உங்கள் எதிர்பார்ப்புகள் குறையும் போது வாழ்க்கை கனமில்லாமல் அழகாக மாறும். எதிராளியின் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும். அது புரிதலை எளிமைப்படுத்தும்,
யோசித்துப் பாருங்களேன். பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் மேல் பெற்றோர்களுக்கான எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் எதிர்பார்ப்புகள்தானே?
குறிக்கோள்கள் இருக்கலாம். கடமைகளைச் செய்யலாம். உங்கள் எண்ணத்தைச் சொல்லலாம்.ஆனால், அவை தீவிரமான எதிர்பார்ப்புகளாக மாறி அவர்கள் கழுத்தை நெறிக்க வேண்டாம்.
இன்று மாணவர்கள் தோல்வியின்போது துவண்டுபோவதன் முக்கியமான காரணம் ஒன்றுதான். தங்களால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என்பதுதான்.
என்ன படிக்கிறான்/ள் என்று பெற்றோருக்குத் தெரியாத பல கிராமத்துக் குழந்தைகள் இயல்பாக வளர்வதற்கும், எல்லாம் கொடுத்தும் சிறு தோல்வியில் நகரக் குழந்தைகள் நொறுங்கிப் போவதற்கும் காரணம் இந்த எதிர்பார்ப்புகள்
தான்!
என் பிள்ளையை நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன் I accept my child unconditionally என்று சொல்லிக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைக்கான நேரமும் இடமும் கிடைக்கும். அவர்களுக்குச் சுதந்திரமாய்ச் சிந்தித்து வாழ்க்கையைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
எதிர்பார்ப்புகளின் பாரம் இல்லாமல் அவர்களை இயல்பாய் மலரவிடுங்கள்.