மெனிக்கே மகே ஹித்தே பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற இலங்கையின் இளம் பாடகி யொஹாணி டி சில்வா இந்தியாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளில் பாட உள்ளார்.செப்டெம்பர் 30 அக்டோபர் 3 ஆம் திகதிகளில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
புது டெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானா குருகிராம் நகரில் உள்ள ஸ்டூடியோ எக்ஸ்ஓ அரங்கில் எதிர்வரும் 30 ஆம் திகதியும் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள ஹார்ட் கப் கொஃபி அரங்கில் அக்டோபர் 03 ஆம் திகதியும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் யொஹாணி பங்குபற்ற உள்ள இசை நிகழ்ச்சிக்கு Supermoon #NowTrending என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் யொஹாணியின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இது குறித்து யொஹாணி தெரிவிக்கையில் இந்தியாவில் பாட வேண்டும் என நான் எப்போதும் விரும்பி இருந்தேன் இறுதியில் அது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
யொஹாணி சதீஷான் பாடிய மெனிக்கே மகே ஹித்தே பாடல் கடந்த மே மாதம் வெளியாகியது இப்பாடல் யூடியூப் இணையதளத்தில் 12 கோடிக்கும் அதிகமான தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.
யூடியூபில் மிக அதிகமான தடவைகள் பார்வையிடப்பட்டுள்ள சிங்களப் பாடலாகவும் இலங்கை பாடலாகவும் மெனிக்கே மகே ஹித்தே விளங்குகிறது.
சமத் சங்கீத் இசையமைப்பில் உருவான இப்பாடலின் வரிகளை துலான் ஏ.ஆர் எக்ஸ் எழுதி இருந்தார். யொஹாணியுடன் சதீஷான் ரத்நாயக்க இப் பாடலை பாடியிருந்தார்.
பொலிவூட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் இப் பாடலை புகழ்ந்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவு மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது.
இப்பாடலை தமிழ்,ஹிந்தி, மலையாளம், வங்காள மொழிகளிலும் பல பிரபல கலைஞர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்க நாடுகளிலும் இப் பாடல் பிரசித்தி பெற்றுள்ளது.
யூடியூபில் 110 மில்லியனுக்கும் அதிக தடவைகள் பார்க்கப்பட்ட மெனிக்கே மகே ஹித்தே பாடல் பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை பல மில்லியன் மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளது.