இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
சங்கடஹர சதுர்த்தி விநாயகரை வணங்கி சங்கடங்களிலிருந்து விடுபடுவோம்
மூலாதார மூர்த்தியாய், ஓங்கார பிரணவப் பொருளாய், முழுமுதற் கடவுளாய், தனக்கு மேல் நாயகன் இல்லாததால் ‘விநாயகர்” என்றே புகழ்ந்து துதிக்கப்படும் கற்பகக் கணபதிக்கு மிக உகந்த விரதம் சதுர்த்தி விரதமாகும். அதிலும் தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்றே சிறப்பிக்கப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை
அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகப் பெருமான் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்தின் முன் நெய் விளக்கேற்றி, விரதம் துவங்கச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். ஸ்ரீகணேச மூல மந்திரத்தை 108 முறை ஜெபித்தல் விசேஷம்.
அன்று முழுவதும் உபவாசம் இருந்து, மாலை சந்திரோதய சமயத்தில், மீண்டும் நீராடி, விநாயகரை மனதாரப் பூஜித்து, சந்திர பகவானையும் பூஜிக்க வேண்டும்.
அருகம்புல்லால் ஆனைமுகனை அர்ச்சிப்பது நலம் பல தரும். நான்காம் பிறையை அறியாமல் பார்க்க நேர்ந்தால், சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்தால் நான்காம் பிறையை பார்த்த தோஷம் நீங்கும்.
இருபத்தோரு முறைகள் ஸ்ரீகணேச அதர்வசீர்ஷம் ஜபம் செய்வது மிகச் சிறந்தது. இயலாவிடில் தகுந்தவர்களைக் கொண்டு இந்த ஜெபம் செய்விக்கலாம்.
விநாயகருக்கு நிவேதனம் செய்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாகக் கொள்வது சிறப்பு.
விநாயகருக்கு 21 மோதகங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது. நாள் முழுவதும் உபவாசம் இருக்க இயலாவிடில் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
மாலையில் வீட்டில் உள்ள விநாயகப் பெருமானின் படத்துக்கோ, சிலைக்கோ பூக்களிட்டு அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றுங்கள். அதேபோல், அருகில் உள்ள கோயிலுக்கு சென்று பிள்ளையாரப்பனை மனதார வழிபடுங்கள்.
சங்கடங்களை நீக்கி அளவில்லாத நன்மைகளை தரும் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகப் பெருமானின் அருளைப் பெறுவோம்.
இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகின்றவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும்.
மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெருமளவு குறையும்.
சங்கடங்களை நீக்கி அளவில்லாத நன்மைகளை தரும் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து விநாயகப் பெருமானின் அருளைப் பெறுவோம்.