கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழி தமிழ் மக்களால் ஒருவிடயம் பற்றி தெரியாதவருக்கு அதன் அருமை தெரியாது என்பதை சுட்டிக் காட்டி கிண்டல் செய்ய பயன்படுகிறது. ஆனால் அது பிழையான பொருள், உண்மையிலயே பழமொழியே பிழைதான். சரியான பழமொழிகளும் அவற்றின் பொருள்களும் இதோ உங்களுக்காக,
இந்தக் கட்டுரையில் உங்களுக்காக வழங்கப்பட்டிருக்கும் பழமொழிகள் பின்வருமாறு;
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை “நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை வடிவினை காண்போம்.சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் மட்டுமே பயன்படுத்தினார்கள்.
கோரைபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும்.இதன் விலையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும். இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் “கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை” கழு என்ற கோரை புல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து ‘கழுதைக்க, கழுதைக்க’ என்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி ‘கழுதைக்கு’ என்று ஆகிவிட்டது.
அதன் உண்மையான அர்த்தம் “கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாய் தைத்தால் கற்பூர வாசனை வரும்” என்பது தான்.அது தான் தற்பொழுது மருவி “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்று ஆகி விட்டது.
மண் குதிரயை நம்பி ஆற்றில் இறங்கலாமா ?
தற்போதுள்ள பொருள் என்னவென்றால் மண் குதிரையில் ஆற்றை கடந்தால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்வோம் என பொருள்படுகிறது. இது போலியான பொருட்களை நம்ப வேண்டாம் என சொல்லிக் கொடுப்பதற்காக பாலகர் வகுப்புக்களில் கூட தவறாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
ஆனால், உண்மையான பழமொழியில் குதிரை எனும் விலங்குக்கு எந்த சம்பந்தமும் இருக்காது. உண்மையான பழமொழி என்ன சொல்கின்றது என்றால்,
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா ?
மண் குதிர் என்பது ஆற்றுக்குள் இருக்கும் மண் திட்டு. இது பொதுவாக நீரால் அடியில் சல்லரித்து இருக்கும். இதை நம்பி இறங்க நேர்ந்தால் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.
வர வர மாமியார் கழுதை போல் ஆனாளாம்
அதாவது மாமியார் நாள் செல்ல செல்ல கழுதை போல கேவலமாக ஆகிவிட்டார் என வரும் படியாக கிண்டலாகப் பேசும் முறையில் இந்த பழமொழி புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் மூத்தவர்களை எப்போதுமே மதிக்கும் தமிழ்ப் பழமொழி அவ்வளவு குறைவாகப் பேச வாய்ப்பில்லை. ஆகவே என்ன நடந்திருக்கும் ?
சரியான பழமொழி தெரிந்தால் புரிந்து விடும். சரியான பழமொழிப்படி,
வர வர மாமியார் கயிதை போல் ஆனாளாம்
கயிதை என்பது ஊமத்தங்காய் என்பதைக் குறிக்கும். ஆரம்பத்தில் பூவாக இருந்து பின்னர் நாள் செல்ல செல்ல அது காயாக்கிக் கனியும் பொது முள்ளாக மாறும். இதனை திருமணமாகி வந்த முதல் நாட்களில் இருந்து நாள் செல்ல செல்ல மாமியாரின் குண மாற்றத்தை குறிக்கப் பயன்படுத்தினர். அக்காலத்தில், ஏன் இப்போதும் கூட மாமியார்களுக்கு பயந்து கட்டுப்பட்டு வாழும் பல மருமக்கலைகள் உள்ளனர். அவர்களுக்கான ஒரு முன் அறிவாக இது வழங்கப்பட்டிருக்கும்.
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
ஆயிரம் பேரை மருத்துவத்தின்போது இறக்கச் செய்தால்தான் அவன் அரை மருத்துவன் ஆகின்றான். அதாவது அவனுக்கான பயிற்சி அந்த அளவு இருக்கும் என்பது இப்படி சொன்னால் வரும் பொருள்.
ஆயிரம் வேரைக் கொண்டவன் அரைவைத்தியன்
ஆயிரம் மூலிகை வேர்களைக் கொண்டிருந்து மருந்துகள் செய்தாலும் கூட அவன் அரைவாசி வைத்தியந்தான் என சொல்வது மூலிகைககளின் முக்கியத்துவத்தை சொல்வதற்கு பயன்பட்டது
சோழியன் குடுமி சும்மா ஆடாது
என்பதைப் பற்றி நம்மில் அனைவரும் . இதுவரை இந்தப் பழமொழிக்கு அறிந்துகொண்ட அர்த்தம் என்னவென்றால், சோழியன் என்பவரின் குடுமி சும்மா ஆடாது. ஏதாவது தனக்குச் சாதகமான நிலையில் மட்டுமே ஆடும் என்றுதான் அறிந்து வந்திருக்கிறோம்.ஆனால் உண்மைப்பொருள் அது அல்ல,
உண்மை அர்த்தம் இதோ உங்களுக்காக…
சோழியர்கள் என அழைக்கப்படுபவர்கள். திருக்கோவிலில் ஊழியம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தவர்களே. இவர்கள் இருந்தால் மட்டுமே கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும்.
கும்பாபிஷேகம் நடைபெறும் வேளையில் புனித நீர் அடங்கிய கும்பங்களை கோவிலின் உச்சிக்கு கொண்டுசென்று அதன் பின்அதில் அமைந்து உள்ள கலசங்களின் மீது அந்த குடங்களில் உள்ள புனித நீரை தெளிப்பதற்கு, இவர்கள் ( சோழியர்கள்) மட்டுமே காலம் காலமாக உரிமை பெற்றவர்கள்.
ஆனால் அந்த புனிதநீர் அடங்கிய கும்பங்களை( குடங்களை) வெறும் தலையின் மீது வைத்து எடுத்துச் செல்லக்கூடாது எனவே அதற்கு பிரிமனை என்னும்வட்ட வடிவிலான சும்மாடு என்று அழைக்கப்படும் ஒரு தாங்கும் பொருள் ஒன்றினை தலை மீது வைத்துக் கொண்டு அதன் மீது கும்பங்களை வைத்துக் கொண்டு அது கீழே விழந்து விடாமல், கவனமாகப் பிடித்துக்கொண்டு கோபுரத்தின் உச்சிக்கொண்டு செல்ல வேண்டியது, இவர்களின் கடமை.
பொதுவாகவே அனைத்து சோழியர்களும் நீண்ட குடுமி வைத்து இருப்பார்கள்.
ஒரு கும்பாபிஷேகம் நடைபெறுகின்ற போது, அந்தக் கோவிலில் உள்ள ஆறு கலசங்களிலும் தெளித்திட புனிதநீர் அடங்கிய 6 கும்பங்களை சுமந்து செல்ல ஆறு சோழியர்கள் வந்திருந்தனர்.அவர்களில் 5 பேர்கள் மட்டும் பிரிமனையுடன் வந்திருந்தனர். ஒரே ஒருவர் மட்டும் எடுத்துவர மறந்துவிட்டார்.
கும்பாபிஷேகத்திற்கான நேரம் நெருங்கி விட்டது. அவரால் வீடுவரை சென்று பிரிமனையை எடுத்துவரவும் இயலவில்லை. எனவே அவர் தலைமை ப்ரோகிதரிடம் சென்று பிரமனை எடுத்துவர மறந்து விட்டேன் ஆகவே நான் எனது குடுமியை சம்மாடு போல மாற்றி வைத்துக்கொண்டு அதன் மீது புனிதநீர் உள்ள கும்பங்களை கோபுர உச்சிக்கு கொண்டு சென்றிட பயன்படுத்திக்கொள்ள சம்மதி்ப்பீர்களா என்று வினவினார். அதற்கு முற்றிலும் புரோகிதர் மறுத்தது மட்டுமல்லாமல் அவர் என்ன சொன்னார் தெரியுமா?
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது
என்று. இதுவே நாளடைவில் மருவி, மருவி, மாறி, மாறி சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று மாறியது.
பார்த்தீர்களா ? தமிழ் மொழியின் நயமும் சுவையும் இப்படித்தான் மருவும்போது கிண்டலுக்கான வசனமாக மாறுவதோடு நிச்சயமாக அழகிய மற்றொரு பொருள் கொண்டதாகவும் அமைகிறது.
இந்த தமிழ் சுவையை நாமும் எல்லோருக்கும் பகிரலாமே…
எமது தமிழ்க்கலாசாரம் பகுதிக்கு செல்வதன் மூலம் இது போன்ற இன்னும் பல சுவாரசிய கட்டுரைகளை வாசியுங்கள்
பேஸ்புக் பக்கத்தில் எம்மைப் பின்தொடர்ந்து தினமும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளும் பல நண்பர்களுடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
முகப்பு உதவி : behance