இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
சாகா வரம் தரும் அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று.
கடலில் உருவாகும் பல வகை சங்குகளில் வலம்புரியாக கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகம சாஸ்திரங்கள். ஒரு வீட்டில் வலம்புரி சங்கு வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.
சங்கு என்பது பொதுவாக மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படும். அதிலும் வலம்புரி சங்கு என்பது விஷேசமான ஒன்றாகும். அதனை முறையாக பூஜை செய்து வழிபட்டு வந்தால் வீட்டில் கஷ்டங்கள் மறைந்து மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
வீட்டில் மகாலட்சுமி தங்க வேண்டுமென்றால் வலம்புரி சங்கினை முறையாக பராமரித்து அதற்கு பூஜை செய்ய வேண்டும்.
வலம்புரி சங்கை வாங்கி கடைகள், வியாபார ஸ்தலங்கள், தொழிற்கூடங்கள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வைத்து தினமும் தூபமிட்டு, கற்பூர ஆரத்தி காட்டி வந்தால் நல்ல பலன்கள் நாளும் நம்மை நாடித் தேடி ஓடிவரும்.
சங்கிற்கு உடலை பாதிக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பினார்கள். அதனால்தான் தீர்த்தம் சங்கில் தரப்படுவது விசேஷமாக கருதப்பட்டது. குழந்தைகளுக்கு அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றி தரும் வழக்கம் நம் வீடுகளில் இருந்தது.
வலம்புரி சங்கு தரும் பலன்கள்
வலம்புரி சங்கில் தீர்த்தம், துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும்.
கண்களுக்கு புலப்படாத வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில், துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால் திருமண பாக்கியம் கைகூடும்.
கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வலம்புரி சங்குக்கு, பௌர்ணமி தோறும் குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு.
சுத்தமாகவும், கச்சிதமாகவும் பூஜிக்கப்படும் வலம்புரி சங்கு உள்ள வீட்டிற்குள் கெட்ட சக்திகள் நெருங்காது.
வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம். சித்ரா பௌர்ணமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் – மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.