இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவது ஏன்?
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் ஆகும். ஒரு திருமணத்தில் ஆயிரம் ஆயிரம் சடங்குகள் இருந்தாலும் அதில் தாலி கட்டுவதற்கு தான் அதிக முக்கியத்துவம் உள்ளது. இதனை மாங்கல்ய தாரணம் என்று கூறுவர்.
திருமணத்தின் போது மணமகன், மணமகளின் கழுத்தில் திருமாங்கல்ய சரடை கொண்டு மூன்று முடிச்சு போடுகின்றனர். இந்த மூன்று முடிச்சுகளும் ஒரு பெண் எப்போதும் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மைமிக்கவளாக திகழ வேண்டும் என எத்தனையோ காரணங்களை உணர்த்துகின்றது.
முதல் முடிச்சு
இறைவன் மற்றும் தேவர்களை சாட்சியாக வைத்து போடப்படுவது முதல் முடிச்சு ஆகும். இது கணவனுக்கு கட்டுப்பட்டவளாக இருக்க போடப்படுகிறது.
இரண்டாம் முடிச்சு
இரண்டாம் முடிச்சு முன்னோர்களை சாட்சியாக கொண்டு போடப்படுகிறது. இது தாய் தந்தையருக்கும், புகுந்த வீட்டிற்கும் கட்டுப்பட்டவளாக இருக்க போடப்படுகிறது.
மூன்றாவது முடிச்சு
பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வந்திருப்பவர்களின் சாட்சியாக போடப்படுவது மூன்றாவது முடிச்சு ஆகும். இது தெய்வத்திற்கு பயந்தவளாக இருக்க போடப்படுகிறது.
மணமக்களை ஆசீர்வாதம் செய்வது ஏன்?
திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் ஒன்றாக பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவர். மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்துக் குருக்கள் பிரார்த்தனை செய்து மந்திரம் சொல்லி மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்வர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசீர்வதிப்பர். மணமக்கள் அனைத்து செல்வங்களும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகவே ஆசீர்வாதம் செய்கின்றனர்.
ஆரத்தி
திருமணம் முடிந்த பிறகு இரு சுமங்கலிப் பெண்கள் வந்து ஆரத்தி எடுப்பார்கள். தம்பதிகளுக்கு தீய சக்தியினால் தீமை ஏற்படாமலும், கண் திருஷ்டி ஏற்பட்டிருந்தாலும் அதை போக்குவதற்கு இந்த ஆரத்தியானது எடுக்கப்படுகிறது.