தனியன் தோழி, தனிமையை வாழ்வாகக் கொண்ட ஒருவனுக்கும், அவனை ஆற்றுப்படுத்த அவனுக்கு கிடைத்த புதிய தோழிக்கும் இடையிலான அழகிய நட்பை எடுத்துக் காட்டும் கதை.
நான் நேத்திரக்கைதி. வாழ்வின் உணர்வுகளை எழுத்தாக வடிக்கும் எனது விருப்பத்தின் சிறு படிகளில் ஒன்று இந்தக் கதை. இந்தக் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை , கதையை வாசித்து முடித்ததும் கருத்துக் பெட்டியில் அல்லது எமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்வீர்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
தனியன் தோழி
வழக்கமாக 100 தொலைபேசி இலக்கங்களை சேமித்துள்ள ஒருவனது Whatsapp Status 80 பேராவது பார்ப்பார்கள் இல்லையா ?
இவனும் தனது கடைசி Status பற்றி பார்க்க My Status பகுதிக்கு சென்றான். அதற்குள்ளே Views என்ற பகுதிக்கு சென்றான்.
0 Views.
காரணம். Status Privacy ஆனது Share only with என்ற தெரிவிக்கு மாற்றப்பட்டு யாரையும் தெரிவு செய்யாமல் இருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இவனுக்கு மட்டுமே காட்டும். யாரிவன் என்று பார்க்கிறீர்களா ?
இவன்தான் தனியன்.
ஒட்டுமொத்த சம்பாத்தியம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் இருக்கின்ற ஒருவனது வீட்டைப்போலதான் இவன் வாழும் வீடு அமைந்திருந்தது.
இன்று அவனுடைய வீட்டுக்கு முக்கியமாக ஒரு பெண் விருந்தாளி வர இருக்கிறார். வீட்டை அவள் வர முன்பு நாங்கள் சுற்றி பார்த்து விடுவோம். அந்த வீடு ஒட்டுமொத்தமாகவே 8 அடிக்கு 8 அடி இருக்கின்ற ஒரு அறை. அறையின் மூலையில் தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன. அந்தத் தண்ணீர் வசதியை அவன் இரண்டாவது குழாய் எடுத்து சமையலுக்கு தனியாக வலதுபக்க முறையிலும் கழிவு செயற்பாடுகளுக்கு தனியாக இடதுபக்கம் மூலையிலும் இரண்டு அறைகளை ஏற்படுத்தியிருந்தான். சாதாரணமாக அறைகள் வீடு கட்டப்படும் பொழுதே கட்டப்படுவது வழமை. ஆனால் இவனுடைய அறைகள் கொஞ்சம் வித்தியாசமானவை. பத்தடி நீளம் இருக்கக்கூடிய 2 வெண்பலகைகள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கின்ற பாடசாலையில் குப்பையாக வீசி கிடந்தபோது அவற்றை எடுத்து வந்து நிலைக்குத்தாக நிப்பாட்டி அவற்றை அறையின் மேல் தளத்தோடு சங்கிலிகளால் கட்டி தொங்க விட்டிருந்தான். இப்பொழுது ஒரே அறைக்குள் மூன்று அறைகள் ரெடி.
அமர்வதற்கு, படிப்பதற்கு, படுப்பதற்கு, உண்பதற்கு என எல்லாவற்றுக்குமே ஒரே ஒரு கபில நிற சோபா. இவனுடைய சொந்தக் காசில் வாங்கியதுதான். ஒழுங்காக அமர்ந்தால் ஒரே நேரத்தில் மூன்று பேர் அமரக்கூடிய அளவில் நீளமானது. அதன் மீது சாய்ந்து இருந்து கொண்டு எந்த ஒரு நடவடிக்கைகளையும் செய்வது இவனுக்கு பழகிப் போய் விட்ட விடயம். சோபாவுக்கு நேர் முன்னால் குட்டியாக ஒரு மேசை. அந்த மேசையில் ஒரு பாட்டில் தண்ணீர் எப்பொழுதுமே இருக்கும். அதைத்தவிர மஸ்டாங் வடிவ கார் ஒன்று இருக்கும். பயந்துவிடாதீர்கள்… ஆட்காட்டி விரல் அளவுதான்… குட்டி கார்…அதற்கு பக்கத்தில் அவன் செய்து கொண்டிருக்கின்ற வேலையைப் பொறுத்து அவருடைய செல்லிடத் தொலைபேசி அல்லது மடிக்கணனி மாறி மாறி அமர்ந்து கொள்ளும்.
தெரிந்த கதை : வலிந்து மூடும் கண்ணும் தானே இறுகும் இதயமும்
சமையலறை பற்றி சொல்லியே ஆகவேண்டும். சமயங்களில் அதற்குள்ளே பொருட்கள் நிறைந்து இருக்கும். நிறைந்திருக்கும் பொழுது பார்த்தால் சாதாரணமான ஒரு குடும்ப சமையலறை மளிகை கடை போல தோன்றலாம். ஏனெனில் அங்கு எல்லா வகை பொருட்களும் இருக்கும். ஆனால் இவனுடைய சமையலறை கிட்டத்தட்ட சொல்வதானால் ஒரு சேமிப்பகம் தான். நூடில்ஸ் பக்கெட்டுக்களும், சோகோஸ் பெட்டிகளும், சிப்ஸ் வகைகளும் மட்டுமே இருக்கும்.
அவனுக்கு அன்றன்று இருக்கின்ற ரசனையை பொறுத்து பாணோ பரோட்டாவோ பூரியோ வாங்கி சாப்பிடுவான். அது இல்லாவிட்டால் அவனுக்கு தெரிந்த விடயம் சொகோஸ் மற்றும் பால் அல்லது நூடில்ஸ் மற்றும் சோஸ்.
இதைத் தவிர இவன் செய்த முக்கியமான ஒரே ஒரு செயற்பாடு இவனுடைய படிப்பும் தொழிலும். வீட்டின் மத்தியில் மூன்றடிக்கு மூன்றடி இருக்கின்ற ஒரு மிகப்பெரிய மேசையை வைத்து அந்த மேசையில் அவனுடைய படிப்பு மற்றும் தொழில் சம்பந்தமான எல்லா விடயங்களையும் வைத்திருப்பது இவன் வழமை. அந்த வீட்டில் டிவி என்கின்ற சாமானே இல்லை. பதிலாக அன்லிமிட்டட் யூடியூப் பக்கேஜ் ஆக்டிவேட் செய்திருந்தான். 1 டிபி ஹார்ட் டிரைவ் முழுதும் படங்கள் வைத்திருந்தான்,
இந்த வீட்டுக்கு தான் அவன் இன்றைக்கு முதல் முதலாக அவனுடைய தோழியை அழைத்து இருக்கின்றான். கொஞ்ச வாரங்கள் முன்பதாக இவனை சந்தித்து பேசியதில், வலிய இவனோடு நட்பு கொண்டவள் அத்தோழி .
ஆங்கிலத்தில் Polite அல்லது diplomatic என்று சொல்வார்கள். அதாவது எதிரில் இருப்பவர் உடைய மனம் நோகாமல் நடந்து கொள்கின்ற தன்மை. இந்த மாதிரியாக நடந்து கொள்ள விரும்பும் மனிதர்கள் மற்றவர்களை காயப்படுத்த கூடாது என்பதற்காக செய்யாத காரியங்களையும் செய்கின்றோம் என்று ஒத்துக் கொள்வதும், காயப்பட்ட வேளைகளிலும் இல்லை, காயப்படவில்லை பரவாயில்லை என்று பொய்யாக நடிப்பதுமாக உறவுகளை பேணி கொள்கிறார்கள். ஆனால் பின்னாட்களில் அவர்கள் மனதில் ஏற்பட்ட தாக்கத்தை வெளிப்படுத்துவதற்காக அல்லது எடுத்த பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக குறிப்பிட்ட நபரோடு தங்கள் தொடர்பாடலை துடிக்கிறார்கள். தன்னை சுற்றி இருக்கின்ற நூற்றில் 86 வீதமான நபர்கள் இவ்வாறு இருந்ததனால் மீதி இருந்த 14 வீதமானவர்கள் மனம் நொந்தாலும் பரவாயில்லை என்று அவர்களோடு முரண்பட்டு தனிமை வாழ்க்கையை தேர்ந்தெடுத்து யாருடனும் தொடர்பு கொள்ளாமல் வாழ்ந்து வருகிறான் இவன்.
இந்த நேரத்தில் எனக்கு ஒரு திரைப்படக் காட்சி ஞாபகம் வருகிறது. விண்வெளியில் விஞ்ஞானிகள் பறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக முற்றிலும் தன்னிச்சையாக இயங்கும் ஒரு ரோபோட் இருக்கிறது. இரண்டு விஞ்ஞானிகளுக்கு இடையில் வெளிப்படைத்தன்மை பற்றிய ஒரு வாதம் வரும் பொழுது, ஒரு விஞ்ஞானி அந்த ரோபோவிடம் உன்னுடைய வெளிப்படைத்தன்மை செட்டிங்ஸ் எந்த அளவு என்று கேட்கிறான். அதற்கு அந்த ரோபோ 90 வீதம் என்று சொல்வதோடு, 100 வீத வெளிப்படைத் தன்மை என்பது பாதுகாப்பான அல்லது சரியான தொடர்பாடல் முறை அல்ல, அதுவும் முக்கியமாக உணர்வுபூர்வமான உயிரினங்களோடு தொடர்பு படும்போது அது ஆபத்து எனக் கூறுகிறது.
எவ்வளவு உண்மை…. மனிதர்களான நாங்கள், உணர்ச்சிவசப்பட்ட உயிரினங்கள், நூறு வீத வெளிப்படையாக இருக்கின்ற ஒருவரை பேசத் தெரியாதவன் என்கின்றோம், வெளிப்படைத் தன்மை குறைவாக இருக்கின்றவரை பொய்க்காரன் என்கின்றோம்.
பெண்களின் விடயத்தில், இந்த இரண்டு வகைகளுக்குமான பெயர்கள் ஆட்டிட்யூட் காட்டுபவள் மற்றும் ஏமாற்றுக்காரி…
இந்த தத்துவ தாபங்கள் எல்லாம் கேட்கும் பொழுது நாம் தலையை ஆட்டுவதோடு சரி, மறந்து விடுவோம்… அதனால் பழையபடி அவனுடைய கதைக்குள் போவோம்.
இவ்வாறு மனிதர்களை ஒதுக்கி வாழ நினைத்ததால் அவள் இவனோடு நட்பு கொள்ள வரும் பொழுது கூட வேண்டாம், வேண்டாம் என்று விலகி சென்றான். ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக அவள் வலிய இவனோடு நட்புக்கொண்டு இன்று அவனது முழு சம்மதமும் இல்லாமல் அவனுடைய வீட்டுக்கும் வருகிறாள்.
ச்ஸ்ஸ்ஸ்ஸ்…
ஒரேடியாக மழை பெய்வது போன்ற ஒரு ஓசை. முற்றுமுழுதாக இயற்கையை காதலித்தவன் தன்னுடைய வீட்டின் பெல் சத்தத்தைக் கூட இயற்கை சத்தமாகவே வைத்திருந்தான். வாசலில் அவள்தான் வந்திருக்கிறாள்.
அவன் போய் கதவை திறந்தான்.
“ஹாய் டா….”
“வாங்க… வீடு கொஞ்சம் ஒரு மாதிரி தான்; நான் சொல்ல சொல்ல நீங்க எதுவும் கேட்கல உட்காருங்க…”
“பேசாம மாலை போட்டு வர வைத்திருக்கலாமே… முடிஞ்சா அப்படியே ஒரு பக்கட் தண்ணியையும் கொண்டு காலையும் கழுவி விடு… வாங்களாம் வாங்க… வாடின்னு சொல்லுடா ..”.
அவளது தடாலடி அன்பு இதுவரை அவன் வேறு யாரிடமும் உணர்ந்திடாத ஒரு அன்பு. எதையும் எதிர்பார்க்காமல் தானாகவே வந்து சேர்ந்த இவளை வெறுக்கவும் முடியாமல், அதேவேளையில் தன்னுடைய தனிமை கோரம் அவளைத் தாக்குவதை அனுமதிக்கவும் முடியாமல் ஒட்டுமொத்த குழப்பத்தின் உருவமாய் மாறி நின்றான்.
அவனிடம் அவள் எதையும் கேட்க விரும்பவில்லை. அனுமதி என்பதைக் கூட எதிர்பார்க்கவில்லை. தன் கையில் கொண்டு வந்த பையோடு சமையல் அறைக்குள் போனாள்.
இயற்கையில் எல்லாவற்றுக்குமே ஒரு தீர்வு இருக்கிறது.
நெருப்பையும், கற்களையும் தாங்கிக்கொண்டு நிற்கின்ற இறுக்கமான பூட்டுகளும் சரியான ஊசி உள்ளே நுழைந்தால் சலனமே இல்லாமல் திறந்து கொள்கின்றன. இவனது தனிமைக்கு தேவைப்பட்ட ஊசியும் வஞ்சனை இல்லாத உண்மையான பாசம் மட்டுமே. அது ஒரு தோழியாகவோ, ஒரு அண்ணனாகவோ அல்லது முற்றிலும் புதிதான யாரோ ஒருவராலோ ஏதோ ஒரு வடிவத்தில் கிடைத்திருந்தால் இவன் இந்தத் தனிமையை தேர்ந்தெடுத்து இருக்க மாட்டான். உண்மையைச் சொல்லப்போனால் அவனுக்கு தேவையான அந்த உண்மையான பாசம் தனிமையிலே அவனுக்கு கிடைத்ததை உணர்ந்ததாலோ என்னவோ இந்த வாழ்க்கையை அவன் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
“டேய் கழுதை , இந்தா இதை குடி…”
அன்பில் அடுத்தவர் சந்தோஷத்துக்காக அதிகாரம் இருக்கும்போது அது அடக்குபவருக்கு தலைக்கனத்தையோ அடக்கப்படுபவருக்கு கவலையோ அளிப்பதில்லை.
இவனை காதலித்து ஏமாற்றியவர்கள் கூட இவன் மீது இவ்வாறான அன்பை பொழிந்ததில்லை. இவனை கழுதை என்று அவள் கூப்பிடுகிற ஒவ்வொரு நொடியும் இவன் முகத்தில் சிரிப்பு தாண்டவமாடும். உண்மையிலேயே மனதுக்குள் எக்கச்சக்க மகிழ்ச்சியை உணர்கின்ற ஒரு தருணம் அது. அவளை உடனே ஒட்டுமொத்தமாய் பாய்ந்து கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கும் இவனுக்கு. ஆனால் அவள் தனது தோழி என்கின்ற எண்ணத்தை விட அவள் வருங்காலத்தில் இன்னொருவனுக்கு மனைவி என்கின்ற எண்ணம் இவன் மனதில் அடிக்கடி தோன்றி அந்த உணர்வுகளை கட்டுப்படுத்தி விடும்.
அவள் கரத்தில் கொடுத்த டீயை வாங்கி குடித்துக் கொண்டே தான் அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்துக்குள் அவளாகவே சென்று தனது சமையலறையில் தேனீர் தயாரித்த அந்த உரிமையைப் பற்றி எண்ணி வியப்பில் ஆழ்ந்திருந்தான்.
“நீ தனியா இருக்க அதற்கான காரணம் எனக்கு புரியுது. நீ நினைக்கிற மாதிரி எல்லாருமே ஒருவகையில் கொஞ்சம் நடிக்க தான் செய்வாங்க. ஆனா அதுக்காக எல்லாரும் உன்னை விட்டு பிரியருதுக்காக தான் இப்படி செஞ்சாங்க எண்டு நினைக்கிறது தப்பு. நீ இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பானு அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா சிலவேளைகளில் அவங்களுடைய நடத்தைகளை மாத்தி இருக்கலாம். எல்லாருக்கும் நீ ஒரு வாய்ப்பு மறுபடியும் குடுக்கணும்.”
“மியாவ் ..”
பூனை கத்தியது என்று நினைக்காதீர்கள்… எதற்காகவோ, எதனாலோ அவன் அவளோடு உரையாடும் பொழுது அவளை மியாவ் என்று அழைக்க முடிவு செய்திருந்தான். அது அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. வயதுக்கு மீறிய அனுபவம் கொண்டிருந்த அவள் அவனோடு பேசிய இரண்டே வாரத்தில் அவனை இவ்வளவு தூரம் மாற்றி இந்த அளவுக்கு கொண்டு வந்திருந்தாள். அவனை முழுமையாக புரிந்து கொண்டு அவனுக்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை செய்துகொண்டிருந்தாள். இன்றைய வீட்டு பயணமும் அதற்கான அடுத்த கட்டம்தான்.
“மியாவ்… நீ சொல்ற மாதிரி இல்ல திடீர்னு என்னால போய் எல்லாத்தையும் பேச முடியாது… அவங்க கிட்ட பேசினாலும் அவங்க என்கிட்ட திரும்பி பேசனும்ன்ற கட்டாயம் அவங்களுக்கு இல்லை”
“கழுதை, நிப்பாட்டு..” இவ்வளவும் தான் அவள் வாயால் சொன்ன வார்த்தைகள். தன்னுடைய இரண்டு கைகளையும் நீட்டினாள். முதன்முதலாக நடக்க பழகுகின்ற குழந்தையை ஒரு அன்னை அழைப்பது போல தன்னுடைய கைகளை நீட்டி அவனை தன்னிடம் வருமாறு அழைத்தாள். அவனுக்குப் புரியவில்லை. கைகளை நீட்டி அழைத்துக்கொண்டே அவனை நெருங்கினாள். அவனும் அவளுக்கு பக்கத்தில் மந்திரிக்கப்பட்டவன் போல மனதில் பத்தாயிரம் எண்ணங்களை சுமந்து கொண்டே நகர்ந்தான். தன்னுடைய இரண்டு கைகளையும், ஒன்று அவனுடைய தோளுக்கு மேலாகவும் மற்றையது கீழாகவும் கொண்டு சென்று அவனுடைய முதுகை பற்றினாள். அவளுடைய உடல் இவனுடைய உடலோடு முழுவதுமாக அணைக்கப்படவில்லை, ஆனால் தோள்கள் சேர்ந்திருந்தன. தனது நாடியை அவனது கழுத்துக்கு பக்கமாக இடது தோளின் மீது பதித்து தோளுக்கு மேலால் கொண்டு சென்றிருந்த வலது கையால் அவனது முதுகை தடவியபடி,
“எல்லாம் சரி ஆகிடும் டா… எல்லாம் சரியாகிடும்…நீ நல்லவன்டா.. எல்லாமே சரி ஆகிடும்… ஒகே….”
எனச்சொல்லி அவனை ஆற்றுப்படுத்தி கொண்டு இருந்தாள்.
இவன் காதலித்த நேரத்தில் சைவ காதலையே கடைப்பிடித்தான். கை குலுக்கியது கூட இல்லை. ஆகவே அணைப்பு என்பது இவனுக்கு முதன் முறையாக ஏற்பட்டிருக்கின்ற அனுபவம். அதிலும் தன்னுடைய சக வயது பெண்ணொருத்தி அணைப்பது என்பது அவனுக்கு முற்றிலும் புதிதான விடயம். ஆகவே இவனுக்குள் எந்த வகையிலான மோக எண்ணங்களும் எழவில்லை. பதிலாக அணைப்பு, காதல், முத்தம், நட்பு எல்லாமே இரண்டு ராட்சத அணு கட்டமைப்புக்குள் ஏற்படுகின்ற ரசாயன மாற்றங்கள் என நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு அதையும் மீறி உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய சக்தி அது என புரிந்தது.
“நான் சொல்றதை கேளு, நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்… நீனா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நீ இன்னைக்கு என்ன நிலைமையில் இருக்கியோ அந்த நிலைமையை நான் அனுபவிக்க இருந்தப்போ எனக்கும் ஒரு பிரண்டு தான் உதவி பண்ணான்.. இன்னைக்கு அவன் உயிரோட இல்லாட்டியும் கூட, உன்னை பார்க்கும்போது எனக்கு அவனுடைய ஞாபகம் தான் வருது. அன்னைக்கு அவனை கடவுள் என்கிட்ட அனுப்பி வச்ச மாதிரி இன்னைக்கு உன்கிட்ட என்ன கடவுள் அனுப்பியிருக்கலாம்.”
“நம்பு டா குட்டி.. நீ தனியா இல்லை. மத்தவங்க சொல்ற மாதிரி நான் உனக்காக இருக்கேன்னு சத்தியம் பண்ண மாட்டேன். ஆனா நான் இருக்கிற ஒவ்வொரு நாளும் நான் உன்னை பிரிஞ்சிறக்கூடாது எண்டு நீ நினைக்கிற அளவுக்கு உன் மேல உண்மையான நட்போடு இருப்பேன். அத நான் சொல்றதை விட, செஞ்சு உன் முகத்தில் சிரிப்பை கொண்டுவந்து அதை நானே உறுதிப்படுத்துகிவேன்”.
உண்மையிலேயே அடிமைப்படுத்துகின்ற அன்பு என்பது இதுதான் போலும். எந்த இடத்திலும் சுயநலமும் எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு ஜீவன் முற்றுமுழுதாக தன்னை உங்களிடம் அர்ப்பணிக்கின்றது. அந்த இடத்தில் இதுவரை நீங்கள் கடைபிடித்து கொண்டிருக்கும் கொள்கைகள் எல்லாம் சாம்பல் தான்.
அவளுடைய அணைப்பில் புதைந்திருந்த வேளையில் அன்பையும் தன் வாழ்வில் கிடைக்காத நட்பையும் உணர்ந்தவன், அவள் வார்த்தைகள் தன்னை சரிப்படுத்தத்தான் என பூரணமாக நம்பினான். யார் மறுபடியும் என்னை காயப்படுத்தினாலும் உனக்காக தாங்கிக் கொள்வேன். உன்னைப் போல ஒரு சின்னப் பறவையா வாழ்வேன். – மனதுக்குள் நினைத்துக் கொண்டான்
அதேபோல தன்னுடைய மனதில் இதுவரை விதைத்து வைத்திருந்த தனிமையை கொஞ்சம் தளர்த்தி விட்டு தன்னுடைய whatsapp status privacy settings னை All my contacts இற்கு மாற்றினான்.
முற்றும்
மறக்காமல் உங்கள் கருத்துக்களையும், அறிவுரைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் திருப்பத்தை உண்டாக்கிய தோழி அல்லது உங்களுக்கு தோழியாக கிடைக்க வேணுமென நீங்கள் விரும்பும் நபரிடம் இக்கதையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளத்தில் கருத்தைப் பகிர கீழே உள்ள பொத்தானை அழுத்துக
தனியன் தோழி முகப்பு பட உதவி : static.ffx.io/images