அமெரிக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலமானது தனது முதலாவது தனியாருக்கான விண்வெளி சுற்றுப்பயணத்தை புதன்கிழமை இரவு மேற்கொண்டது.
இந்த விண்கலம் புளோரிடா மாநிலத்தில் கேப் கெனாவெரல் பிராந்தியத்திலுள்ள கென்னடி விண்கல ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்த விண்கலப் பயணத்திற்கான பயணிகள் தெரிவுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற இரு போட்டியாளர்கள், மருத்துவப் பணியாளர் ஒருவர் மட்டும் அவர்களுக்கு மேற்படி பயணத்திற்கான ஏற்பாதரவை வழங்கிய செல்வந்தர் ஆகியோரே இந்த விண்கலத்தில் பயணத்தை மேற்கொண்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.
இந்தப் பயணம் விண்வெளி சுற்றுலா தொடர்பான முக்கிய முன்னடி எடுத்து வைப்பொன்றாக கருதப்படுகிறது. இந்த விண்கலத்தில் உத்தியோகபூர்வமான விண்வெளிவீரர்கள் எவரும் பயணிக்காது முற்றுமுழுதாக சிவிலிய உறுப்பினர்கள் பயணித்தமை குறிப்பிடத்தக்கது
இவ்வாறு முற்றுமுழுதாக சிவிலிய உறுப்பினர்கள் சகிதம் விண்கலம் ஒன்று விண்வெளிக்கு பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
மேற்படி விண்கலத்தில் பயணத்தை மேற்கொண்ட செல்வந்தரான ஜாரெத் ஐஸாக்மான் ( 38 வயது ) விண்கலப் பயணதிற்கு முன்னர் கருத்து தெரிவிக்கையில் தான் இந்த பயணம் குறித்துப் பெரிதும் பரவசம் அடைவதாக குறிப்பிட்டார்.
இந்த விண்கலப் பயணத்தில் அவருடன் ஹேலி அர்செனியக்ஸ் ( 29 வயது ) மற்றும் போட்டியில் வெற்றி பெற்று தெரிவான சியன் புரொக்டர் (51 வயது) சகிரிஸ் செம்புரோக்கி (42 வயது) ஆகியோர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்
சிறுவயதில் நரம்பு புற்றுநோய்க்குள் உள்ளாகி உயிர் தப்பிய ஹேலி அர்செனியக்ஸ் தென்னசியிலுள்ள சென் ஜூட் சிறுவர் ஆராய்ச்சி மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
அவர் விண்வெளிக்குப் பயணத்தை மேற்கொண்ட மிகவும் வயது குறைந்த அமெரிக்கர் என்று பெயரையும் பெறுகிறார். அத்துடன் அவரது காலில் டைட்டானியம் உலோகம் பொருத்தப்பட்டுள்ள நிலையில் செயற்கை உறுப்பு பொருத்தப்பட்ட நிலையில் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட முதலாவது நபர் என்ற பெயரையும் அவர் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விண்கலத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ள இரு ஆண்களும் பெண்களும் மூன்று நாட்களை விண்வெளியில் கழிக்கவுள்ளனர்.
இந்த பயணத்திற்கு கட்டணமாக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.