தமிழ்க் கலாச்சாரமும் இந்துப் பாரம்பரியமும் இந்த உலகத்துக்கு சொல்லியிருக்கும் எத்தனையோ விடயங்கள் கட்டுக் கதையாக தெரிந்தாலும் விஞ்ஞானம் இன்று அவற்றை நிரூபித்து உண்மையை உலகுக்கு உணர்த்துக்கிறது. அந்த வகையில் வராக அவதாரம் அசுரனை வதம் செய்த கதைக்கு பின்னால் உள்ள விஞ்ஞானம் கூறும் உண்மைகள் இதோ :
வராகம் பற்றிய சந்தேகங்கள்
- அசுரன் பூமாதேவியை கடலில் மறைத்தானாம். அவளை வராகம் என்ற காட்டுப் பன்றி மீட்டு வந்ததாம்.
- பூமியில் தானே கடல் உள்ளது? அசுரன் பூமியை எப்படி கடலுக்குள் மறைத்து வைக்க முடியும்?
- பன்றி எப்படி உலகைத் தூக்கி வரமுடியும்?
விஞ்ஞான ரீதியான விளக்கம்
ஒளியை பரதிபலிக்காத, மலட்டு நியூட்ரினோக்கள் (Sterile neutrinos) எனப்படும் அணுத்துகள்களால் ஆன கரும் பொருள் மேகக் கூட்டங்கள்(Dark matter cloud) அண்டவெளி முழுவதும், கரும் பொருள் கடலாக(Dark matter ocean) பரவி உள்ளன. இந்த கரும்பொருள் மேகக் கூட்டங்கள் தங்கள் ஈர்ப்பு விசையால், இயக்க விலகல் அடையும் கோள்களை அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் கொண்டு போய் சேர்க்கின்றன என்பதை கி.பி 1930ல் ஃபிரிட்ஸ் ஸ்விக்கி (Fritz Zwicky) என்ற விண்ணியலாளர் கண்டறிந்தார்.
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் அளவை ஒத்த, அதாவது பூமியின் அளவில் பாதி அளவைக் கொண்ட தியா(Theia) என்ற கிரகம் பூமியை தாக்கியதில், பூமியின் கடினமான மேற்பரப்பு தகர்ந்து 7 கண்டங்கள் மற்றும் பள்ளங்கள் உருவானது. பூமியின் அச்சு 23.44° சாய்ந்தது.
தியாவிலிருந்து சிதறிய துண்டுகள் ஈர்ப்பு விசையால் திரட்டப்பட்டு சந்திரன் உருவானது. பூமியில் உள்ள கடல்களின் பெரும் பகுதி தியா கோளினால் உருவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வை விண்ணியல் ஆய்வாளர்கள் ராட்சத தாக்க கருதுகோள் (Giant-impact hypothesis) என்று அழைக்கிறார்கள்.
மேலும் இந்த ராட்சத தாக்கத்தின் போது இரண்டு சந்திரன்கள் உருவானதாகவும், தற்போதுள்ள சந்திரனில் மூன்றில் ஒரு பங்கு அளவு கொண்ட மற்றுமொரு சந்திரன், தற்போதுள்ள சந்திரனில் மோதி இணைந்து ஒரே சந்திரன் உருவானது என்றும் விண்ணியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதற்கு சாட்சியாக ஆய்வாளர்கள் காட்டுவது…
- சந்திரனின் ஒருபக்கம் தட்டையாகவும், மறுபுறம் தடித்தும் காணப்படுவது
- சந்திரனில் பள்ளங்கள் காணப்படுவது மற்றும்
- சந்திரனின் மேற்பரப்பில் பலநூறு கிலோமீட்டர் நீளமும், 20 கிலோமீட்டர் ஆழமும் கொண்ட விரிசல் காணப்படுவது.
- இந்த விரிசல் ஒரே ஒரு சிறு கோளின்(Asteroid) தாக்குதலால் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே பூமிக்கு இரண்டு சந்திரன்கள் இருந்தது உறுதியாகிறது.
விண்வெளியில் கோள்களும் சிறுகோள்களும் தங்கள் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி ஒன்றோடொன்று மோதிக்கொள்ளக் காரணம், அவற்றின் அருகில் சுற்றி வரும் பிற கோள்களின் ஈர்ப்பு விசையால் உருவாகும் இயக்க விலகல் (Gravitation perturbation) என்று விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
தியா என்ற கோள் பூமியின் மேல் மோதியது கூட சுக்கிரனுடைய(Venus) ஈர்ப்பு விசையால் உண்டான இயக்க விலகல் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஈர்ப்பு விசைகளும், இயக்க விலகல்களும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் அனைத்துக்கும் சாத்தியமே.
ஆனால் நட்சத்திரங்களும் கோள்களும் சிதறி ஓடாமல் அவற்றின் கட்டமைப்பை உறுதி படுத்துபவை விண்வெளி முழுதும் பரவியுள்ள கரும் பொருள் (Dark matter) எனப்படும் மேகக் கூட்டங்கள். இவை ஒளியை பிரதிபலிக்காத மலட்டு நியூட்ரினோக்கள் (Sterile neutrinos) எனப்படும் அணுத்துகள்களால் ஆனவை. இவை தங்களுடைய ஈர்ப்பு விசையால் நட்சத்திரங்களையும், கோள்களையும் அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் கட்டுப் படுத்துகின்றன.
கரும்பொருள் மேகக் கூட்டங்கள் பூமியை சுற்றிலும் கூட உள்ளன. சந்திரன் மற்றும் பூமியின் ஒட்டுமொத்த நிறையானது(mass) தனித் தனியே அவற்றின் நிறைகளின் (mass) கூட்டுத் தொகையைவிட அதிகமாக உள்ளது, இது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே பூமியை சுற்றி கரும் பொருள் மேகக் கூட்டம் உள்ளதை நிரூபிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே தியா என்ற கோள் பூமியைத் தாக்கியதில், பூமி அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகிச் சென்று, கரும் பொருள் கடலில் சேர்ந்துள்ளது. கரும் பொருள் மேகக் கூட்டம், தன் ஈர்ப்பு விசையால் பூமியை அதன் சுற்றுவட்டப் பாதைக்கு கொண்டு போய் நிலை நிறுத்தியுள்ளது. உடைந்த தியா இரண்டு சந்திரன்களாக மாறியுள்ளது. தியாவின் தாக்குதல் பூமியின் மேற்பரப்பை உடைத்து கண்டங்களையும், கடல்களையும் உருவாக்கியுள்ளது.
தன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகிச் சென்றதால் உயிர்கள் வாழத் தகுதியான சூழலை இழந்த பூமி, கரும் பொருள் மேகக் கூட்டத்தின் ஈர்ப்பு விசையால் மீண்டும் தன் சுற்றுவட்டப் பாதையில் இணைந்து உயிர்கள் வாழத் தகுதியான உலகமானது.
மேற்கண்டவை தற்போதைய விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் விளக்கங்கள்.
வேதகாலத்தில் இந்த விண்ணியல் நிகழ்வு எவ்வாறு விளக்கப்பட்டது?
ஹிரண்யக்ஷன்(தியா) என்ற அசுரன்(சிறுகோள்) பூமாதேவியைத் தாக்கி கார்போதகக் கடலில்(கரும் பொருள் கடல்) மறைத்தான்(இயக்க விலகல்). வருணன் பயத்தில் ஒளிந்து கொண்டார் (மழை பொய்த்து, பூமி உயிர்கள் வாழும் தகுதியை இழந்தது). வராக மூர்த்தி(கரும்பொருள் மேகக் கூட்டம்) ஹிரண்யக்ஷனை இரண்டு துண்டுகளாக பிளந்தார்(இரண்டு சந்திரன்கள்). புழுதி கிளம்ப(நொறுங்கிய தியா) பூமியை தன் கொம்புகளில்(ஈர்ப்பு விசை) சுமந்து அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தினார். அப்போது பூமியில் கண்டங்களும், கடல்களும் உருவானது. பூமி உயிர்கள் வாழத் தகுதியான உலகமானது.
வராகம் அவதாரம் ஏன்?
‘வராகம்’ என்பதற்கு காட்டுப் பன்றி என்கிற பொருள் மட்டுமல்ல. மழை பொழியும் கரு மேகத்தையும் ரிக் வேதம் வராகம் என்று தான் குறிப்பிடுகிறது (ரிக் வேதம் 1.61.7 மற்றும் 10.99.6). காட்டுப் பன்றி கூட்டம், கருமேகக் கூட்டம் போல் காணப்படுவதால், அவை வராகம் என்று அழைக்கப்பட்டன.
கரும்பொருள் மேகக் கூட்டத்தை(Dark matter cloud) கருமேகம் அல்லது #வராகம் என்று குறிப்பிடுவது பொருத்தமே.
இயக்க விலகலால் மழையை இழந்த பூமியை அதன் தடத்தில் சேர்த்து மழை பொழிய வைத்து உயிர்களைக் காத்த வராக மூர்த்தி, வேதம் சொல்வது போல் மழைமேகமே.
நன்றிகள் : யோகி காகபுஜண்டர் கோபிநாத் – இலங்கை சித்தர் பீடம்
எமது தமிழ்க்கலாச்சாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்
பேஸ்புக் பக்கத்தில் எம்மைப் பின்தொடர்ந்து தினமும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளும் பல நண்பர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.