வெட்டு கிளிகளின் படையெடுப்பு..
2020 ம் ஆண்டின் முதல் பாதி இப்போது தான் நிறைவடைகிறது ஆனால் இந்த ஆறு மாதத்திற்குள் இந்தியா ஏகப்பட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. இப்போது உருவாகி இருக்கும் அடுத்த சிக்கல் பாலைவன வெட்டு கிளிகளின் படையெடுப்பு.
கொரோனா வைரஸ் ,வட இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப நிலை, உம்பான் புயல் எல்லையில் சீனா உடனான பதற்றநிலை, ஆகியவற்றுக்கு மத்தியில் மேற்கு இந்தியாவில் இரண்டு டஜனுக்கும் அதிகமான மாவட்டங்களை வெட்டுக்கிளிகள் பதம் பார்த்து வருகின்றன. ராஜஸ்தான் மத்திய பிரதேசம் குஜராத் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஒன்றும் புதிதல்ல இது எங்கிருந்து ஆரம்பித்தது? எப்படி இந்தியா வரை வந்தது? வெட்டுக்கிளிகளின் வாழ் நாள் முதல் உணவு வரை ஐநாவின் அமைப்பு ஒன்று தரும் பல்வேறு தகவல்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.
வெட்டுக்கிளிகளில் வகைகளில் ஒன்றுதான் இந்த பாலைவன வெட்டுக்கிளி இதன் தோற்றம் இப்படித்தான் இருக்கும். தனிமையில் தான் வழக்கமாக வாழும் முட்டையிலிருந்து இளம் பூச்சியாக உருவாகி பின்னர் தத்தித்தாவி ஒருவழியாக பறக்கத் துவங்கி விடும் ஆனால் இதற்கு இரண்டு முகம் உண்டு சுற்றுச்சூழல் சிக்கல்களால் பசுமை வெளிகள் குறையும் சமயத்தில் உணவின்றி தவிக்கும் பல வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்து விடும்.
அப்போது இதன் தோற்றம் இப்படித்தான் இருக்கும் கூட்டமாக சேர்ந்து விட்டால் தனிமை நிலையில் வாடும் பூச்சி திடீரென கூடி வாழும் சிறிய வேட்டை விலங்குகள் போல மாறிவிடும். அதன் பின்னர் உலகிலேயே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் புலம்பெயர் பூச்சியாக உருவெடுக்கும் புதிதாக ஒன்று சேரும் வெட்டுக்கிளிகள் தனது குணத்தை மாற்றிக் கொண்டு பெரும் பசி கொண்ட கூட்டமாக ஒரு பறந்து செல்லும் படை போன்று மாறிவிடும்.
ஒரு பெரும் வெட்டுக்கிளி படையில் 10 பில்லியன் அதாவது 1000 கோடி வெட்டுக்கிளிகள் வரை கூட இருக்கலாம் ஒரு நாளைக்கு 150 முதல் 200 கிலோ மீட்டர் வரை பறந்து செல்லும் திறன் இதற்கு உண்டு. பசி வெறியில் இருக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கிராமப்புற உணவு ஆகாரங்களை நாசமாக்கி விட்டு இனப்பெருக்கம் செய்து கொண்டே செல்லும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பொதுவாக மூன்று மாதம் முதல் ஐந்து மாதம் வரை வாழக்கூடியவை.
ஆனால் காலநிலை சுற்றுச்சூழல் நிலை ஆகியவற்றைப் பொறுத்து இவை மாறுபடும் பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் குறுகிய காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்து பெரும் படையை உருவாக்கும் திறன் பெற்றது. அதாவது மூன்று மாதங்களில் 20 மடங்காகவும் ஆறு மாதங்களில் 400 மடங்காகவும் ஒன்பது மாதங்களில் எட்டாயிரம் மடங்காக உருவெடுக்கும் திறன் இந்த படைக்கு உண்டு.
ஒரு வளர்ந்த பாலைவன வெட்டுக்கிளி ஒரு நாளைக்கு தனது எடைக்கு நிகரான எடையை உட்கொள்ளும். அதாவது இரண்டு கிராம் உணவு உட்கொள்ளும் ஒரு சிறிய வெட்டுக் கிளி கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்வோம் அதாவது ஒரு கிலோ மீட்டர் நீளமும் ஒரு கிலோ மீட்டர் அகலமுள்ள ஒரு சதுர கிலோ மீட்டர் பகுதியில் எட்டு கோடி வெட்டுக்கிளிகள் வரை கூட இருக்கலாம். இவை ஒரு நாளைக்கு சராசரியாக 35 ஆயிரம் பேர் சாப்பிடக் கூடிய உணவை உட்கொண்டு விடும் இப்போது இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பற்றி உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தாவிடில் விளைநிலங்கள் நாசமாகும் இதனால் உங்கள் தட்டுக்கு உணவு வராமல் போகலாம் மிகப்பெரிய பஞ்சம் கூட உருவாகலாம். உலகம் முழுவதும் சுமார் 90 நாடுகள் வெட்டுக்கிளி படையெடுப்பால் பாதிப்புக்குள்ளாகும் என்கிறது ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு.
நீங்கள் தமிழ் சினிமா பார்ப்பவர் என்றால் காப்பான் திரைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பார்த்து இது ஏதோ புது தாக்குதல் என எண்ணக் கூடும். ஆனால் அப்படியல்ல உதாரணமாக கடந்த நூறாண்டுகளில் எடுத்துக்கொள்வோம் 1930 களின் பிற்பகுதி முதல் 1960 வரை பலமுறை வெட்டுக்கிளிகளின் பெருவாரியான தாக்குல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பெரும்பாலும் மந்த நிலையே நிலவியது.
இப்போதைய வெட்டுக்கிளிகள் தாக்குதல்களுக்கு அரேபிய தீபகற்பத்தின் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சூறாவளியும் பெரும்மழையும் காரணம் எனக் கருதப்படுகிறது. பாலைவன வெட்டுக்கிளிகள் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடைப்பட்ட சுமார் 30 நாடுகளை உள்ளடக்கிய வறட்சிப் பகுதிகளில் வாழக்கூடியவை 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெட்டுக்கிளிகளின் முதலாவது கூட்டம் யேமன், சவுதி அரேபியா, ஈரானுக்கு சென்றன அங்கு இனப்பெருக்கம் செய்த பிறகு கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு சென்றன தற்போது உருவாகியுள்ள இந்த மோசமான கூட்டம் ஏற்கனவே கிழக்கு ஆப்பிரிக்காவில் கடுமையாக பாதித்துள்ளது.
பசி வெறியுடன் உள்ள இந்த வெட்டுக்கிளி கூட்டம் சோமாலியா எதியோப்பியா பயிர்களை நாசம் செய்து விட்டு கென்யாவில் பரவியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் கென்யாவில் மிக மோசமான பூச்சி பாதிப்பாக இது உள்ளது. சோமாலியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இந்த பிரச்சனையால் தேசிய நெருக்கடி நிலையை அறிவித்துள்ளனர். பாகிஸ்தானில் கிழக்குப் பகுதிகளில் பருத்தி, கோதுமை, சோளம் மற்றும் இதர பயிர்களை இந்த வெட்டுக்கிளி கூட்டங்கள் நாசம் செய்தன.
அரபு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தற்போது பாதிப்பை சந்தித்துள்ளன இந்தியாவுக்கு ஏற்கனவே ஐநா அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில்தான் தற்போது இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் தனது வேட்டையை துவங்கியுள்ளன.
அணுவாயுத நாடுகளான இந்தியா பாகிஸ்தான் இடையேயான சுமுகமான நிலை இல்லாத போதும் இப்போது இந்த வெட்டுக்கிளியை விரட்டும் பணியில் இரு நாடுகளும் கூட்டு சேர்ந்துள்ளது. ராஜஸ்தானிலிருந்து மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டாவை நோக்கி பெரும்படை சென்று கொண்டிருக்கிறது. ஒரு படை ஏற்கனவே மத்திய பிரதேசத்தை அடைந்துவிட்டது ராஜஸ்தானில் மீண்டும் ஜூலை மாதம் அடுத்தடுத்த படையெடுப்புகள் நடக்கலாம் அங்கிருந்து பருவமழையை தொடர்ந்து காற்றின் திசையை பொறுத்து பீகார் ஒரிசா மாநிலங்களுக்கு செல்லலாம்.
இப்போதைக்கு தென்இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய வற்றுக்கு வெட்டுக்கிளி படை செல்லும் வாய்ப்பு குறைவு என்கிறது ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நிர்வகிக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் தகவல் சேவை அமைப்பு
இந்தியா இதற்கு முன்னதாக வெட்டுக்கிளி படையெடுப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது 1946 ஆம் ஆண்டில் இந்தியா வெட்டுக்கிளி படையை கண்காணிக்க ஒரு தனி அமைப்பை நிறுவி உள்ளது. ஆனால் இப்போது கொரோனா தொற்று மற்றும் கடும் வெயில் நிலைமை இதனால் சிக்கலாகியுள்ளது. ஊரடங்கு மற்றும் தொற்று பாதிப்பு காரணமாக வெட்டுக்கிளியை சமாளிக்கும் பணியில் உள்ள ஊழியர்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
ஏற்கனவே உற்பத்தி குறைந்துள்ள நிலையில் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசமாக்கினால் இந்தியாவின் உணவு உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் மேலும் ஏற்கனவே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கடும் வெயிலில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் தான் இந்த பிரச்சனையையும் எதிர்கொள்கின்றன என்பதால் எச்சரிக்கையுடன் கவனமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் பேரழிவு மேலாண்மை அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இது போல் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.
image source :https://www.bbc.co.uk/news/resources/idt-84994842-8967-4dfd-9490-10f805de9f68