அன்றைய காலங்களில் பழமொழிகளும் வாய்வழிக் கதைகளும் போல இன்று வாட்ஸ்அப் கதைகள் பரவுகின்றன. யார் உருவாக்கினார் என்பது குறிப்பிடப்படாத பட்சத்தில் தெரியாமல் இருக்கும் இக்கதைகள் பொதுவாக நகைச்சுவைகள், மக்களது வாழ்வியல் மற்றும் தத்துவங்களைக் கூறுகின்றன. அவ்வாறான சுவாரசியக் கதைகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்கிறோம்.பதின்நான்காவது கதை, புடவை கொடு கிருஷ்ணா : பரமார்த்த குரு கதை இதோ,
புடவை கொடு கிருஷ்ணா : பரமார்த்த குரு கதை
பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர்.
அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள்.
“அதோ பாருங்கள் குருதேவா! கிருஷ்ண பரமாத்மான வருகிறார்!” என்று குதித்தான் மட்டி.
“ஆமாம் குருவே! கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்!” என்றான் மடையன்.
பரமார்த்த குருவும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்! உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார்!
“சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்” என்றார் பரமார்த்தர்.
“புதுத் துணிகளைக் கிழிப்பதா?” ஏன் குருவே?” என்று கேட்டான், மடையன்
“புத்தி கெட்டவனே! ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி! அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்!” என ஆணையிட்டார் பரமார்த்த குரு.
சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்!
உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார்!
“பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா! அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்!” என்று வேண்டினார் பரமார்த்த குரு.
“குருவே! நமக்கு எதற்குப் புடவை?” என்று கேட்டான் மண்டு.
“அதானே?” நமக்கு வேட்டி அல்லவா தேவை!” என்றான் மூடன்.
“கார்மேகக் கண்ணா!” இந்தா, பொரி! உன் இஷ்டம் போல் கொரி!” என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான், மட்டி.
கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. “நான் கடவுள் இல்லை! எனக்கு நேரமாகிறது; என்னைப் போகவிடுங்கள்” என்றார்.
“கண்ண பெருமானே! எங்களை ஏமாற்ற நினைக்காதிர்கள்” எனக் கெஞ்சினான், முட்டாள்.
“கண்ணா! அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்த குரு தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?” என்றார் குரு.
“கோபாலா கோவிந்தா! தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு” என்றான் மடையன்.
“பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்” என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர்.
“பொரி கொடுத்ததற்கு நன்றி! நான் போய் வருகிறேன்” என்று நகரத் தொடங்கினார் நடிகர்.
“என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்” என்றார் பரமார்த்தர்.
“வரமா?” அதென்ன?”
“ஆமாம்! குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்!” என்றான்.
“எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்” என்றான் முட்டாள்.
“வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்!” என்றான் மடையன்.
“சரி! நீங்கள் நினைத்தபடியே நடக்கும்!” என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர்.
“ஆஹா! பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா! உன் கருணையே கருணை” என்றபடி பரமார்த்த குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.
“ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார்.”
“அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம்! அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்!” என்றார் பரமார்த்தர்.
“குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்லாம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்! அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது!” என்றான் மட்டி.
“எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்” என்றான் மடையன்.
போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், “குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு! இதையே விலைக்கு வாங்கி விடலாம்!” என்றான் மடையன்.
பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, “இந்தப் பல்லக்கு என்ன விலை?” என்று விசாரித்தான்.
“இது பல்லக்கு இல்லை” என்றான் பாடை கட்டியவன்.
“நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! இது பல்லக்கேதான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்” என்றான் மடையன்.
சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், “நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான், அவன்.
பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார்.
இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர்.
சிறிது தூரம் வந்ததும், “ஒரே தாகமாக இருக்கிறது” என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள்.
ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். “என்ன? யாரையுமே காணோம்?” என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது.
திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.
மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. “லொள், வள்” என்று குரைத்தது.
அவ்வளவுதான்! பாடையைத் “தொப்” என்று கீழே போட்ட சீடர்கள், “ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே!” என அலறினார்கள்.
“அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்!” என்றான் முட்டாள்.
“நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே!” என்று துக்கப்பட்டான் மண்டு.
அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், “புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே!” எனத் திட்டினார்.
“குருநாதா!” அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்! அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ!” என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள்.
பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்!.
இதே போன்ற நல்ல கதையுடன் அடுத்த வாரம் சந்திக்கிறோம். அது வரை எமது பழைய கதைப் பதிவுகளை வாசிக்கலாமே.
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்