பொறுப்புத்துறப்பு : இந்தக் கட்டுரைப் பகுதியில் விளக்கப்படும் காலப்பயணம் தொடர்பான விஞ்ஞானம்சார் கருத்துக்கள் இன்னுமே முழுமையாக பேசித் தீர்க்கப்பட்டவை அல்ல. ஆயினும் உலகின் மூத்த மற்றும் குறித்த துறையில் துறைபோன விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாவ்கிங்க்ஸ் அவர்களின் விளக்க காணொளி ஒன்றின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் வழங்கப்படுகின்றன.
காலப்பயணம் என்றால் ?
இன்று பல கற்பனை கதைகளுக்கு அடிப்படையாகவும் விஞ்ஞான திரைப்படங்களுக்கு மூலதாரமாகவும் திகழ்கின்ற ஒரு கொள்கை. நாம் பாதைகளில் சாதாரணமாக பயணம் செய்கின்றோம். இது முடியுமா முடியாதா என்கின்ற சந்தேகம் என்றுமே எழுவதில்லை. உண்மைதானே ? ஆனால் காலப்பயணத்தில் மட்டும் ஏன் சந்தேகம் ? புரியவில்லையா ? புரிய வேண்டுமெனில் காலம் பற்றிய சரியான புரிந்துணர்வு வேண்டும்.
காலம், வெளி
நாம் தினசரிப் பயன்பாட்டில் வெளியோடு அதிகமாக தொடர்புபடுகிறோம். அதனால் வெளி ஓரளவு புரிந்த கருத்து. ஆனால்,நேரம் வேகமாகப் போகிறது. மெதுவாகப் போகின்றது என்றெல்லாம் குறை கூறுவோமே அந்தக் காலம் அல்லது நேரம் என்பது தனிப்பட்ட ஒரு விஷயமல்ல. நாம் வாழும் உலகு அதிலுள்ள எல்லாப் பொருட்களும் மூன்று பரிமாணங்களை கொண்டிருப்பதைப் போலவே நான்காவதாகக் கொண்டிருக்கும் பரிமாணம் தான் காலம்.
- நீளம் மட்டும் கொண்ட பொருட்கள் ஒரு பரிமாணமானவை (கோடு).
- நீளம், மற்றும் அகலம் கொண்ட பொருட்கள் இருபரிமாணமானவை (தள வடிவங்கள்)
- நீளம், அகலம் என்பவற்றோடு உயரம்/தடிப்பு ஆகியவற்றைக் கொண்ட பொருட்கள் முப்பரிமாணமானவை (பெட்டி, நான்முகி)
இந்த மூன்று பரிமாணங்களைத்தான் நாங்கள் வெளி என்கிறோம். அதாவது இந்த மூன்று பரிமாணங்களால் உருவான இடம் ( நாம் வாழும் இடம் , ஆகாயம், காற்று, பொருள்) என எல்லாமே வெளி எனப்படுகின்றன. இவற்றைக் கடந்து நான்காவது பரிமாணம்தான் காலம். ஆனால் மற்ற எல்லாமே எல்லாத் திசைகளிலும் பரந்த பரிமாணங்கள். இந்த ஒன்று மட்டும் ஒரு ஒருதிசைப் பரிமாணம் “தம்பி, இது ஒருவழிப்பாதை, போனா வர முடியாது.” காலம் போலவே நம்மால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட சில கொள்கைகளை இப்பக்கத்தில் பார்வையிடவும்.
உண்மையில் காலம் முன், பின் என இரண்டு திசைகள் உடையதுதான். காலம் மட்டுமல்ல நீளம், உயரம், அகலம் ஆகிய எல்லாமே நேர்த்திசை (+), மறைத்திசை (-) ஆகியன இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் காலத்தில் மட்டும் ஒரு திசையில் போனால் மற்றத் திசையில் மீண்டும் வர முடியாது. அது ஏன் என்பதைப் பின்பகுதிகளில் பார்ப்போம்.
கால-வெளி
நம்முடைய காலப்பயணம் பற்றிய தேடலில் இது அடுத்த கட்டம். நமக்கு உண்மையில் இரண்டாகத் தெரிவன எல்லாம் ஒன்றே. பூ, தலை என்கின்றோம். ஆனால் நாணயம் ஒன்றுதான். பக்கங்கள் இரண்டாகப் பிரிக்கின்றோம் ஆனால் தாள் ஒன்றுதான். சடம், சக்தி என எல்லாவற்றையும் இரண்டுக்குள் பிரிக்கின்றோம். ஆனால் இரண்டும் ஒன்றேதான். ஒன்றாக மற்றது மாறும். “சரிடா தம்பி இதெல்லாம் எதற்கு” எனக் கேட்டீர்களாயின், அதேபோலதான் நேரமும் இடமும் / காலமும் வெளியும். அவை ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை. நேரம் என்று ஒன்று எப்போது உருவானதோ அப்போதே வெளியும் உருவானது. மற்றைய வார்த்தைகளில் சொன்னால், வெளி அல்லது இடம் என்று ஒன்று இந்த பிரபஞ்சம் ஆரம்பித்த வேளையிலே காலமும் ஆரம்பித்தது. அதற்கு முன்னர் என்ன இருந்தது என்றால் எதுவுமில்லை. நிச்சயமாக இது குழப்பகரமான தலைப்புதான்.இதில் மேலும் ஆழமாக போகாமல் இரண்டும் ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை எனப் புரிந்து கொள்ளுங்கள். காலப்பயணம் செய்தல் பற்றி அறிய அது போதும்.
காலம் ஏன் ஓரு வழிப்பாதை ?
சரி அந்த தலைப்புக்கு வருவோம். காலத்தில் ஏன் முன்னோக்கி மட்டும் செல்லலாம் ? பின்னால் முடியாது ? பார்க்கலாம். முன்னர் குறிப்பிட்டது போலவே காலம் தனியானது அல்ல.. அது கால வெளி என்கின்ற ஒருமை. ஆகவே நீங்கள் காலத்தில் பின்னோக்கி நகரும் ஒவ்வொரு முறையும் இடமும் பின்னோக்கி நகரும். இடம் என்று சொல்லும்போது அதனுடன் தொடர்புபட்டிருந்த எல்லாத் திணிவுகளும் நகரும். விஞ்ஞான வார்த்தைகள் போதும் உதாரணத்துக்கு வருவோம்.
உதாரணமாக நீங்கள் இன்று 9 மணிக்கு காலையில் வீட்டில் இருந்து 9.15க்கு கடைக்குப் போகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். மீண்டும் காலப்பயணம் செய்து பின்னோக்கி வந்து வீட்டை அடைய நினைக்கிறீர்கள். இப்போது அது சாத்தியமாகின்றது என வைத்துக்கொள்வோம். நீங்கள் பின்னால் சென்று 9 மணிக்கு வீட்டை அடைந்து விட்டீர்கள். ஆனால் வீட்டுக்கு பின்னோக்கி காலப்பயணம் செய்யும் போது உங்களுடைய இன்னொரு பிரதி பின்னோக்கி நடந்து வரும். இப்போது வீட்டுக்கு வந்து விட்டீர்கள். மீண்டும் கடைக்கு நடக்கப் போகின்றீர்கள். மறுபடி நேரம் மணி 9 – 9.15 என வைத்துக்கொள்வோம்.
ஆனால் நீங்கள் மீண்டும் கடைக்குப் போகும் வழியில் முதலாவதாக கடைக்கு சென்ற நீங்கள், காலத்தில் பின்னோக்கி வந்த நீங்கள், மீண்டும் தற்போது செல்லும் நீங்கள் என 3 உங்களை நீங்களே காண்பீர்கள். ஆனால் இது நடைபெற வாய்ப்பில்லை. ஏனெனில், வாய்ப்பிருந்தால் நீங்கள் முதலாவது தடவையிலேயே உங்களுடைய மூன்று விம்பங்களையும் அதாவது நீங்கள், கொஞ்ச நேரத்தில் பின்னோக்கி வரப்போகும் நீங்கள், பின் மீண்டும் போகப்போகும் நீங்கள் என்பவற்றைக் காண நேரிடும். இது முதல் தடவை நீங்கள் செல்லும்போதே நடைபெறவில்லை, ஆகவே வாய்ப்பில்லை. அது மட்டுமல்ல, இந்த உலகத்தில் எந்த ஒரு திணிவும் திடீரென தோன்ற வாய்ப்பில்லை. அது இயற்கை நியதிகளுக்கு எதிரானது. இதுவே சக்திகாப்புத்தத்துவம் என விளக்கப்படுகிறது. உலகம் தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்க திடீரென நீங்கள் மூன்று பேராக வருவது ஏற்கத்தக்கதல்ல.
சரி அப்பொழுது காலப்பயணம் முடியாதா ? முடியும் எதிர்காலத்துக்கு செல்லலாம். ஆனால் அங்கிருந்தும் திரும்ப முடியாது. அது எவ்வாறு ? பார்ப்போம்…
ஈர்ப்பு
நம்முடைய காலப்பயணத்துக்கான வண்டி இதுதான். நாம் காலம் எனும் பரிமாணத்தைக் கடக்க உதவி செய்யப் போகின்ற வாகனம்தான் ஈர்ப்பு சக்தி. எப்படி என்று புரியவில்லையா ? நியாயம்தான். நான் ஆரம்பத்தில் சொன்னதுபோலவே காலமும் இடமும் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்ட ஒருமை. அந்த கால வெளியில் ஒரு திணிவினை வைக்கும் போது அது கால வெளியை வளைக்கும். இதனை இழுத்துப் பிடிக்கப்பட்ட பாயில் வைக்கப்படும் கனமான பந்துக்கு ஒப்பிடலாம். நடுவில் பந்தை வைத்தவுடன் பாய் வளைவதைப்போலவே திணிவும் கால வெளியை வளைக்கும். அந்த வளைவினால் ஏற்படுகின்ற அந்த பொருள் நோக்கிய இழுவைதான் ஈர்ப்பு. நம் பூமியில் புவியின் மையத்தில் இந்த திணிவானது செறிந்து இருகின்றது அதனால் புவியின் மையத்தை நோக்கி ஈர்ப்பு விசை கூடிச்செல்லும். தரை மேற்பரப்பிலிருந்து மேலே செல்ல செல்ல ஈர்ப்புக் குறையும். இதனைப் புரிந்து கொள்வது நல்லது.
கருந்துளை என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது நம்முடைய அண்ட வெளியிலே உள்ள சூரியன் போன்று எரியும் நட்சத்திரம் ஒன்றை எடுங்கள். அவை தற்போது பெருத்துக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் அவை முழுமையாக விரிந்து வெடித்து அழியும். அப்போது அந்த மொத்த திணிவும் ஒரு சிறிய புள்ளியில் செறிவாக்கப்படும். இந்த அதீத திணிவுக் குவிப்பால் அங்கு எக்கச்சக்க ஈர்ப்பு சக்தி இருக்கும். அதன் சக்தியால் மிக வேகமாகப் பயணிக்கும் ஒளியால் கூட அதனைக் கடந்து செல்ல முடியாது என்கின்றனர். இப்போதைக்கு இது போதும். கருந்துளை தனித்தலைப்பு.
காலப்பயணம் செய்வோம்
எல்லா அறிமுகங்களும் முடிந்தது; இனி என்ன ? பயணம்தான். ஈர்ப்பு வெளியை வளைக்கும் போது எவ்வாறு ஈர்ப்பு உருவாகிறதோ அவ்வாறேதான் காலமானது நழுவலடையும். ஆம்,
ஈர்ப்புக் கூடிய இடத்தில் நேரம் மெதுவாக பயணிக்கும்.
ஒப்பீட்டளவில் ஈர்ப்புக்குறைந்த இடத்தில் வேகமாக பயணிக்கும்.
இதுதான் நம் காலப்பயணத்துகான சாவி. பூமியை விட பலமடங்கு ஈர்ப்புக்கூடிய ஒரு கிரகம் X உண்டு என சொல்வோம். (எக்கச்சக்கமாக உள்ளன). அவற்றுள் ஒன்றுக்கு நீங்கள் பயணம் செய்து 1 மாதம் தங்கி விட்டு திருப்பி வருகின்றீர்கள் எனக் கொள்வோம். நீங்கள் புவிக்கு வரும்போது உங்கள் நண்பர்கள் எல்லாருக்கும் 15 வருடங்கள் முடிவடைந்திருக்கலாம். அதாவது ஒப்பீட்டளவில் உங்கள் நேரம் மெதுவாக ஓட உங்களைத் தவிர அனைத்துப் புவி நண்பர்களது காலம் அந்த கிரகம் X னுடைய ஈர்ப்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் வேகமாக போனதால் நீங்கள் வயதாகமல் இருக்கிறீர்கள். கிட்டத்தட்ட 20 வயதில் போய் விட்டு வருகிறீர்கள். நீங்கள் திரும்பி வரும்போது உங்கள் நண்பர்களுக்கு எல்லாம் 35 வயதாகி இருக்கும். ஆனால் நீங்கள் இன்னும் 20 வயதில்தான் இருப்பீர்கள். உங்கள் உடலும்தான். இதுதான் எதிர்காலத்துக்கு செய்யக்கூடிய காலப்பயணம்.
இதனை நீங்கள் புவியில் இருந்த படியே முயற்சி செய்யலாம். ஆனால் உங்களுக்கு நேரத்தை 30 வது தசமதானம் வரை துல்லியாமக அளவிடக்கூடிய கடிகாரம் தேவைப்படும். நீங்கள் ஒரே நேரத்தில் 30 தசமதானங்களுக்கு துல்லியமாக நேரம் ஒத்துப்போகும் இரண்டு கடிகாரங்களை ஒன்றை மலையடிவாரத்திலும் இன்னொன்றை நன்கு உயரமான (சில நூறு அடிகளாவது) மலையின் உச்சியிலும் வைத்து அந்த உச்சியில் ஒரு நாள் இருக்க வேண்டும். அதன் பின்பு மீண்டும் வந்து கீழே உள்ளதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிகக்குறைந்த அதாவது 0.000000000000001 ஆவது தசமதானங்களில் கீழே இருக்கும் கடிகாரம் பின்தங்கி இருக்கும். ஒரு வேளை கருந்துளைக்கு பக்கத்தில் சென்று விட்டு வர முடியும் என்றால் உங்கள் நண்பர்கள் எல்லாம் இறந்த பின்னும் நீங்கள் 20 வயது பையனாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம்.
தற்போதைக்கு அறியப்பட்ட விஞ்ஞான தரவுகள் படி இதுவரை நம்மால் வரமுடிகிறது.
இதில் விளங்கப்படுத்தப்பட்டிருக்கும் தரவுகள் அனைத்தும் தொலைகாட்சி தொடர் ஒன்றில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹவ்கிங்க்ஸ் அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டதே. இவரோடு இணைந்து பணியாற்றிய கிப் த்ரோன் எனும் விஞ்ஞானியின் உதவியுடன் விஞ்ஞானம் சற்றும் பிசகாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் உள்ளது. அதன் பெயர் Interstellar. முடிந்தால் பாருங்கள்.
உங்கள் காலப்பயணத்துக்கு நீங்களும் தயாரா ?
Wall Image Source : https://www.ecopetit.cat/ecvi/hRJbR_awesome-space-fantasy-wallpaper-wormhole-galaxy/