தந்தையர் தினம்!!
தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் மூன்றாவது ஞாயிற்று கிழமையில் உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது..தந்தையர் தினத்தில் அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவு விழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது.
தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை. குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அதன் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை. ‘அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்’ என்ற பாடல்வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
ஒளவையார் சொல்லாத விஷயம் ஒன்றுமே இல்லை. அவர் ஆத்திசுவடியிலே அத்தனையும் ஒரு சில வார்த்தைகளிலே சொல்கிறார். அதில் தாய் தந்தையை பற்றி…
தாயின் சிறந்தது ஒரு கோயிலும் இல்லை.. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..
ஒரு குடும்பத்தில், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் அந்த குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்களிப்பு முக்கியமாக இருக்கிறது.
தந்தையர் தினம்’ என்பது 1910-ம் ஆண்டில் இருந்து தான் கொண்டாடப்படுகிறது. அதற்கு காரணமாக விளங்கியவர் அமெரிக்காவை சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் என்ற பெண் ஆவார். அவரது தாயாரின் மறைவுக்கு பிறகு, அந்த குடும்பத்தில் இருந்த 6 பிள்ளைகளையும் தந்தை வில்லியம்ஸ் தான் கடும் சிரமத்திற்கு மத்தியில் வளர்த்தார். தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து கடமையை நிறைவேற்றிய தனது தந்தையை கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.
இன்றைய பரபரப்பான உலகில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஓடிக்கொண்டிருக்கும் தந்தைமார்களில் எத்தனையோ பேர், குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் உழைத்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.
தந்தை எத்தனையோ சரிவுகளுக்கு பின்பும் தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கும் அப்பாக்களுக்கு நிகரான தன்னம்பிக்கையூட்டும் புத்தகம் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. அம்மாக்கள் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம் ஆனால் அப்பாக்கள் கஷ்டப்படுவதைப் பிற்காலத்தில் நம் வாழ்க்கையில் யாரோ ஒருவர் சொல்லி தான் நமக்கே தெரிய வரும். நாம் சொந்த காலில் நிற்கும் போது மட்டும் தான் தெரியும் இத்தனை நாட்கள் தூக்கி சுமந்த நம் அப்பாவுக்கு எப்படி வலித்து இருக்கும் என்று. அவர் ஏழையாக இருந்த போதும் ஒரு நாளும் நம்மை ஏழையாக வளர்க்க எண்ணியதே இல்லை. அம்மா சுமந்தது என்னவோ பத்து மாதம் தான் மற்ற மாதம் எல்லாம் அவர் தானே சுமந்தார். முதலில் சொன்னது வயிற்றில் இரண்டாவது சொன்னது வாழ்க்கையில்.
அனுதினமும் அலுப்பு, வேலைப்பளு, அன்றாட குடும்ப பாரம், சொந்த வீட்டுக் கடன் தன் குழந்தைகளுக்கான கல்வி கடன், கல்யாண கடன், இதர செலவு, மருத்துவ செலவு, பேரன் பேத்திகளுக்கான செய்முறை, என அத்தனை சுமைகளையும் தன் தோள்மீது தூக்கி சுமக்கும் ஒவ்வொரு தந்தையும் போற்றப்பட வேண்டியவர்கள் தந்தையர் தினத்தில் மட்டுமல்ல வாழ்வின் எல்லா நாளும் தந்தையர் தினம் தான். இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்…
இது போன்ற மேலும் பல சுவாரசியமான தகவல்களுக்கு இங்கே செல்லவும்.
Wall image source:https://www.webmd.com/parenting/baby/features/new-dads-bonding-with-newborn-baby#1