முதுகெலும்பு
உலகம் கம்ப்யூட்டர் பின்னால் என்று செல்ல தொடங்கியதோ அன்றில் இருந்து மனிதன் நிறைய நோய்களுக்கு வழி வகுத்து விட்டான். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
கம்ப்யூட்டர் புரட்சி நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்களை ஏற்று கொண்டதை போல இந்த சில மாற்றங்களையும் நாம் ஏற்று கொண்டு வாழப் பழகி விட்டோம், முப்போகம் நெல் விளைந்த நிலங்கள் இன்று வசிப்பிடங்களாக மாற்றப்பட்டு கம்ப்யூட்டர் புழுவாய் மனிதன் வாழப் பழகி விட்டான். கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் பணி புரிவதால் ஏற்படும் வியாதிகள் பல, அதில் ஒன்றான முதுகு வலி பற்றியும், அதை நம்மால் எப்படி தவிர்க்க முடியும் என்பதைப் பற்றியும் இங்கே அறிந்து கொள்ளலாம்.
தண்டு வடம் ஒரு நுண்ணிய பாதுகாப்பான வடிவமைப்பு. நம் உடலில் 33 முதுகு எலும்புகள் உள்ளன. உங்கள் முதுகின் நடுவில் உள்ள கோட்டில் நீங்கள் மெல்ல அழுத்தி உணரும் போது இந்த முதுகு எலும்புகளை உங்கள் கை விரல்களால் உணர முடியும். நாம் தொடர்ந்து கணிபொறி முன் அமர்ந்து பணி புரியும் போது முதுகெலும்பு உள்ள நாம் அந்த எலும்புகளை அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றோம். என்ன பாதிப்புகள் இதனால் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- ஒரு குறிப்பிட்ட அழுத்தம் வரை தாங்கி கொள்ளும் நம் முதுகெலும்பு, அழுத்தம் தொடர்ந்து அதிகமாகும் போது முதலில் அதன் வலு தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது.
- அதன் வலு தன்மை இழக்கும் போது அதன் வடிவமைப்பு சிறிது சிறிதாக மாறத் தொடங்குகிறது.
- அழுத்தம் அதிகரித்து தன் நிலை மாறிய எலும்புகள், பின்னர் மெதுவாக காலப்போக்கில் தேய ஆரம்பிக்றது. இதை மருத்துவர்கள் முதுகு எலும்புத் தேய்மானம் என்று சொல்கிறார்கள். (spondylosis/spondylolysis)
முதல் இரண்டு நிலைகளும் நம்மால் கட்டுபடுத்தி சரி செய்யும் நிலை. இதனை மருத்துவர்கள் prevention better than cure என்பார்கள். ஆனால் நாம் இந்த நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்ற பின்பே மருத்துவரை நாடுகிறோம். இது மனித இயல்பு குறை கூற ஒன்றும் இல்லை.
வழி முறைகள்
- படுத்து கொண்டு மிக நீண்ட நேரம் facebook வலம் வருவதை முற்றிலும் தவிருங்கள்.
- உங்கள் கணினி உங்கள் உயரத்திற்கு சரியாக அமைவது மிக முக்கியம்.
- நீங்கள் உட்கார்ந்து பணி புரியப் போகும் நாற்காலி சரியான உயரமும், நல்ல வசதியுடையதாக உள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
- நாற்காலியில் உங்கள் முதுகைத் தாங்கும் பகுதி சரியான உயரத்துடனும், மிருதுவாகும் இருக்க வேண்டும்.
- உங்கள் கால் பாதம் எப்பொழுதும் தரையை தொடும் படியான உயரம் உள்ள நாற்காலிகளை உபயோகிப்பது மிக நல்லது.
- மிக நீண்ட நேரம் தொடர்ந்து கணினி முன் அமர்வதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து தண்ணீர் குடிக்க இடம் பெயருங்கள். எழுந்து நடப்பதால் உங்கள் ரத்த ஓட்டம் புதுபிக்கப்படும்.
- இது உங்கள் முதுகெலும்புகளை அழுத்தில் இருந்து சிறிது நேரம் மீட்டு எடுக்கும்.
- கணினி திரையை வேலைப் பளுவால் உற்று நோக்க ஆரம்பித்து விடுகிறோம் மிக விரைவாக இதனை தவிருங்கள், முடிந்த வரை உங்கள் கண்களை 45 நிமிடங்களுக்கு ஒரு முறை இடது வலது புறம் திரும்பி பார்வைக் கோட்டை அகலப்படுத்தி விட்டு மீண்டும் திரையில் முழுகலாமே.
- முதுகுப் பகுதியை சிறிது வலப்புறம், இடப்புறம் திருப்பி வளைத்து சிறிய உடற்பயற்சி செய்து விட்டு மீண்டும் அமரலாம்.
- உங்கள் முதுகெலும்பு முடிந்த வரை நேர்கோட்டில் செங்குத்தாக இருப்பது நலம், ஆனால் இதனை நம்மால் செய்ய முடியாது, இதற்காகத்தான் நாற்காலிகள் இதனை கருத்தில் கொண்டு நவீன வடிமைப்புடன் வருகின்றன. அதற்காகப் பிரத்தியோகமாக வடிமைத்த நாற்காலிகள் வாங்கி பயன்படுத்துங்கள்! முடிந்தவரை முதுகைக் காப்பாற்றுங்கள்.
டாக்டர். தி. செந்தில்குமார்
மேலும் அறிந்து கொள்ள மேல் உள்ள தலைப்பை அழுத்தவும்
இது போன்ற உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுகாதாரம் பகுதிக்கு செல்லுங்கள்…