ரோபோட்களின் முக்கியத்துவம்
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ முதன் முறை காதல் அழைக்குதோ” என்ற பாட்டின் மூலம் பிரபல்யம் அடைந்து இன்று இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களின் வாயிலும் கனவிலும் வந்து போகும் ரோபோட் இவன் யார்?
ரோபோட் என்பது பொறியியல் சார்ந்த மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு முகவர் போன்று தொழிற்படும் ஒரு இயந்திரம் ஆகும். இதனை கணனி மூலம் இயற்கப்படுகின்றன, ஏவப்படும் வேலைகளை செய்து முடிப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று என்றும் கூறப்படலாம்.
மறைந்த எழுத்தாளறான சுஜாதா என்பவரே தன்னுடைய எழுத்தின் மூலம் ரோபோக்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தினார். தன்னுடைய “ஜீனோ” மூலம் இன்று தமிழ் நாட்டின் ஒவ்வொருவரின் நாவிலும் ரோபோட் என்ற வார்த்தயை பிரபல்யமாக்கிவிட்டார். மனிதனை ஒத்த உருவத்துடன் இருந்தால் தான் அதற்கு பெயர் ரோபோ என்பது தவறு, தொழிற்சாலைகளில் அதிகமான ரோபோக்களைப் பயன்படுத்துகின்றனர். கார்கள் தயாரிக்கும் இடங்களில் பெரிய பெரிய கைகள் உடைய ரோபோக்களைப் பார்க்கலாம்.
இப்போது பலவேலைகளை மனிதன் ரோபோவிடம் ஒப்படைத்துள்ளான். “ஐரோபோ” என்ற கம்பனி வீடுகளைச் சுத்தம் செய்வதற்கென “ரூம்பா” என்ற ரோபோவை தயாரித்து விற்று வருகின்றது. ரோபோவின் விலை வீழ்ச்சி அடைவதால் அபிவிருத்தியடைந்த நாடுகளில் சிறு வேலைகளைச் செய்ய பாவிக்கின்றனர். அங்கு ஒரு மில்லியனுக்கு அதிகமான வீடுகளில் மலசல கூடம் கழுவுதல், தரை துடைத்தல், புற்களைச் சீராக வெட்டுதல் போன்றவற்றுக்கு பாவிக்கின்றார்கள். இதனால் நேரத்தை மட்டுமல்ல பணத்தையும் சிக்கனப்படுத்தலாமல்லவா?
அதுமட்டுமல்ல சில நாடுகளில் உதாரணமாக ஜப்பான் போன்ற நாடுகளில் வயது முதிந்தவர்கள், தங்கி வாழ்வோர் எண்ணிக்கை அதிகம். இத் தாத்தா பாட்டிமாரை பராமரிக்கும் பாரிய பொறுப்பு ரோபோக்களுக்கே உரியது. அத்துடன் இந்த எந்திரன் பெரியவர்களுக்கு மட்டுமின்றி சிறுவர்களுக்கு பொழுது போக்கு கருவியாகவும் காணப்படுகின்றது.
இவை நோயாளிகளுக்கு அதாவது இயங்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்குக் கூட ஏனையவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் உணவு தயாரித்து வழங்குதல் உட்பட அனைத்து பணிவிடைகளையும் செய்யும் ஆற்றல் கொண்டவை.
நூறு ரோபோக்களில் நாற்பது ஜப்பானில் தான் தயாரிக்கப்படுகின்றது. மனிதர்களை உரித்து வைத்தது போன்ற ரோபோக்களைக் கூட தயாரிக்கின்றார்கள். மிட்சுபிஷி என்றொரு பிரபல கம்பனி “இனி மனிதர்களும் ரோபோக்களும் ஒருவரோடு ஒருவர் வாழும் காலம் அருகில் தான்” என்று சொல்கின்றது.
உலகத்தை ,சமூகத்தை ,மற்ற உயிரினங்களை எல்லாம் காணக்கூடிய செம்மைப்படுத்தக் கூடிய மிகப் பெரிய பொறுப்புக்கள் மனிதனுக்கு உண்டு. மனிதனுக்குரிய அறிவு,சக்தி மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது.மனிதனுடைய மேன்மையே இனம் , அறிவாற்றல், திறமை இவைகளில் அடங்கியுள்ளது.ஆனால் இந்த மனிதக் குலமே ஒன்றுக்கொன்று ஆக்கிரமித்தல், அடிமைப்படுத்தல், போரிடல் இவைகளில் தன் கவனத்தை செலுத்துகின்றது.
நேரடியாக யுத்தத்தில் பங்கெடுக்கவும் யுத்தங்களில் வேவு பார்ப்பதற்கும் ரோபோக்களை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி கம்ப்யூட்டர், ரோபோட் கொண்ட மிலிட்டரி தாங்கிகள் போருக்கு ஆயத்தமாகி வருகின்றன.90cm உயரம் கொண்ட இந்த டாங்கியில் தானியங்கி போர் ஆயுதங்களையும் 8 அதி நவீன வீடியோ காமெராக்களையும் பொறுத்தியுள்ளார்கள். இதன் மூலம் எதிரி இராணுவத்தினரின் பகுதியில் 8km தூரம் வரை சென்று இலக்கை கண்காணிக்க முடிகின்றது. தென்படுகிறவன் நண்பனா அல்லது எதிரியா என்று அறியும் சென்சாரும் உண்டு.
ஆரம்பத்தில் இவ்வகை ரோபோக்கள் எதிரிகள் வைக்கும் குண்டுகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்யப் பயன்பட்டன. இவ் வகை புதிய கண்டுபிடிப்புகளால் உயிர்சேதங்கள் தடுக்கப்படுமா அல்லது இன்னும் அதிகரிக்குமா என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சினிமாவிலும்,கதைகளிலும் ரோபோகளுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. ரோபோவைப் பற்றிய அபரிவிதமான கற்பனையும் பயமும் கலந்து இவை உருவாக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான “ரோபோஸ் ” போன்ற கார்ட்டூன் படங்கள் ஒரு பக்கம் வெளிவர, ஆக்ஷன் படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
The Terminator என்ற திரைப்படத்தில் கூடிய அறிவுடைய ரோபோவானது உருவாக்கப்பட்டு அது மனித குலத்தையே அழிப்பதாகக் கூறப்படுகின்றது. தமிழ் திரைப்படமான எந்திரனிலும் ரோபோவானது அழிப்பதற்கும் கொல்வதற்கும் உருவாக்கப்படுகிறது. பின்பு அந்த ரோபோ தன்னுடைய Hardware யும் Software ஐயும் தரமுயர்த்தி கூடிய அறிவுத் தன்மையையும் ஆற்றலையும் பெற்றுக் கொள்கின்றது. இவ்வகை திரைப்படங்களால் பிற் காலங்களில் ரோபோ மனித குலத்தையே அழித்துவிடுமோ அல்லது அதன் ஆற்றல்கள் மனித குலத்தையே மிஞ்சிவிடுமோ என்ற அச்சமும் மக்களிடேயே நிலவத் தான் செய்கின்றது.