தினமும் இறைவனை வழிபட்ட பிறகே அன்றாடக் கடமைகளைத் தொடர்வது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம். பூஜை அறையில் நாம் தினமும் பூஜை செய்வதன் மூலம் நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.
எல்லா அறைகளை காட்டிலும் பூஜை அறை தெய்வீக மணம் கமழும் படி வைத்திருந்தால் மகாலட்சுமி நம்மை விட்டு எங்கும் செல்லாமல் நம்முடனேயே நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் பூஜை அறையை சுத்தம் செய்வது என்பது மிகப் பெரிய வேலையாக இருந்தாலும் சுலபமாக சுத்தம் செய்வது பற்றியும், நறுமணமாக வைத்துக்கொள்வது பற்றியும் தெரிந்துகொள்வோம்.
சந்தனம்
சந்தனத்தில் சிறிதளவு பன்னீர் ஊற்றி, ஜவ்வாது அல்லது தசாங்கம் பவுடர் கலந்து உபயோகித்தால் இன்னும் வாசனையாக இருக்கும்.
பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு மஞ்சள் குழைத்து பொட்டு வைக்காமல், சந்தனம் குழைத்து வைத்தால் நீண்ட நாள் வரை அழியாமல், உதிராமல் அப்படியே இருக்கும்.
விளக்கு
பூஜை அறையில் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
நல்லெண்ணெயுடன் ஜவ்வாது அல்லது தசாங்கம் பவுடர் கலந்து வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறை விளக்கேற்றும் பொழுதும் தெய்வீக மணம் வீசி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும்.
பச்சை கற்பூரம்
மஞ்சள் மற்றும் குங்குமத்தில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நுணுக்கி சேர்த்துக் கொண்டால், நீண்ட காலம் நீடித்து உழைக்கும்.
மஞ்சள் மற்றும் குங்குமத்தை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைப்பதை விட கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பூச்சி, புழுக்கள் வராது.
கோலம்
விசேஷ நாட்களில் பூஜை அறையில் அரிசி மாவை கரைத்து அதில் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்துப் கோலம் போட்டால் நீண்ட நேரம் கலையாமல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
சாம்பிராணி
கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை ஏற்றும் பொழுது அந்த கற்பூரத் தட்டில் சிறிய அகல் விளக்கு ஒன்றை வைத்து ஏற்ற கருப்பு படியாமல் சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும்.
பூஜை அறையில் வாரம் ஒரு முறை சாம்பிராணி போட்டு வீடு முழுவதும் காண்பித்தால் நேர்மறை ஆற்றல்கள் பெருகும் என்பது காலங்காலமாக பின்பற்றும் ஐதீகம்.
அப்படி சாம்பிராணி போடும் பொழுது சாம்பிராணியுடன் வெட்டிவேர் மற்றும் தசாங்கம் பவுடரை கலந்து சாம்பிராணி புகை போட்டால் நல்ல மணமுடன், நம் சிந்தனையை தீய வழிகளில் செல்லாமல் ஆன்மிக வழியில் ஈடுபட துணை புரியும்.
எண்ணெய் பசை
பூஜை பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அதில் இருக்கும் எண்ணெய் பசையை எளிதாக நீக்க கொஞ்சம் வாஷிங் லிக்விட் அல்லது ஹேண்ட் வாஷ் பயன்படுத்தி தேங்காய் நார் கொண்டு லேசாக துடைத்தால் அதில் படிந்துள்ள எண்ணெய் பசை நீங்கும்.
தீர்த்தம்
பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து வைத்தால் கோவில்களில் கொடுக்கும் தீர்த்தம் போலவே வீட்டிலும் தயாராகிவிடும்.
பூஜை முடிந்த பின்னர் வீட்டில் அனைவருக்கும் கொடுக்க தீராத நோய் எல்லாம் தீரும்.
குழந்தைக்கு தொட்டிலை எப்படி கட்டுவது? அதனால் கிடைக்கும் நன்மைகள்.!