பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மெகானும் தமக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அந்தக் குழந்தைக்கு லிலிபெட் லிலி டயானா மவுன்ட்பட்டன் வின்ட்ஸர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழந்தையின் வரவு குறித்து எலிஸபெத் மகாராணியார் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் பக்கிங்ஹாம் மாளிகையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணியாரின் 11 வது பூட்டப் பிள்ளையான மேற்படி குழந்தை அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சாந்த பார்பரா மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை பிறந்துள்ளது.
மேற்படி குழந்தையானது முடிக்குரிய பிரித்தானிய அரச குடும்ப வாரிசுகள் வரிசையில் எட்டாவது இடத்தில உள்ளது.
இந்தக் குழந்தையின் வரவால் 1960 களில் முடிக்குரிய வாரிசுகள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த இளவரசர் அன்ட்று தற்போது ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மகாராணியார் குழந்தையாக இருந்த போது அவரது செல்லப் பெயர் லிலிபெட் என்பது குறிபிடத்தக்கது.
இந்நிலையில் இளவரசர் சார்ள்ஸ் உம் இளவரசர் வில்லியமும் இளவரசர் ஹரிக்கும் மெகானுக்கும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளடங்கலான அரசியல் தலைவர்களும் மேற்படி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.