நேத்து வரைக்கும் இதை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.. என்ன பத்தி நீ என்ன நெனச்சிட்டு இருக்க.. இந்த விஷயத்துல நான் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்னு நீ நினைச்சியா..
அப்படி இல்லப்பா… ஆனா எனக்கு செய்யப் போற விஷயம் சரியா தப்பா என்று யோசிக்க முடியாமல் இருந்தது. யோசிச்சுப் பார்த்தேன்.. தனியா முடிவு எடுக்க முடியும்னு தோணல.. அதான் சரின்னு உன் கிட்ட சொன்னேன்…
எத அடிப்படையா வெச்சு நீ இப்போ முடிவு பண்ற ?
காரணம் எல்லாம் எனக்கு சொல்ல தெரியல ஆனா கண்டிப்பா செஞ்சே ஆகணும்னு மட்டும் தோணுது…
சரி இப்போ மத்தவங்களோட நிலைமையை யோசிச்சு பார்க்கலையா ? இப்படி செஞ்சா எல்லாமே சரியாகி விடுமா ? கண்டிப்பா இதே செஞ்சே ஆகணுமா ? இதுக்கப்புறம் உன்னோட வாழ்க்கைல என்ன பண்றது பத்தி ஏதாவது யோசிச்சு பார்த்தியா ?
பச்க்…….. ( பாஸ் பட்டன் அழுத்தப்படுகிறது )
“முக்கியமான சீன் போகும்போது நிப்பாட்டுற ?”
“அட கொஞ்சம் இருப்பா… கையில வச்சிருந்த பாப்கோர்னும் முடிஞ்சு போச்சு. சீக்கிரம் போய் கொஞ்சம் பில் பண்ணிட்டு ஓடி வரேன்…”
“இப்போ பாப்கான் கட்டாயமா ? அதில்லாம படம் பார்க்கவே முடியாதா ?”
சரி பாப்கார்ன் வேணாம்.. சிப்ஸ் பக்கெட் எடுத்துட்டு வரவா..
“நீ எல்லாம் திருந்தவே மாட்ட டா…..”
“கோச்சுக்காதீங்க மேடம்… கீவ் மீ 5 செகண்ட்… பறந்து வாறன்…”
“அப்பனே…”
“என்ன மேடம் ?”
“அப்படியே எனக்கு ஒரு சாக்லேட்… “
தெரிந்த கதை, நொறுக்குத்தீனி எடுக்க சென்றவனை திட்டு திட்டு என்று திட்டிவிட்டு, பிறகு தானே அவனிடம் சாக்லேட் கொண்டுவருமாறு சொன்னவளை பார்த்து முறைப்போடு கலந்து ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்து விட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டான்.
அண்மையில் வந்த ஒரு நெட்பிளிக்ஸ் படத்தினை இரண்டு பேருமாக தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிலேயே ஒரு சினிமா கூடத்தை கொண்டுவருவதற்கு ஏற்றாற்போல விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு நல்ல சத்தத்துடன் ஆன ஒரு தொகுதி செயற்படுத்தப்பட்டு அமர்வதற்கு அல்லது படுத்து தூங்குவது கூட வசதியான சோபாக்கள் வைக்கப்படிருந்தது அவனுடைய வீட்டில்…
வாரம் முழுவதும் ஒரே நிறுவனத்தில் வேறு வேறு பிரிவுகளில் பணிபுரியும் திருமணம் செய்து கொள்ளாத காதலர்கள் இவர்கள். இவர்கள் ஒன்றாக தனித்து இந்த வீட்டில் இருக்க முடிவெடுத்த பொழுது முதலில் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும் ஒத்துக் கொள்ளவில்லை ஆனால் காலப்போக்கில் அவர்களுடைய இரண்டு குடும்பங்களுக்கும் ஏற்பட்ட நம்பிக்கையால் அந்த இரண்டு பேரும் திருமணத்துக்கு முன்பே தனி வீட்டில் ஒன்றாக வாழ ஆரம்பித்திருந்தனர்.
இவளுக்கு அவனை பிடித்திருந்தது. அவனிடம் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது, ஆனால் எப்பொழுது காதல் வருகிறதோ அப்பொழுது சொல்கிறேன் என்று விட்டாள். அவனுக்கு மிகவும் பிடித்தமான எல்லா குணங்களையும் அவள் கொண்டிருந்ததால் அவளை அவனுக்கும் பிடித்திருந்தது. ஆனால் இரண்டு பேரும் இன்னும் ஒருவருக்கொருவர் காதலை சொல்லிக் கொள்ளவில்லை. காதலிப்பது இரண்டு பேரும் ஒத்துக்கொண்ட விடயம். இரண்டு வீட்டுக்கும் தெரிந்து திருமணத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிச்சயம் வரை முடிந்துவிட்டது. ஆனாலும்கூட ஒருவருக்கொருவர் இன்னும் பிரபோஸ் செய்து கொள்ளவில்லை.
அந்த ஒரு விடயமே இவர்களுக்கு ஒரு நாளில் கால்வாசி பங்கை ஓட்டுவதற்கு தேவையான அரட்டையை கொடுத்திருந்தது.இவள் அவனை கடுப்பேற்ற வேண்டுமென்றே பெரிய பெரிய திரைப்படங்கள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் இவையெல்லாம் செய்யும் ப்ரபோஸ் காட்சிகளை போட்டு காட்டி இதை விட எல்லாம் நீ எனக்கு பெரிதாக செய்வாய் என்று எனக்கு தெரியும் என்று சொல்லி கொண்டே இருப்பாள். அவனும் இவளை கடைக்கு கூட்டிக்கொண்டு செல்லும்போதெல்லாம் கடையிலே இருக்கின்ற ஒரு சின்ன பொம்மையை காட்டி இதை கொடுத்து உனக்கு சொல்லி விடுவேன், உணவை வாங்கிக் கொடுத்துவிட்டு, இந்த சாப்பாட்டை போல இன்னொரு சாப்பாடு பார்சல் வாங்கிக் கொடுத்து அதை வைத்து சொல்லி விடுவேன் என்று மிகவும் எளிமையாக முடிக்கப் போவதாக சொல்லிக்கொண்டே இருந்தான்.
ஆனால் இரண்டு பேருடைய மனத்திலும்,அவனோ அவளோ எப்படி சொன்னாலும் அதனை தான் ஏற்றுக் கொள்வேன் என்ற மனநிலை இருந்தது… இருந்தாலும் மன ஓரத்தில் ஒரு சின்ன பேராசைதான்.
இதுவரைக்கும் தெரிந்து கொண்டால் போதுமானது மீண்டும் அவர்களிடம் செல்வோம்.
அவன் கிச்சனில் இருந்து மீண்டு வரும் பொழுது, தன்னுடைய இரண்டு கால்களையும் சம்மணம் கொட்டுவது போல (இரண்டு கால்களையும் உள்நோக்கி மடிக்கும் நிலை) மடித்து சோபாவுக்கு மேல் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய தலைமுடியை பின்னால் இருந்து மொத்தமாக தூக்கி உச்சி மண்டையிலே முனிவர்களைப் போல ஒரு உயரமான கொண்டை போட்டிருந்தாள். அந்த கொண்டயில் கடைசியாக செருகிய நுனி முடி கொஞ்சமாக வெளிப்பட்டு அவளது நெற்றியை நோக்கி தொங்கிக்கொண்டிருந்தது.
அவள் சற்று குனிந்த படி தன்னுடைய இரண்டு கைகளாலும் தொலைபேசியை பிடித்து ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறாள்… இவன் போய் நொறுக்குத்தீனி எடுத்து விட்டு வருவதற்குள் சமூகவலைத்தள கடலில் சற்று மூழ்கி இருக்கிறாள் போலும்.
இவன் அவள் பக்கத்தில் சென்றான்..
ஓய்… குட்டி… இந்தா…
அவள் இடத்தில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.
குட்டி…..
அவளுடைய நாடியில் கையை வைத்து மெதுவாக அவள் முகத்தை திருப்பி பார்க்கிறாள்..
விரக்தியில் உறைந்துபோய் கண்கள் கலங்கி கண்ணீர் நிறைந்து வழிய தயாராக நிற்கிறது.
“ஏய் என்ன ஆச்சு…” இவன் பதறிப் போனான்.. “என்னாச்சும்மா ஏதும் பிரச்சனையா ?”
அவள் கண்ணில் நிரம்பியிருந்த கண்ணீர் வழிய விம்மத் தொடங்கினாள். தன்னுடைய தொலைபேசி திரையை இவனிடம் நீட்டினாள்…
இன்ஸ்டாகிராம் பக்கம் திறக்கப்பட்டுள்ளது. அதில் எதையோ பார்த்துவிட்டுத்தான் அழுகிறாள். என்ன என வாங்கி பார்க்கிறான்.
‘”விடுங்கள் பா” என கதறியும் 7 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம்: இந்தியாவில் தமிழ்நாடு பகுதியில் சம்பவம்.’
– மற்றொரு மொட்டையும் நம்மிடமிருந்து பறித்துக் கசக்கிய கயவர்கள்.
செய்தியோடு இணைக்கப்பட்டு அந்த பிள்ளையின் தாய் கதறுகின்ற காணொளியும் பிரசுரம் ஆகியிருக்கிறது.
“சின்ன பொண்ணுடா அவ…ஏண்டா பசங்கெல்லாம் இப்படி இருக்காங்க… அப்பா ஸ்தானத்துல இருக்க வேண்டியவன் ஒருத்தனே.. சீ… அவன்லாம் அழியனும்டா“
இவன் எந்த பதிலும் பேசவில்லை. அவள் மனநிலை அறிந்து அவளது தோளை வளைத்து கைகளால் சுற்றிக் கொண்டான்.
” இன்னும் எத்தனை பொண்ணுங்கடா… எப்ப இந்த நாய்களுக்கு எல்லாம் அடங்கப் போகுது… இதுக்கு முன்னாடி இப்பிடித்தான், ஒரு பொண்ண 6,7 பேர் சேர்ந்து அழிச்சுடாங்க.. “
இந்த செய்தி குறித்து அவள் எவ்வளவு தூரம் கவலைப்பட்டு இருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.. இந்த நேரத்தில் அவளுக்கு தேவையான ஆறுதல் எதுவோ அதனை கொடுத்தான்….
“இந்த கவர்மெண்ட் எல்லாம் கொஞ்சம் கூட பிரயோசனமில்லை. அந்த 6 பேரையும் கல்லில் அடித்து கொல்லனும். இதெல்லாம் நிறுத்த வழியே இல்லையா ?”
“இருக்குமா. அஞ்சு இல்லை ஒரு மில்லியன் கணக்கான பேரைக் கொல்ல வேண்டி வரும்.”
அவனுடைய பதில் அவளுக்கு விளங்காததால் அழுது சுருங்கிப் போயிருந்த தன்னுடைய கண்களைத் துடைத்தபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“முதலாவது கொல்ல வேண்டியது இந்த நியூஸை போட்டவனதான். யோசிச்சு பாரு. கொஞ்சம் கூட மனசே இல்லாம அவங்க அம்மா கிட்ட போய் திருப்பி திருப்பி அவங்க பொண்ண பத்தி கேள்வி கேள்வி கேட்கிறார்கள். அதுமட்டுமல்ல மொட்டுக்களை பறித்து விட்டார்களாம்… இவங்கள மாதிரி ஆட்கள் இருக்கிறதாலதான் தான் இன்டைக்கு வரைக்கும் பொண்ணுங்க எல்லாம் இப்படியே இருக்கீங்க. பெண்கள் மயில், பெண்கள் குயில், பெண்கள் எல்லாம் மென்மை அடக்கம் எண்டு இருந்தது, இன்னைக்கும் இருக்கு.. இல்லன்னு சொல்லல.. ஆனா ஆண்கள் அன்னைக்கு வரைக்கும் கட்டுப்பாடாக இருந்த பேர்வழிகள். அளவுக்கு மீறிய இச்சை வந்தா காசு கொடுத்து அதைத் தேடி போக கூடியவங்க. தன் புருஷன் வேறு ஒரு பொண்ணோட தான் போயிட்டு வாரான் என்று தெரிந்தும் சமாளிச்சுக்கிட்டு இருந்த மனைவிகள். ஆனா அது இன்னைக்கு இல்ல. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இன்னைக்கு புருஷன இன்னொருத்தரோட கண்டா தூக்கி வீசிட்டு போகக்கூடிய பொண்ணுங்களாக மாறி இருக்காங்க. இன்னும் மொட்டுகளே பூக்களே என்றா என்னதிது. “
“என்னடா சொல்ல வரா நீ ?”
“பொண்ணுங்களை மென்மையானவர்களாக மட்டுமே காட்ட வேணாம்னு சொல்றேன். பொண்ண பூவா நினைக்கிறவன் மட்டும் தான் கசக்குவான். பொண்ணுங்க பூவு இல்ல அவங்களும் ஆலமரம் அப்படின்னு புரிஞ்சவன் மதிப்பா சமமா நடத்துவான். யாரோ ஒருத்தன் நினைக்கிறது இருக்கட்டும் முதலாவது பொண்ணுங்க நீங்க என்ன நினைக்கிறீங்க… “
“ சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் நான் சந்தோஷப்படுவேன், சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் நான் அழுதுருவேன்… நான் ரொம்ப சாஃப்ட் டைப்.. என்னை யாரும் திட்டுனா கூட பொய் ரூமை மூடிட்டு அழுதுடுவேன். இப்படியெல்லாம் சொல்லிக் கொள்றதுல கொஞ்சம் பொண்ணுங்களுக்கு பெருமை… மிச்சத்துல கொஞ்சம், தான் புரட்சிப் பெண்மணி அப்படின்னு சொல்லிட்டு, ஆண்கள் செய்றதுல எது எல்லாம் தப்பான விஷயமோ, எது எல்லாம் உன் பொண்ணுங்களுக்கு வித்தை காட்டுவதற்காகவே செய்கிறானோ, அதுகளை தாங்கள் செஞ்சுட்டு நான் புதுமைப்பெண் அப்படின்னு சொல்லிக்கிறாங்க…. “
“இந்த மாதிரி காத்தடிச்சா விழுற பூவாவோ, தொட்டா குத்துற முள்ளவோ மட்டுமே தங்கள காட்டிக்கொள்ள விரும்புற சிறிய விகிதத்தில் இருக்க பொண்ணுங்க போதும், மிச்ச எல்லா பொண்ணுங்களையும் தீர்த்துக் கட்டுவதற்கு.
“தன்னுடைய அப்பாவை ஹீரோவா பாக்குற பொண்ணுங்களை விட தன்னோட அப்பாவை பிரண்டா பாக்குற பொண்ணுங்களுக்கு வாழ்க்கையில எதையும் எதிர்க்கும் துணிவு இருக்கும்.”
“சின்ன வயசுல இருந்தே நீ பொண்ணு, சாஃப்ட் ஆ இருக்கணும், மெதுவா நடந்து கொள்ளனும், அடக்கமா இருக்கணும்னு சொல்லி சொல்லி வளர்த்தால் எந்த ஒரு பிரயோசனமும் இல்லை. இல்லேன்னா நாங்க படிச்ச குடும்பம் அதனால நாங்க புரட்சிகரமான நடந்துகொள்வோம் அப்படின்னு சொல்லி தன்னோட பொண்ண விகாரமா வளர்ப்பதுலையும் பயனில்லை.”
“சாதாரண மனுஷங்களா வளக்கணும்… அழ வேண்டிய கட்டாயம் வந்தா மட்டும் அழவும், மத்த எல்லா நேரத்தையும் சிரிச்சுகிட்டே எதிர்கொள்ளவும் தைரியத்தோடு வளக்கணும். வளரனும்”
“அப்படி செஞ்சா தான் நாளக்கு நீ எக்சசைஸ் பன்றத ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ போட்டா, அத ‘ஹாட் ஒர்க்கவுட்’ அப்படின்னு ஷேர் பண்ற பிறவிகளை தட்டி கேட்க முடியும்.”
எப்படி ஒரு பையன் இன்னொரு பையன் எக்ஸர்சைஸ் பண்றத ‘ஹாட்’ னு போட மாட்டானோ அதே மாதிரி ஒரு பொண்ணையும் நடத்துற அளவுக்கு நமக்குள்ள சமம் வரணும்.. ரெண்டு வகை உடம்புமே மனித உடம்பு தான் என்ற ஒற்றுமை வரணும்.”
காய்ந்து கலங்கிப் போயிருந்த அவள் கண்களுக்குள் இப்பொழுது சிந்தனை துளிர்க்க தொடங்கியிருந்தது. கற்பழித்தவன் மட்டுமல்ல.. அவனைத் தூண்ட காரணமாக அமைந்திருந்த இந்த சமூகத்தின் எந்த ஒரு பாகமும், அந்தப் பாகம் இன்னொரு மனிதனை குழப்புகின்ற அளவுக்கு வலியதாக மாறும் வரை தடுக்காமல், எதிர்ப்புகளை மேற்கொள்ளாமல் இருந்த நாமும் ஒவ்வொரு வகையில் நடந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு அநியாயத்துக்கும் பொறுப்புதான் என்கின்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது.
“சரி சாக்லேட் சாப்பிடு…”
கண்களைத் துடைத்துவிட்டு, அவன் கொடுத்த சாக்லேட்டை வாங்கி, அதை ஒரு கடி கடித்தாள். திடீரென்று, அவளிடமிருந்து அதனைப் பறித்து பிடுங்கி இவன் கடித்து சாப்பிட்டான்.
“எனக்கு கொஞ்சம்.. உனக்கு கொஞ்சம் .. டீலா ??”
கண்ணீரைத் துடைத்து முடித்துவிட்டு,
“லவ் யூ டா பொறுக்கி…”
அவன் ஆச்சரியத்தில் முற்றுமுழுதாக விரிந்த கண்களுடன்,
“எது ? என்ன சொன்ன ?“
முடிந்தது…
முடிவு : உதவியற்ற ஒவ்வொரு தனிப்பட்ட மனதுக்குமான கடைசி தருணம்
மற்றொரு சிறுகதை வாசிக்க இங்கே அழுத்தவும்