தி பெறுவது. பஞ்ச பூதங்களையும் சித்தி அடைவது அதனை இயக்க முடிய வேண்டும். எல்லையற்ற கருணையில் சித்தி பெற வேண்டும். குளிகை சித்தி பெற வேண்டும், குளிகை சித்தி செய்ய வேதை சித்தி அடைந்து இருக்க வேண்டும். கடைசியாக ‘தான்’ , ‘அவன்’ ஆகுவதுதான் மகாசித்தர் நிலை.
முற்றும்.
இந்தக் கட்டுரைத் தொடரில் இதுவரை நமக்கு தெரியாமல் இருந்த ஏராளமான உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும். இந்தக் கட்டுரைக்கு முன் பிரசுரமான சித்தர் வாழ்வு பற்றிய கட்டுரையை கீழே படிக்கவும்.
நன்றிகள் :
யோகி காகபுஜண்டர் கோபிநாத்
சித்தர் பீடம் இலங்கை