அன்றைய காலங்களில் பழமொழிகளும் வாய்வழிக் கதைகளும் போல இன்று வாட்ஸ்அப் கதைகள் பரவுகின்றன. யார் உருவாக்கினார் என்பது குறிப்பிடப்படாத பட்சத்தில் தெரியாமல் இருக்கும் இக்கதைகள் பொதுவாக நகைச்சுவைகள், மக்களது வாழ்வியல் மற்றும் தத்துவங்களைக் கூறுகின்றன. அவ்வாறான சுவாரசியக் கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்கிறோம். நான்காவது கதை, துறவியும் சதுரங்கமும் இதோ,
துறவியும் சதுரங்கமும்
ஒரு இளைஞன், ஒரு ஜென் குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் அனுபவித்து சலித்து விட்டதால் ஜென்குருவிடம் வந்து, ஐயா எனக்கு உலகம் சலித்து போய்விட்டது. உங்களிடம் சீடனாய் சேர விரும்புகிறேன் என கேட்டான்.
குரு எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதிலாவது ஈடுபட்டதுண்டா என கேட்டார்.
இளைஞன் சிந்தித்து விட்டு “ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும்” எனக் கூறினான்.
குரு, நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார்.
சதுரங்க அட்டை கொண்டு வரப்பட்டது. துறவடிகளும் வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார்.
குரு, அவரை பார்த்து துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது. நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன் என்றவர்
அவனிடம் திரும்பி, இதோ பார், இது வாழ்வா? சாவா? என்பதற்க்கான போட்டி. நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டி விடுவேன்
என்பதை நினைவில் கொள் என்றார்.
போட்டி தொடங்கியது.
இளைஞனுக்கு முழு உடலும் நடுங்கியது. அது வாழ்வா? சாவா? என்பதற்குரிய கேள்வியல்லவா?
துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அதுபோல இதுவரை விளையாடியதே இல்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்.
ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது.
அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பன்னிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது. போட்டியில் தோற்று அவருடைய தலை வெட்டப்படுமே என்பதை நினைத்ததுமே
அவர்பால் அவனுக்கு அன்பு ஏற்பட்டது.
இந்த கருணையை உணர்ந்த அந்த கணமே அவனுக்கு, தெரியாத கதவுகள் திறந்தன. பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை.
ஆனால் இவர் கொலை செய்யப் பட்டால் அழகான ஓன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான்.
அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார்.
குரு, மகனே நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இவரின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.
இதுதான் கருணை. உம்மை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீர் மற்றவருக்காக பிரதிபலனின்றி உன்னை தியாகம் செய்யும் பொழுது நீர் கருணை உடையவனாகிறீர்.
கருத்து
அன்பு எப்போதும் கருணை மயமானது. அவை உமது இருப்பின் ஓரு இயல்பாகட்டும்
இதே போன்ற நல்ல கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்