நான் உங்கள் நேத்திரக்கைதி. என்ன அறிவுரையா எனக் கேட்டால், சத்தியமாக இல்லை. கொஞ்சம் யோசிக்கப் போகிறோம். ஒன்றாக சேர்ந்து; யோசிக்காத முறையில். வேலையோ, கல்வியோ – பொறுப்புக்களும் கடமைகளும் நம்மை நிறைத்து மூச்செடுக்கக் கூட நேரமில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எங்கு சிந்தனை செய்வது என நீங்கள் கேட்கலாம். இக்கட்டுரையை தேநீர் அருந்திக் கொண்டே வாசியுங்கள். உங்கள் உடலைத் தேநீரும், மனதை இந்த உரையாடலும் சற்று ஆழமான ஆறுதலுக்குள் எடுத்துச் செல்லட்டும். ஒரே ஒரு கண்டிஷன் மக்களே, “சிந்தனை செய்யுங்கள்” என்று வரும் இடத்தில் எல்லாம் கட்டாயம் வாசிப்பதை நிறுத்தி யோசிக்க வேண்டும். இப்போது உள்ளே போகலாம்.
தேநீர்ச் சிந்தனைகள்
அந்த ஒரு நட்பு
சிந்தித்திருக்கிறீர்களா ? உங்களுடன் இன்றைக்கு இருக்கும் இதே நண்பர்கள் உங்களுடன் இல்லாமல் வேறு யாரேனும் அந்த இடத்தை நிரப்பி இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படிப் போயிருக்குமென யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா ? சிலருக்கு வெறும் கல்வி வாழ்க்கை மட்டும் மாறியிருக்கலாம். சிலருக்கு தொழில். ஆனால், நம் சிந்தனையில் இடம்பெறாத உண்மையான ஆழமான பிரதேசங்களை சிந்தனை செய்ததுண்டா ?
உங்களுக்கு பரீட்சை நேரம் பதில் காட்டிய அந்த படிப்பாளி நண்பனை நினைவு இருக்கிறதா ? திடீரென பாக்கெட்டில் இருக்கும் ஒட்டையைக் கண்டுபிடித்த வேளையில் பஸ் காசு 10 ரூபா எடுத்துக் கொடுத்தவனை நியாபகம் இருக்கிறதா ? உங்களோடு ஜோடி போட்டு நாடகமாடி பாடசாலைக் கூட்டத்திலிருந்து தப்ப மயங்கிய நண்பனை நினைவு இருக்கிறதா ? விளையாட்டு தினமன்று உங்கள் நண்பர்கள் எல்லாம் மற்ற இல்லத்தில் இருக்க, உங்களுடன் துணையாக உங்கள் இல்லத்தில் நின்ற நண்பனை நினைவு இருக்கிறதா ? திடீரென பந்து பக்கத்துக்கு காணிக்குள் சென்றபோது தயங்காமல் மதிலேறிப் போன அந்த ஒற்றை தைரியசாலியை நினைவு இருக்கிறதா ?
இந்த ஒவ்வொரு நண்பனும் / ஒரே நண்பனும் உங்கள் மனதில் அடிக்கடி தோன்றாவிட்டாலும், இவர்கள் இல்லாத அந்த ஒவ்வொரு தருணங்கள் எவ்வாறாக உங்கள் வாழ்வை மாற்றியிருக்கலாம் என சிந்தனை செய்யுங்கள். இப்படி ஒரு மாற்றம் நமக்கு அடுத்த சந்ததிக்கு கிடைக்குமா ? நம் வாழ்வில் நம்மைத் தேடி வந்து கிடைக்கும் விடயங்களின் அருமை நமக்கு எவ்வளவு தூரம் புரிவதில்லை என பாருங்கள்.
மறந்த காதல்
சிந்தித்திருக்கிறீர்களா ? உங்கள் காதல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எதிர்பாலினத்தவர் மீதோ, உங்களுக்கு பிடித்த வேறொரு நபர் மீதோ, கொஞ்சிக் குதிக்கும் உங்கள் செல்லப் பிராணி மீதோ, தனிப்பட்ட கலையின் மீதோ, அள்ளிக் கொடுக்கும் இயற்கை மீதோ, அல்லது அதன் சிறிய பாகமொன்றின் மீதோ, தனிமையிலோ, இசையிலோ, ஜன்னல் இருக்கையிலோ, நிலவிலோ, மழையிலோ… எதன் மீது உங்கள் காதலை உங்களையே அறியாமல் பொழிகின்றீர்களோ அந்தக் காதல் காலப்போக்கில் மறந்து விடுவதைக் கண்டிருப்பீர்கள்.
வாழ்க்கை உண்மையிலே தரமான ஆசிரியை. பாடங்களை கராறாகப் புகட்டுவதில் அவளை விஞ்ச ஆளில்லை.
சந்தோஷத்துக்கு காரணமில்லாத பொழுது கவலையும் வராமலே இருக்கிறது. சந்தோஷம் வந்தால் மட்டும் கவலைக்கும் பாசம் பொங்கிவிடுகிறது.
இவ்வாறு கவலை போட்டு வாட்டும் கொடுமையான நேரங்களில் நமது எண்ணம் எவ்வாறிருக்கும் ? “சே! இப்போது தனியாக இருந்தால் எப்படி இருக்கும்”,”இப்போது அவன்/அவள் இருந்தால் எப்படி இருக்கும்””இப்போ என்னோட ஊர்ல இருந்தால் எப்படி இருக்கும்”. சிந்தனை செய்யுங்கள். உங்களைக் கவலையின் போது தழுவிக் கொள்ளும் இந்த வசனங்களின் கருப்பொருள் யாரென்று சிந்தியுங்கள். அதுதான் நீங்கள் மறந்த உங்கள் உண்மையான காதல்.
பிரச்சனைத் துன்பம்
கவலையும் துன்பமும் இருக்கின்றன.அவை தன்பாட்டில் இருக்கின்றன. உங்களுக்குத் பிரச்சனை/தடை என்று வரும்போது நீங்கள் அவற்றில் ஒன்றைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறீர்கள்.
சிந்தனை செய்யுங்கள்
கவலை வருகிறது என்போம், அழுகை வருகிறது என்போம்.
எங்கு வருகிறது ? ஏன் இப்போது வருகிறது ?
உங்களிடம் தான் வருகிறது. உங்கள் உணர்வுகளை முறையாக வெளிப்படுத்த வருகிறது. நீங்கள் இப்போது பிரச்சனையின் காரணமாக துவண்டதால் உங்களுக்கு துணை செய்ய வருகிறது. அப்போது அழைத்தவர் யார் ? நீங்கள்தான். உங்களுக்கு வந்த பிரச்சனையை கட்டிபிடித்துக் கொண்டு இப்படி ஆகி விட்டதே, அப்படி ஆகி விட்டதே எனப் புலம்பும் நீங்கள்தான் அதனை அழைத்தவர். சிந்தியுங்கள். உங்களைத் தேடி வருகிற ஒருவர்தான் வாழ்க்கைத்துணை. மற்றவர்கள் எல்லாம் விருந்தினர்கள். மனிதனோ, சம்பவமோ, பிரச்சனையோ, உணர்வோ கூட விருந்தினர்தான். வர விடுங்கள். அதனை எப்படி உபசரிக்க வேண்டுமோ அப்படி உபசரியுங்கள். அதனைத் தாண்டி வந்து விடுங்கள். அதற்கு மேல் இடம் கொடுத்தால் அது மடத்தைப் பிடித்து விடும்.
அழகு
எல்லாரும் சொல்வது தானே என்ற யோசனை தோன்றலாம். உண்மையிலே எந்த அழகு நிரந்தரமல்ல எனக் கேட்கிறீர்களா ? எந்த அழகுமே நிரந்தரமில்லை. உடலோ, மனதோ, அறிவோ எதுவுமே… அழகாய் இருந்தால் நிரந்தரமாய் இருக்காது.
உடல் அழகு வயதோடு கரைந்து விடும். இருப்பதிலேயே மிகவும் நிரந்தரமற்ற ஒன்று அதுதான். மன அழகு ? அதெப்படி நிரந்தரமற்றது என்கிறீர்களா ? நான் அவர்களது குணம் மாறுவதைப் பற்றி பேசவில்லை. உங்களுக்கு மனதளவில் மிக அழகாகத் தெரிந்த நபரை நிச்சயம் நீங்கள் இரசிப்பீர்கள் அல்லவா ? நீங்கள் இரசிக்க ஆரம்பித்த நாள்முதல் எத்தனை நாட்களுக்கு அவர்களுடைய மன அழகு உங்களை சாதாரண நிலையில் வைத்திருந்தது ? அந்த நபருடன் ஏற்பட்ட முதல் மனக் கசப்பு எவ்வளவு தூரம் உங்களுடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது ? நீங்கள் அசந்து ரசித்த மன அழகு நீங்கள் அவர் மீது கோபப்பட்ட நேரத்தில் எங்கே போனது ? அந்த அழகும் நிரந்தரமாக நிற்கவில்லை அல்லவா ? சிந்தனை செய்யுங்கள்.
புதிதாக இருக்கும்போது எல்லாமே நமக்கு அழக்காகத்தான் தெரியும். எவ்வளவு தூரம் மாறினாலும், பழகினாலும், வழமையாக ஆனாலும் எந்த மாற்றத்தையும் காட்டாத ஒன்று இருக்குமானால் அதுவே உண்மையாக நிரந்தரமான அழகு.
தனியன் தோழி : திறக்காத பூட்டுக்களுக்கான சரியான ஊசி | கதை 4
கவலைக் காரணம்
இவ்வளவு நாளாக உங்களை வாட்டிய மிகப்பெரிய துன்பம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். துன்பத்துக்கான காரணம் நீங்கள்தான் என்றால் நம்பமுடிகிறதா ? மேலே 3வது கவிதைக்கான விளக்கத்திலேயே பாதி புரிந்திருக்க வேண்டும். அங்கு, பிரச்னையைத் துன்பமாகப் பார்ப்பது நாம்தானென கூறியிருந்தேன். இது இன்னும் கொஞ்சம் வித்தியாசம். நமது கவலைக்கு அல்லது கண்ணீருக்கான காரணம் எதுவென நாம் கேட்டால் ஏதாவது ஒரு பிரச்சனை அல்லது பிரிவு அல்லது ஏமாற்றம் அல்லது தோல்வியைச் சாடுவோம். சிந்தனை செய்யுங்கள்.
அந்தத் துன்பம் இப்போது உண்மையில் உங்களோடு இருக்கிறதா ? நிச்சயம் இல்லை அது நடந்து முடிந்து நிமிடங்கள்,நாட்கள், மாதங்கள்,வருடங்கள் கூட ஆகியிருக்கலாம். அப்போது உண்மையில் இப்போது துன்பத்தைத் தருவது எது ? அந்தத் இழப்பு பற்றிய உங்களுடைய எண்ணங்கள் தான். அவற்றை நீங்களும் விடாமல் பற்றிக் கொண்டிருப்பதனால்தான், அவற்றை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துவதால்தான் துன்பம். ஏதேனுமொரு பொருளோ, இடமோ சம்பவமோ வார்த்தையோ பாடலோ நியாபகத்தைத் தூண்டலாம். அதற்காக துன்பத்தை அனுபவிக்கப்போவது பாடல் அல்ல. நீங்கள்தான். பழியை பாடல் மீது போட்டு, அது தொடக்கி விட்ட நினைவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது நீங்கள் தான். அதனால் துன்பமும் உங்களுக்குத்தான். விட்டுப் போக விடுங்கள். இல்லையேல், துன்பத்துக்கான காரணம் நீங்கள்தான் என்பதை உணர்ந்து ஒப்புக் கொள்ளுங்கள்.
இவ்வளவும் போதும். தேநீர் முடிந்திருக்கலாம். சிந்தனை நிறைந்திருக்கலாம். இப்போது இவ்வார்த்தைகள் உங்களுக்கு கொடுத்த நினைவுகளை சரியான முறையில் வழிப்படுத்துங்கள். வாசிக்கும்போது எழுந்த உணர்வலைகளை சரியாக நெறிப்படுத்துங்கள். அடுத்த தேநீரில் உங்களை இன்னும் சில அழகிய வரிகளோடு சந்திக்கிறேன்.
முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன். உங்கள் சிந்தனைகள் மற்றும் எண்ணங்களை உங்கள் பெயருடன் பதிவிட விரும்பினால் நிச்சயமாக அதனை அடுத்த வாரம் கவிதைகளில் உங்கள் பெயரோடு சேர்த்துக் கொள்கின்றேன்.
கீழே தரப்பட்டுள்ள எமது பேஸ்புக் பக்கத்துக்கு சென்று அதனை குறுஞ்செய்தியாக அனுப்பி விடுங்கள்.
மனித உணர்வுகளை இழைக்க விரும்பும் எனது கதைகளை வாசிக்க விரும்பினால் கீழே உள்ள பட்டன் உங்களை அதற்கு வழிகாட்டும்
அதுவரை நான் உங்கள் நேத்திரக்கைதி