இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.
ஐயப்பனுக்கு விரதம் இருப்பதால் கிடைப்பது என்னென்ன?
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறப்பு வாய்ந்த புண்ணியத் தலம் என்றால் அது சபரிமலை தான். மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் இங்கு தியானம் செய்ததாக ஐதீகம்.
கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் செல்ல வலியுறுத்தும் விரதமாக ஐயப்ப வழிபாடு இருப்பதும், சபரிமலை தரிசனத்தை தேர்வு செய்ய ஒரு காரணமாக உள்ளது.
கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம் தான். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல் சுத்தம், மன சுத்தத்துடன் அந்த ஐயப்பனின் அருளை வேண்டி காடு, மேடு கடந்து சென்று சரணம் அடைவதில் உள்ள சுகத்தை, அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிய முடியும்.
எண்ணிலடங்கா இறைவழிபாடுகள் இருந்தாலும், மண்ணில் மனிதனாகப் பிறந்து, இறைநிலையை அடைந்தவரான ஐயப்பனின் வழிபாடு அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கிறது.
தான்தோன்றி தனமாக ஊரை சுற்றி வருபவர்களை, ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிவிடுவான் என்று சொல்ல கேட்டிருப்போம். அந்த கால்கட்டுக்கு திருமணம் செய்து வைத்தல் என்பது பொதுவான பொருளாக இருக்கிறது. ஆனால் கால்கட்டு என்பதற்கு பாதை மாறாது மனதை ஒருநிலைப்படுத்தி வாழ்வது என்பதே சரியான பொருளாகும்.
சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன், குத்து காலிட்டு, கால்கள் கட்டப்பட்ட நிலையில்தான் காட்சி தருகிறார். அவர் தன்னுடைய தவத்தை யாரும் கலைத்து விடக்கூடாது என்பதற்காக மனதை ஒரு நிலைப்படுத்தியபடி அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஐயப்பனின் இந்த தரிசனம் எந்த நேரத்திலும், எந்த காரணத்திற்காகவும் தங்கள் இலக்குகளை மனிதர்கள் விட்டுவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக கூறுகிறார்கள்.
ஐயப்பன் வழிபாடு ஏராளமான வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளது. நிலையற்ற இந்த பூலோக வாழ்க்கையில், வாழும் காலத்திலேயே நல்லவராக வாழ்ந்து, பிறவி பெருங்கடலை கடக்கும் எளிய வழியை காட்டுகிறது ஐயப்பன் வாழும் சபரிமலையின் வரலாறு.
ஆடம்பர வாழ்வு நிலையற்றது என்பதை உணர்த்தவே ஐயப்ப பக்தர்கள் எளிமையான ஆடையை, சீருடைபோல் அணிந்து கொள்கிறார்கள். மேலும் அனைவரும் சமத்துவமானவர்கள் என்பதற்காகவே ஒரே மாதிரியாக இருமுடி கட்டி மலையேறுகின்றனர். எனவே ஐயப்ப விரதம் பக்தர்களுக்கு பொன், பொருள் தருவதோடு மட்டுமல்லாமல் ஒழுக்கத்தையும் கற்று கொடுக்கிறது.
சபரிமலை ஐயப்ப பக்தர்களே… இதை மட்டும் செய்துவிடாதீர்கள்..
- இருமுடிக்கட்டு இல்லாமல் 18ஆம் படி ஏறக்கூடாது.
- புனிதமான பம்பை நதியை அசுத்தப்படுத்தக்கூடாது.
- உடுத்திய ஆடைகளை பம்பை நதியில் களையக்கூடாது.
- பக்தர்கள் புகை பிடிக்கக்கூடாது.
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
- சாப்பிட்ட பின் இலைகள் மற்றும் கழிவுகளை பம்பை நதியில் போடக்கூடாது.
- 18ஆம் படி மீது தேங்காய்களை வீசி உடைக்கக்கூடாது.
- தேங்காய்களை உடைக்க 18ஆம் படியின் அருகிலேயே தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- கற்பூர ஆராதனை செய்பவர்கள் தீயை அலட்சியமாக விட்டுவிட்டு செல்லக்கூடாது
- அடுப்பு வைத்து சமையல் செய்யும் பக்தர்கள் சமையல் முடிந்த பின்னர் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு செல்ல வேண்டும்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் சபரிகிரி நாதனின் வேறு பெயர்கள்
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.