நொடி, நம் எண்ணங்களின் வேகம் செயல்களின் வேகத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகம். விளக்க முடியாத சூழலுக்குள் மாட்டிக் கொண்ட ஒருவனின் நொடிக்கு நொடி வாழ்வு இந்தக் கதை.
நான் நேத்திரக்கைதி. வாழ்வின் உணர்வுகளை எழுத்தாக வடிக்கும் எனது விருப்பத்தின் சிறு படிகளில் ஒன்று இந்தக் கதை. இந்தக் கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை , கதையை வாசித்து முடித்ததும் கருத்துக் பெட்டியில் அல்லது எமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்வீர்கள் என ஆவலோடு காத்திருக்கிறேன். வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
கடந்த பாகத்தில்,
நொடி எட்டு..
பொறு… என்னது ? கைகள் இரண்டும் ஹெல்மட்டிலா ?
அவனும் மந்தப்புத்தியும் கோரசாக…
“Excuse.. கை வலிக்குது.. பிளீஸ்…” அவள் மென்மையாக.. நூறிலிருந்து பூச்சியம்… காது கேட்க மறுக்க, கண்களும் காதோடு கூட்டு சேர உண்மை உறைக்கிறது. அவனது உணர்வு………..
நொடி – 2
“கண்களை நேராகப் பார்த்து பேச நினைத்ததை பேசிவிட வேண்டும். இன்றைக்கு கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தினால் மட்டுமே நான் நினைத்ததை போல விஷயங்கள் தொடர்ச்சியாக நடக்கும். இதைப்போன்ற ஒரு சந்தர்ப்பத்தை தவற விட்டால் என்னைப்போன்ற ஒரு மடையன் இல்லவே இல்லை.”
“இல்லாவிட்டால் மட்டும் நீ பெரிய அறிவாளி தானே ?”
வழக்கம்போல அவனும் அவனுடைய மந்தப் புத்தியும் ஒருவரோடொருவர் முரண்பட்டுக் கொண்டிருந்தனர். நானும் எனக்கு இருக்கின்ற மற்ற வேலைகள் எல்லாம் தூக்கி வைத்துவிட்டு இவர்கள் போடும் சண்டையை உங்களுக்கு கதையாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். அன்று பேருந்தில் எக்கச்சக்கமாக மொக்கை வாங்கிய நமது ஹீரோ சில காலமாக அதே பேருந்தில் அந்த பெண்ணை சந்தித்து வருகிறார். சந்திப்புக்கள் முதல் போல் இல்லை. அவள் மூன்றாவது இருக்கையில் இருந்தால், இவன் பின்னால் இருக்கும் நீண்ட வரிசை இருக்கையில் இடது பக்க மூலை ஜன்னலுக்கு வெளியே குதித்து சுண்டு விரலை மட்டும் ஜன்னல் கம்பியில் கொழுவி பிடித்துத் தொங்கிக் கொண்டு வருவான் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு காணாத தொலைவுக்கு ஓடுவான்.
“யாரு அவன் ? அவன் எங்கே பயத்தை வெளியே காட்டினான்..ஏதோ வயசு போனவங்களுக்கு சீட் கொடுக்குற மாதிரி கள்ளத்தனமா எழும்பி ஓடி வந்து விடுவான்.”
மந்தப்புத்தி……. (நான் கொஞ்சம் காட்டமாக) கதையை சொல்ல விடு…
சரி அது கிடக்கட்டும்… ஏன் இவ்வளவு பயம் என்றா பார்க்கிறீர்கள் ? முதலாவது கதையை வாசித்தவர்களுக்கு புரிந்திருக்கும்…
சரி.. சரி… முதலில் ஏதோ கதைக்க போகிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தானே என்ன கதைக்க போகிறான் ?
அதுதான் இன்றைய கதையே…
“சூப்பர் ஜீ……. சூப்பர் ஜீ…” .
பேருந்து வந்து நிற்கிறது. பேருந்தில் ஏறுகிறான். அந்த தரிப்பிடத்தில் அவன் மட்டும்தான். ஏறிப்போய் வழக்கம்போல பின் பக்க இருக்கையில் தொற்றிக்கொள்ள எண்ணாமல், அவளோடு பேசத் தோதான இருக்கைக்காக முன்னால் பார்க்கின்றான். 2,3 முழுமையாக காலியான இருக்கைகள். ஒரு இருக்கையில் குட்டிப் பையன் ஒருவன், பாடசாலை உடையுடன். இன்னொன்றில் நீல ஷெட்டும், குதிரைப்பின்னலும் போட்டு Office போகும் ஒரு அக்கா…
“எது ? ஒரு அக்காவா ? Sir கதை சொல்றதுன்னா ஒழுங்கா சொல்லணும். அது இவனுடைய மீரா அக்கா “
மீராவா ? பெயர் எப்ப தெரிஞ்சுது ? – எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தேகம்.
“அது அவங்க பேர்னு உனக்கு யார் சொன்னா ? மீரா அக்கா னா, நம்ம வாணி போஜன் மாதிரி மீரா அக்கா..”
அட மந்த புத்தியே… டைம் ரொம்ப நேரமா போயிட்டு இருக்கு. உன் கூட சண்டை போட்டுகிட்டு இருக்க முடியாது நான் பார்க்கிறவங்களுக்கு கதையை சொல்லணும். ஆள விடு..
ஆ…. எங்க விட்டேன் ? ஆ.. மீரா அக்கா… சீ…அக்கா சீட்டு…
இப்பொழுது இதில் எந்த இருக்கையில் அமர்ந்தால் அவளை நம் பக்கத்தில் அமரச் செய்யலாம் ?
ஸ்லோ மோஷன் நொடி 1
“இதற்கு முன் அவள் இதில் எதில் அமர்ந்தது இல்லை ?
இன்னும் அவள் ஏறுவதற்கு சரியாக நான்கு தரிப்பிடங்கள் இருக்கின்றது. நான் தனி சீட்டில் இருந்தால் நிச்சயமாக எனக்கு பக்கத்தில் இருக்கும் இருக்கையில் யாராவது வந்து அமர்ந்து விடுவார்கள். அந்தப் பையனுடைய யூனிபாரம்… ஆ… சென் மைக்கல் சிறுவர் பள்ளி… ஆம் அந்த ஸ்கூல் டை தான் இந்த கலரில் இருக்கும். நேரம் ? 07:18. ஆம் அவன் நிச்சயம் அடுத்த மூன்றாவது தரிப்பில் இறங்கி விடுவான். “
“அதுக்கு அடுத்த ஸ்டாப் தான் நம்மாளு entry…:“
ஸ்லோ மோஷன் நொடி 2
“நம்ம ஆளா ? செருப்பு…. அவங்க .. மரியாதையா பேசு மந்தப்புத்தி.. “
அட.. சண்டை போடாதீங்கய்யா.. – நடுவில் சமாதானத்துக்கு நான்..
“அடுத்த ஸ்டாப்ல அவங்க எறுவாங்க… ஒரே ஒரு ஸ்டாப்புக்கு சீட்ட புடிச்சிகிட்டா போதும்.”
வேகமாக நகர்ந்து போய் அந்த குட்டிப்பையன் பக்கத்திலே அமர்ந்துகொண்டான்.
அடுத்த சில நிமிடங்களுக்கு…. – கதை பாஸ்ட் போர்வர்ட்
“இருந்தாலும் நீ எனக்கு ரொம்ப வேலை கொடுக்கிற தம்பி.. ஒரு செகண்ட்ல இவ்வளவு யோசிக்க வைக்கிறியே ? “
“ஆ… யோசிச்சு கிழிச்ச.. நீ இதுவரைக்கும் கொடுத்த எல்லா ஐடியாலையும் எனக்கு ஏதாவது ஒன்னு மொக்கையாகவே தான் போயிருக்கு.. எனக்கு சோத்த போட்டு ஒன்ன வளக்குறதுக்கு உன்னை வித்து அந்த காசில ஒரு ஐபோன் வாங்கி கொடுத்தாலாவது இந்நேரம் செட் ஆகியிருக்கும்.”
ஆஹா… தம்பி மூளை இல்லன்னா உயிர்வாழ முடியாது என்று உனக்கு தெரியுமா ? இல்லையா ?
“அது எனக்கு தெரியும்ணா.. ஆனா இந்த மூளைக்கு தெரியாது, அதான் இப்படி மூளை இல்லாத மாதிரி பேசுது என் மூளை ( மந்தப்புத்தி). “
சர்வேஸ்வரா… இந்தப் புள்ள பூச்சி கிட்ட இருந்து என்ன காப்பாத்துப்பா…
ஆ… நீங்க என்னை மன்னிச்சுக்கோங்க… கதைக்குள் போகலாம்…
ஸ்லோ மோஷன் நொடி 3
“ஓகே.. ஓகே.. ஸ்டாப் வந்துருச்சு… “
“தம்பி என்னப்பா இன்னும் இறங்காமல் இருக்க… ஒருவேளை கணக்கு தப்பாகிருமோ… ஆ.. இல்ல இல்ல.. சமத்துப் பையன் எழுந்துக்குறான்.. ஸ்டாப்ல கரெக்டா வந்து நிக்கிற வரைக்கும் பக்கத்திலேயே உட்கார்ந்து இருப்பானுங்க.. ஒரு கொஞ்சம் செகண்ட் முன்னாடி எழும்பி போய் கதவுக்கு பக்கத்துல நின்னு இறங்கினா செத்தா போகப்போறான் ? “
ஸ்லோ மோஷன் நொடி 4
மிஷன் ஸ்டார்ட்ஸ் நவ்.. இந்த செகண்ட்ல இருந்து இன்னும் கொஞ்ச நேரத்துக்கு.. சரியா சொன்னா ஒரு பஸ் ஸ்டாப்புக்கு இந்த சீட்டை எப்படியாவது புடிச்சி வச்சுக்கோ..
“ஒரு வேளை உன் பக்கத்தில் உக்கராம வேறெங்காவது உட்கார்ந்துட்டா ? சுத்திப் பாருடா..”
“வாயை கெளப்பாத மந்த புத்தி.. இருந்தாலும் நல்ல யோசனைதான்.. “
ஸ்லோ மோஷன் நொடி 5
பேருந்தில் இருக்கும் அத்தனை சீட்டுகளையும் ஒன்றுவிடாமல் சுற்றிப் பார்த்தான். அனைத்தும் நிரம்பி இருக்கிறது இறுதியாக இருக்கும் கடைசி வரிசை சீட்டில் ஒன்றைத்தவிர..
அவள் வழக்கமாக முன் கதவு வழியாக தான் ஏறுவாள்.. பின் சீட்டிலும் ஏற்கனவே ஐந்து பேர் இருக்கிறார்கள்.. எப்படியும் நெருக்கிக் கொண்டு இருப்பதற்கு அவள் நிச்சயமாக விரும்ப மாட்டாள். இன்று என் பக்கத்தில் உட்கார போவது உறுதி…
மல்லி.. பொட்டக்
ஸ்லோ மோஷன் நொடி 6
அவனுடைய தோளுக்கு பக்கத்தில் ஒரு மிகப்பெரிய உருவம் அவனுக்கு தெரிகிறது. பெல்டை தள்ளிக் கொண்டிருக்கின்ற தொப்பை வயிறு இன்னும் கொஞ்சம் விட்டு இருந்தால் அவனுடைய முகத்தில் முட்டி இருக்கும். நிற்க வழியில்லாமல் தள்ளாடிக் கொண்டு இருக்கின்ற ஒரு பெரிய உருவம். மஞ்சள் சேட்டிலே வெள்ளை கோடுகள் போட்டிருந்தது.
மல்லி பொட்டாக்…
தம்பி சிறிது தள்ளி போ என்று முழுதாக சொல்லாமல் உள்ளங் கை பக்கமாக கையை திருப்பி அந்தப் பக்கம் போக சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தார்.
“அட ஆண்டவா…. எனக்கென்று இப்படித்தான் வந்து எல்லாமே அமைய வேண்டுமா ? இவ்வளவு தூரம், வாசல் வரை காவி வந்து கடை சி படியில் போட்டு உடைக்க வேண்டியதாய் போகுது.. இன்றைக்குதான் இந்த மனுஷன் வந்து என் பக்கத்தில் உட்காரணுமா ? “
இவனை….
ஸ்லோ மோஷன் நொடி 7
“சரி அவள்தான் கிடைக்கவில்லை.. ஜன்னல் பக்கமாக வைத்து தள்ளி இருப்போம்.. அப்பொழுது நின்று கொண்டு வரும் அவளை பார்ப்பதற்காவது இலகுவாக இருக்கும்.. “
கொஞ்சம்கூட மனதே இல்லாமல் தள்ளி உட்கார்ந்து அவனுக்கு இடத்தை கொடுக்கிறான்..
ஸ்லோ மோஷன் நொடி 8
“சே… கஷ்டப்பட்டு செஞ்ச எல்லா முயற்சியும் வீணா போச்சு… இன்றைக்கு அவள் வருவாளா.. இல்லையா…. ஒண்ணுமே தெரியலையே…”
“இன்னும் கொஞ்ச தூரம் பஸ் போச்சுன்னா போதும் அவள் வர போற இடம் வந்துரும்… இன்னைக்கு என்ன டிரஸ் போட்டு இருப்பா… கடைசி மூணு கிழமையா பார்த்தது வச்சு கெஸ் பண்ணா.. அந்த டாக் ப்ளூ டாப்ல, வைட் கலர்ல குட்டியா The Queen அப்படின்னு எழுதி இருக்கும். அந்த டாப் தான் போட்டு வருவா…”
“டேய் டேய்.. இதோ இப்ப கெஸ்ஸ் பண்ற மாதிரி நடிக்காத டா.. அது தெரிஞ்சு தானே நீயும் ப்ளூ போட்டு வந்த… உனக்கு நான் காலையிலேயே கரெக்டா கெஸ்ஸ் பண்ணி சொன்னதை எல்லாம் நீ பண்ணின மாதிரி பொய்க்கு எல்லாரையுமே ஏமாத்துறியா ?”
ஸ்லோ மோஷன் நொடி 9
ஜன்னல் வழியாக வெளியே தலையை போட்டு பார்த்துக் கொண்டிருக்கின்ற இவனுக்கு, தூரத்தில் நீல சட்டை போட்டு ஒரு பெண் நிற்பது தெரிகிறது.. பேருந்து அருகில் செல்லச் செல்ல இவனுடைய இதயம் வெடிக்காத கணக்காக அடித்துக் கொள்கிறது.
” உன் பார்வையில் விழுந்த நாள் முதல் என் துன்பங்கள் மறந்து போனது.. உன் கை விரல் சேர துடிக்குது அன்பே…. அன்பே….” – சிட்டுவேஷன் சாங்…
ஸ்லோ மோஷன் நொடி 10
அன்று மிக அருகிலேயே பார்த்த அந்த அதே முகம்… வெள்ளையாய் பளிச்சென்று… பொருமிக் கொண்டிருக்கின்ற அவளுடைய கன்னங்கள்… அவளுடைய பெரிய முகத்தில் அடையாளமே இல்லாமல் குட்டியாய் இருக்கும் அவள் கண்கள்.. அத்தனையும் இவனுக்கு அத்துப்படியாக பாடமாய் இருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் மீண்டும் மீண்டும் பார்த்து மனதில் நிறுத்திக் கொள்வான்..
பேருந்து பக்கத்தில் நெருங்கும் பொழுது அவளை மொத்தமாக இவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
யூகித்த அதே நீல சட்டை… வழக்கம்போல இவனும் அவளும் அணியும் ஒரே நிற ஷூக்கள்…
கையில் கடிகாரத்தை கட்டிக்கொண்டு அதனை பார்த்து கவலைப்பட்டு விட்டு தலையை நிமிரும் போது பேருந்து வருவதை கண்டு, ஒரு நொடியில் மகிழ்ச்சியாய் மாறிய அவளது முகம். பேருந்து நிற்கப்போவதைக் கண்டு அதன் முன் கதவை நோக்கி நகர்கின்ற அவளது அசைவு. ஒவ்வொன்றையும் துல்லியமாக பார்த்துவிட்டான்..
ஸ்லோ மோஷன் நொடி 11
சில நொடிகளில் ஒட்டுமொத்த கவலையும் மறந்து முழுதாய் காற்றில் பறப்பதை உணர்ந்தவனுக்கு, உண்மையிலேயே அவனுக்கு பக்கத்தில் இருந்து ஏதோ பாரம் குறைந்து இருக்கை மேல் எழுவதாக தோன்றியது.
“என்ன நடக்கிறது மந்தபுத்தி ? “
“எனக்கு எப்படி தெரியும் எனக்கு செய்தி உள்ளீடுகள் தேவை.. டக்கென்று திரும்பி பக்கத்தில் என்ன நடக்கிறது என்று பார். “
மந்தபுத்தியின் கட்டளைக்கு முழுவதுமாய் செவிசாய்த்தவனாக பக்கத்தில் நடப்பது என்னவென்று பார்க்க திரும்புகிறான்.. மிகப்பெரிய இரண்டு பிருஷ்டங்கள் (மனிதன் அமரப் பயன்படுத்தும் பாகம்) அவனுடைய முகத்தை மறைத்து எழுந்து நிற்கிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னோக்கி அசைகிறது.
“என் பக்கத்தில் உட்கார்ந்தவன் எழுப்பி விட்டான்.. எதனால் ? “
ஸ்லோ மோஷன் நொடி 12
அறிந்து கொள்ள சிறிது எட்டிப் பார்க்கிறான்.. மீரா அக்கா.. தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து இறங்குவதற்காக சென்று கொண்டிருக்கிறார்.. ஜன்னல் சீட்டுக்கு ஆசைப்பட்ட இவன் எழுந்து அந்த இடத்துக்கு செல்கிறான்.
“யெஸ்… கடவுள் இருக்கான் குமாரு…”
தற்பொழுது ஒவ்வொருவராக இறங்கி முடிய அவள் ஏறுகின்ற நொடிகளை எண்ணி காத்திருக்கிறான்.போன கதையில் இவன் தூக்கம் விழித்த பொழுது இவனை ஸ்தம்பிக்கச் செய்த அதே மெல்லிய பிஞ்சு கைகள். பேருந்தின் கம்பியை பிடித்து அதற்குண்டான உடலை தூக்க பின்னோக்கி இழுக்கிறது. எதற்காக என்றே தெரியாமல் நெஞ்சுக்குள் குளிர்மையான உணர்வும், ஒரு வகையில் உங்களை போட்டுப் பிசைந்து தின்பது போன்ற உணர்வும் கலந்து ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு அவனுடைய நிலை இப்போது புரிந்திருக்கும். அவள் பேருந்தில் ஏறுகின்ற ஒவ்வொரு நொடியையும், அடுத்த நொடி அவள் என் பக்கத்தில் வந்து அமரப் போகிறாள் என்பதை உணர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறான்.
ஸ்லோ மோஷன் நொடி 13
“இனி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நம் பக்கத்தில் வந்து அமர சிலவேளைகளில் தயங்க கூடும். ஆகவே பேசாமல் கீழே பார்த்துக் கொண்டே இருப்போம்.”
“அதாவது ஐயா காஷுவலாக இருக்கிறாராம்”
அவனுக்கு அவனுடைய கடைக்கண்கள் மூலமாக அவள் நகர்கின்ற நிழல் தெரிந்து கொண்டிருக்கிறது.
பேருந்தின் முன் பகுதியில் ஏறி விட்டாள்.. எங்கே இருக்கை உள்ளதெனப் பார்த்து, முன்னாலேயே மூன்றாவது இருக்கையில் இருப்பதைக் கண்டு மகிழ்கிறாள். சடசடவென ஒவ்வொரு கம்பியாக பிடித்து நகர்ந்து அந்த இருக்கையை நோக்கி வருகிறாள்.
ஸ்லோ மோஷன் நொடி 14
வருகிறாள் வருகிறாள்.. வந்துவிட்டாள்.. என் பக்கத்தில் தான் அமர போகிறாள் நிச்சயமாக… இதோஅமர்கிறாள்… கடவுளே……. இந்த விளங்காதவனுக்கெல்லாம் அடிச்சான் பாரு அப்பொயின்ட்மன்ட் ஆடர என்பது போல, இவனுடைய மனது அதாவது உருப்படாத ஜென்மம் குதியாய் குதித்துக் கொண்டிருந்தது. திடீரென்று கை பக்கமாக ஏதோ மெல்லிய உணர்வு.
கிர்ரென்கிறது…………..
மூளை ஸ்தம்பிதம் அடைந்து சில குறுநொடிகள் மூச்சு நிற்கிறது. உடனே முழுமையாக மூச்சை உள்ளெடுக்கிறான். பெருமூச்சு…
“என்ன நடந்தது ? “
ஸ்லோ மோஷன் நொடி 14 – ரீவைண்ட் ( கதை சொல்பவர் பார்வையில்)
தனது வலது கையால் கம்பியை பிடித்துக்கொண்டு இடதுகையினை புறப்பக்கம் திருப்பி முதுகிலிருந்து தனது தொடைவரை முழுவதுமாக ஒருமுறை உடையை நீவிவிட்டபடி இருக்கையில் அமர்கிறாள். அவளுடைய இடதுகை பின்புறமாக வளைந்து இருப்பதனால், தோள்மூட்டு இணைப்புக்கு கொஞ்சம் கீழிருந்து, அதாவது நாம் சாதாரணமாகப் போடும் கட்டைக் கை ஆடை மறைக்கும் பகுதிக்கு சற்றுக் கீழ் இருந்து அவளுடைய முழங்கை வரையான கை பகுதி இவனுடைய கையில் முழுமையாக உரசுகிறது.
மஹ்ஹ்ஹ்ஹ்ஹ்.. – முழுமையான உணர்வில் உள்ளெடுக்கும் பெருமூச்சு..
அவன் கண்கள் அகல விரிந்தன…
“SorrY” – அவள்
அப்போது அவன் மனநிலை..
இப்போதைக்கு முடிஞ்சு போச்சு..
இது போன்ற வேறு கதைகளை வாசிக்க கதைகள் பகுதிக்கு செல்லுங்கள்
எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்