இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
ஊரைக் காக்கும் காவல் தெய்வங்கள்..!!
நம்மை காத்து வருகின்ற தெய்வம், காவல் தெய்வம். காவல் தெய்வங்கள் ஊர் எல்லையில் அல்லது ஏதேனும் ஒரு வயல்மேட்டில் அமைந்திருக்கும். காவல் தெய்வத்தை, எல்லைக் கடவுள் என்றும் சொல்வது உண்டு.
வேலைக்கு செல்லும் போதோ, ஒரு பணியின் நிமிர்த்தமாக வெளியே செல்லும் போதோ காவல் தெய்வங்களை வணங்கிவிட்டு செல்வது வழக்கம். அல்லது காவல் தெய்வம் இருக்கும் திசையை நோக்கியாவது ஒரு கற்பூரத்தை ஏற்றி வணங்கிவிட்டு செல்வது வழக்கம்.
நீண்டதூர பயணம் போகும் முன், வாகனத்தின் முன் சக்கரங்களில் இரண்டு எலுமிச்சை பழங்களை வைத்து நசுக்கிவிட்டு காவல் தெய்வங்களை வணங்கிவிட்டு செல்கிறோம். ஏனென்றால், காவல் தெய்வம் நமக்கு துணையாக இருந்து நம்மை காக்கும்.
காவல் தெய்வங்கள் என்றாலே பெரிய மீசை வைத்து கொண்டு அரிவாள் தூக்கி கொண்டு குதிரை, நாய் போன்ற வாகனங்களை வைத்து கொண்டிருக்கின்ற தெய்வங்கள் தான் நம் நினைவுக்கு வரும்.
ஒரு கிராமத்திற்குள் நோய்கள், திருடர்கள், பஞ்சம், பெருவெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாத வண்ணம், எல்லையிலேயே தடுக்கும் தெய்வம், காவல் தெய்வமாகும்.
ஊர்களில் காவல் தெய்வங்கள் குடி கொண்டதற்கு ஏதேனும் ஓர் பூர்வீக கதை இருக்கும். அந்த கதையை பார்த்தால், யாரேனும் ஒரு நபர் (ஆண் அல்லது பெண்) வஞ்சிக்கப்பட்டு இருக்கலாம். அல்லது துன்புறுத்தப்பட்டு இருக்கலாம். பின்னாளில் அந்த நபரோ அல்லது குடும்பமோ, தெய்வமாகி வணங்கப்படும் வழக்கம் வந்திருக்கலாம்.
கிராமப்புறங்களில் குடிகொண்டுள்ள காவல் தெய்வங்களுக்கு பெரும்பாலும் விசேஷங்கள் எதுவும் விமர்சையாக இருக்காது. அதேநேரம் விசேஷ தினங்கள், திருவிழாக்காலம் என்றால், காவல் தெய்வங்களுக்கு விதவிதமான படையல்கள், அபிஷேக ஆராதனைகள், வேண்டுதல் நிறைவேற்றுவது என அந்த இடமே கோலாகலமாக இருக்கும்.
பெரும்பாலானவர்களுக்கு மாரியம்மன் காவல் தெய்வமாக இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி, அனைத்து கிராமப்புற ஊர்களிலும் மாரியம்மன் கோவில் இருப்பதை நாம் காணலாம். தாயாக இருந்து காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது.
காவல் தெய்வங்கள் மனிதனாக இருந்து தெய்வமாக குடிகொண்டு அருள்பாலித்து வருவதால், ஒரு குடும்பத்தில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றி நன்றாக தெரியும். தன்னை தேடி வருபவர்களை, சின்ன சின்ன தவறுகள் செய்தாலும், அவற்றை பொறுத்து அவர்களை கைதூக்கி விடுகின்றன.
காவல் தெய்வங்களாக இருக்கும் முனீஸ்வரன், ஐயனார் போன்ற தெய்வங்கள் சிலருக்கு குலதெய்வங்களாக இருக்கலாம். காவல் தெய்வத்தின் பரிபூரண ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், குலதெய்வ வழிபாட்டை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும். அப்போதுதான் காவல் தெய்வம் நம்மை காப்பாற்றும்.
நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாக தங்கள் குலதெய்வங்களுக்கும் காவல் தெய்வங்களுக்கும் செய்து வருகின்ற வழிபாடுகளை எந்த காலத்திலும் விட்டுவிடாமல் தொடர்ந்து செய்திட மறவாதீர்கள்.
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.