கும்பாபிஷேகம் ஒன்றை தரிசனம் செய்வது எவ்வளவு நன்மை அளிக்கும் என்பது பற்றி தெரியுமா?
இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை. அது எப்போது முழுமை பெறும்?… ஆலயத்தில், ‘கும்பாபிஷேகம்’ நடந்த பின்னர் தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.
கும்பம் என்றால் ‘நிறைத்தல்’ என்று பொருள். நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்கள் மூலம் இறை சக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம். இதனை சைவர்கள் ‘மகா கும்பாபிஷேகம்’ என்றும் வைணவர்கள் ‘மகா சம்ப்ரோக்ஷணம்’ என்றும் அழைக்கிறார்கள்.
மேலும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் யாகங்கள் செய்யப்பட்ட தீர்த்தங்களால் இறைவன் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் மூலமாகவே விக்கிரகங்கள் தெய்வசக்தியைப் பெறுகின்றன.
பெரும்பாலும், கும்பாபிஷேகமானது 12 வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. இதன் காரணம், நாம் கும்பாபிஷேகம் செய்யும் போது சாத்தப்பட்ட அஷ்டபந்தனமானது (மருந்து) 12 வருடங்கள் வரைதான் சக்தியோடு இருக்கும். மேலும் கோயில்களில் ஏதேனும் புனரமைப்பு செய்தாலும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.
கும்பாபிஷேகத்தின் வகைகள்:
ஆவர்த்தம் – புதிதாக கட்டப்படும் ஆலயங்களில் செய்யப்படுவது. இது மும்மூர்த்திகளுக்காகச்
செய்யபடுகின்றன
அனாவர்த்தம் – வெகுநாட்கள் யாராலும் முறையாக பராமரிக்கப்படாமல், பூஜை, புனஷ்காரங்கள் நடைபெறாமல் இருக்கும் ஆலயங்களைப் புனரமைப்பு செய்து பின்னர் செய்யப்படுவது. மேலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்த கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறை.
புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியன பாதிப்படைந்திருந்தால், அவற்றைப் புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறை.
அந்தரிதம் – ஆலயத்தினுள்ளே தகாத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் செய்யப்படும் பரிகாரம்.
கும்பாபிஷேகத்தில்,
கும்பம் – கடவுளின் உடலையும்,
கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் – 72,000 நாடி, நரம்புகளையும்,
கும்பத்தில் ஊற்றப்படும் நீர் – ரத்தத்தையும்,
அதனுள் போடப்படும் தங்கம் – ஜீவனையும்,
மேல் வைக்கப்படும் தேங்காய் – தலையையும்,
பரப்பட்ட தானியங்கள்: ஆசனத்தையும் குறிக்கின்றது.
இது மட்டும் இல்லாமல் யாக மேடையில் சந்தனம், மலர்கள் மற்றும் வஸ்திரம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன
கும்பாபிஷேகத்தில் விக்கிரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ள வேண்டிய பூஜைகள் :
அனுக்ஞை – ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இறைவனின் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
சங்கல்பம் – இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைத்தல்.
பாத்திர பூஜை – பூஜை பாத்திரங்களுக்குரிய தேவதைகளுக்குப் பூஜை செய்தல்
கணபதி பூஜை – கணபதியை வழிபடுதல் .
வருண பூஜை – வருண பகவானையும், சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
பஞ்ச கவ்யம் – பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசு நீர், பசு சாணம் ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் கிரியை.
வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபடுதல்.
பிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.
மிருத்சங்கிரஹணம் – ஆலயம் நிர்மாணம் செய்ய பூமாதேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் பரிகாரம். மண் எடுத்து வழிபடுவது.
அங்குரார்ப்பணம் – எடுத்த மண்ணில் விதைகளைப் பயிரிட்டு முளைப்பாரி வளரச் செய்தல். இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்றவர்களை வழிபடுதல். மேலும் சந்திரனையும் வழிபடுதல்.
ரக்ஷாபந்தனம் – ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் கையில் காப்புக் கட்டுதல்.
கும்ப அலங்காரம் – கும்பங்களை இறைவன் உடலாக நினைத்து அலங்காரம் செய்தல்.
கலா கர்ஷ்ணம் – விக்கிரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்துக்கு மந்திரப் பூர்வமாக அழைத்தல்.
யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.
சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் உள்ள சூரிய சந்திரனை வழிபடுதல்.
மண்டப பூஜை – யாகசாலையை பூஜை செய்தல்.
பிம்ப சுத்தி – விக்கிரகங்களை மந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்தல்.
நாடி சந்தானம் – இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை ஒரு இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்
யாக குண்டத்தின் வகைகள்:
ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைப்பது
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைப்பது
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைப்பது
உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைப்பது
யாக குண்டங்கள் தெய்வங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன. அவை
விநாயகர் – பஞ்சகோணம்
முருகர் – ஷட்கோணம்
சிவன் – விருத்தம்
அம்மன் – யோணி
பரிவாரம் – சதுரம்
விசேஷ சந்தி – 36 தத்துவத் தேவதைகளுக்குப் பூஜை செய்வது. உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது.
பூத சுத்தி – பூத (மனித) உடலை தெய்வத்தின் உடலாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைத்தல்.
ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்.
அஷ்டபந்தனம் – (மருந்து சாத்துதல்) எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல்.
பூர்ணாஹுதி – யாகத்தைப் பூர்த்தி செய்தல்.
கும்பாபிஷேகம் – யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட கும்ப நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல்.
மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்துக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்தல்.
மண்டலாபிஷேகம் – இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்தல்
கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசி நமக்குக் கிட்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்துகொண்டு நன்மைகளைப் பெறலாம். பிறவிப்பெரும்பயன் அடையலாம். ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது.
எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்
பேஸ்புக் பக்கத்தில் எம்மைப் பின்தொடர்ந்து தினமும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளும் பல நண்பர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.