இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அறியாததை அறிந்து கொள்வோம்.
ஐயப்பனின் தவக்கோல தரிசனம்…!!
சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் ஆகியவை ஒரே சீராக இருக்கும். ஐயப்பன் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார்.
தனது மூன்று விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டு கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். சித் என்றால் அறிவு எனப்பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி ‘சின்” என மாறியது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான், இந்த ‘சின்” முத்திரையாகும்.
‘சின்” முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்குளிர தரிசிப்பது என்பது, பிறவி பயனை அடைந்த சந்தோஷத்தை தருகிறது.
ஒவ்வொரு மாதமும் நடை மூடப்படும்போது, ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான திருநீற்றை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அத்துடன், ஐயப்பனின் ‘சின்” முத்திரையின் மேல் ஒரு ருத்திராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு தவக்கோலம் என்று பெயர்.
அப்போது, ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது, மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும். இந்த அதிசயம், தவறாமல் அரங்கேறுகிறது. கோவில் கதவு திறந்து, உலகத்தின் பார்வை அந்தக் கோவிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்து விடுகிறது.
அடுத்த நிமிடமே, அந்த விளக்கும் அணைந்து விடுகிறது. ‘சின்” முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்திராட்ச மாலையும் கை மாறி இருக்கும். இந்த அதிசயத்தை காண கண்கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சவாமிமார்களான நாங்கள் அறிந்தும், அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டு படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.
ஐயப்பன் ஸ்பெஷல் சபரிமலையில் நடைபெறும் பூஜை முறைகள் என்னென்ன?
சபரிமலை கோவிலில் பலவிதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை உஷத் கால பூஜை, உச்சி கால பூஜை, அத்தாழ பூஜை, மாத பூஜையாக படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜை ஆகியவை ஆகும்.
உஷத் கால பூஜை :
அதிகாலையில் ஐயப்பன் சன்னதி நடை திறந்த உடனே அபிஷேகம் நடைபெறும். காலையில் கணபதி ஹோமத்துடன் உஷத் பூஜை நடைபெறும்.
அப்போது நைவேத்தியமாக இடித்து பிழிந்த கேரள பாயாசம் படைக்கப்படும். அதன்பின் நடை மூடப்படும். கணபதி மற்றும் நாகராஜா சன்னதி பூஜைகள் முடிந்ததும், பிரசன்ன பூஜை நடைபெறும்.
பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். உஷத் பூஜைக்கு பின்னர் நெய் அபிஷேகம் நடைபெறும். இதன் பின்னர் கோவில் சுத்தம் செய்யப்படும்.
உச்சி கால பூஜை :
உச்சி கால பூஜை என்பது நண்பகலில் நடைபெறும் பூஜையாகும். இச்சமயம் ஐயப்பனின் முழு சாந்நித்யமும், சன்னதியில் பரவிக் கிடக்கும். பூஜை முடிந்த பின்னர் நடை மூடப்படும். மீண்டும் மாலை வேளையில் நடை திறக்கப்பட்டு தீபாராதனையும், புஷ்ப அபிஷேகமும் நடைபெறும்.
புஷ்ப குவியலில் சிறு குழந்தையாக சுவாமியின் முகம் மட்டும் தெரியும். நீளமாக ஐயப்பன் முன்பு பூக்குவியல் சமர்ப்பிக்கப்படும். இதனை காண கண்கோடி வேண்டும்.
காலையில் பல மணி நேரம் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெறுவதால் ஐயப்ப விக்கிரகத்தில் ஏற்படும் உஷ்ணத்தை சரி செய்ய புஷ்ப அலங்கார பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் முன்கூட்டியே புஷ்ப அலங்காரம் செய்ய பணம் செலுத்தி பங்கு கொள்ளலாம்.
அத்தாழ பூஜை :
உச்சி கால பூஜை முடிந்த பின்னர் அத்தாழ பூஜை எனப்படும் இரவு நேர சயன பூஜை நடைபெறும். ஐயப்பன் நெய் அபிஷேகத்தில் சர்வ காலமும் இருப்பதால் உஷ்ணத்துடன் திருமேனி விளங்கும்.
எனவே, உண்ணியப்பம் மற்றும் பானகம் நிவேதனம் செய்யப்படுகிறது. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு பானகம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஹரிவராசனம் (தாலாட்டு பாட்டு) பாடி திருச்சன்னதியின் நடை மூடப்படுகிறது.
இவை தவிர, மாத பூஜை நடைபெறும் நாட்களில் தினமும் இரவில் படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜை நடைபெறுகிறது.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் விரதம் இருப்பது ஏன்?
கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராகி கொண்டு வருகிறார்கள். ஐயப்பனை நினைத்து கடுமையான விரதமுறையை மேற்கொண்டு வருகிறார்கள்.
- ஐயப்ப பக்தர்கள் ஏன் கார்த்திகை மாதம் விரதத்தை மேற்கொள்கிறார்கள்?
- ஏன் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் எழுப்புகிறார்கள்?
- ஐயப்ப பக்தர்கள் வெந்நீரில் குளிக்கக்கூடாது என்பது ஏன்?
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் விரதம் இருப்பது ஏன்?
பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையைத் துவங்குவார்கள். இதன்படி, ஒருவர் சபரிமலைக்கு செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து, பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும். இதன்படி, ஒருவர் கார்த்திகை மாதம் முதல்நாள் மாலையிட்டால் தான், மகர ஜோதி தரிசனத்திற்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.
ஐயப்ப பக்தர்கள் சரண கோஷத்தை உரத்த குரலில் எழுப்புவது ஏன்?
ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும் போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்கப் பரவி பக்தி அதிர்வை ஏற்படுத்தும். இது வீட்டில் இருப்பவர்கள், மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால் அவர்களது கவனமும் ஐயப்பனை பற்றிய எண்ணத்தில் திரும்பும்.
ஐயப்ப பக்தர்கள் ஏன் வெந்நீரில் குளிக்கக்கூடாது?
வெளிப்புற தட்பவெப்பநிலை குளுமையாக இருக்கும் காலம் (மழை, பனி) என்பதால் குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது. சபரியாத்திரை செல்ல வேண்டுமானால் உடல்நலம் சீராக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த விதிமுறை. குளிப்பதால் ஏற்படும் குளுமை உடலில் சீராக பரவ வேண்டும் என்பதற்காகவே சந்தனம் இட்டுக்கொண்டு செல்கின்றனர்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.