கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய சூரிய எரிவு ஆனது தற்போது வெளிப்பட்டிருப்பதாகவும் இது பாரியதாக எழுந்து கொண்டிருப்பதாகவும் அண்மையில் நாசா அறிவித்தது. 2017 இற்குப் பிறகு மிகவும் பயங்கரமான சூரிய எரிவு இந்த ஆண்டே ஏற்பட்டிருப்பதாகவும் இது சூரிய வட்டம் செயலில் உள்ளதைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதென்ன சூரிய எரிவு எனப்பார்க்கிறீர்களா? தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் விளங்கப்படுத்தப்பட்ட, சூரியப்புயல் உருவாக காரணம் இந்த சூரிய எரிவுகள் தான். இந்தக் கட்டுரையை வாசிக்க முன்னர் சூரியன், ஹீலியம் ஐதரசன் போன்ற வாயுக்கள் தொடர்ச்சியாக அதியுயர் வெப்பத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரம் என்பதையும் அதில் கொரோனா எனப்படுவது சக்தியை வெளியிடும் ஒரு வளையம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
சூரிய எரிவு
சூரிய எரிப்பு என்பது சூரியனின் பிரகாசத்தில் ஏற்படும் திடீர் ஒளிர்வு ஆகும். இது வழக்கமாக அதன் மேற்பரப்புக்கு அருகிலும் சூரிய கரும்புள்ளிக் குழுவிற்கு அருகிலும் காணப்படுகிறது. சக்திவாய்ந்த எரிப்புகள் எப்போதும் இல்லாவிடாலும் பெரும்பாலும், ஒரு தலைமை திணிவு வெளியேற்றத்துடன் இருக்கும்.மிகவும் சக்திவாய்ந்த எரிப்புகள் கூட மொத்த சூரிய ஒளியில் மாறுபாட்டை ஏற்படுத்துவதை அறிய முடியாது (இதுவே “சூரிய மாறிலி”).
சூரிய எரிப்புகள் ஒரு சக்தி-சட்ட நிறமாலையில் நிகழ்கின்றன; தெளிவாகக் காணக்கூடிய நிகழ்வை உருவாக்க பொதுவாக 1020 ஜூல் ஆற்றல் வெளியீடு போதுமானது, அதே நேரத்தில் ஒரு பாரிய நிகழ்வு 1025 ஜூல்கள் வரை உமிழும். (ஆங்கிலத்தில் விவரிக்கப்படும் செயற்பாடுகளை நிகழ்வு எனக் குறிப்பிடுவது வழக்கம். இங்கு சூரியப் எரிப்பே அவ்வாறு குறிப்பிடப்படுகிறது.)
இந்த சூரிய எரிப்புகள், சூரியனின் கொரோனா (சூரியனிலிருந்து வெளிப்படும் பிளாஸ்மா ஒளி) வழியாக விண்வெளியில் பிளாஸ்மாக்கள் மற்றும் துகள்கள் வெளியேற்றப்படுவதோடு நெருக்கமான தொடர்புடையவை; இந்த சூரிய எரிப்புக்கள் வானொலி அலைகளை (இவை ஒரு நகரத்தின் அளவு அலை நீளமுடைய நீண்ட அலைகள்) அதிக அளவில் வெளியிடுகின்றன. வெளியேற்றம் பூமியின் திசையில் இருந்தால், இந்த குழப்பத்துடன் தொடர்புடைய துகள்கள் மேல் வளிமண்டலத்தில் (அயனோஸ்பியர்) ஊடுருவி பிரகாசமான அரோராக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு நீண்ட தூர வானொலி தகவல்தொடர்புக்கு இடையூறு விளைவிக்கும். பொதுவாக சூரிய பிளாஸ்மா வெளியேற்றங்கள் பூமியை அடைய சில நாட்கள் ஆகும். சூரியன் மட்டுமல்லாமல், மற்ற நட்சத்திரங்களிலும் எரிப்பு ஏற்படுகிறது. அங்கு நட்சத்திர எரிப்பு என்ற சொல் பொருந்தும்.இதன்போது சார்பியல் தத்துவங்களுக்குட்படும் தன்மையுள்ள உயர் ஆற்றல் துகள்கள், மின்காந்த கதிர்வீச்சுகளுடன் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வரக்கூடும்.
ஜூலை 23, 2012 அன்று, ஒரு பெரிய, சேதம் விளைவிக்கக்கூடிய சூரிய புயல் (சூரிய விரிவு + கொரோனல் துணிக்கை வெளியேற்றம் + மின்காந்த கதிர்வீச்சு) பூமியைத் தவறவிட்டது. 2014 ஆம் ஆண்டில், ப்ரிடெக்டிவ் சயின்ஸ் இன்க் இன் பீட் ரிலே ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார், அதில் 1960 களில் இருந்து இன்று வரை கடந்த சூரிய புயல்களின் பதிவுகளை விரிவாக்குவதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் பூமியைத் தாக்கும் இதேபோன்ற சூரிய புயலின் செயற்பாடுகளைக் கணக்கிட முயன்றார். இதுபோன்ற நிகழ்வு மீண்டும் ஏற்பட 12% வாய்ப்பு இருக்கலாம் என்று அவர் முடிவு தெரிவித்தார்.
விளக்கம்
சூரிய எரிப்புகள் சூரிய வளிமண்டலத்தின் அனைத்து அடுக்குகளையும் (ஒளிமண்டலம், நிறவளையமண்டலம் மற்றும் கொரோனா) பாதிக்கிறது. பிளாஸ்மா ஊடகம் மில்லியன்களின் பத்தாம் மடங்கு கெல்வின்களுக்கு வெப்பப்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் கனமான அயனிகள் ஒளியின் வேகத்திற்கு அருகில் துரிதப்படுத்தப்படுகின்றன. ரேடியோ அலைகள் முதல் காமா கதிர்கள் வரை அனைத்து அலைநீளங்களிலும் மின்காந்த நிறமாலை முழுவதும் மின்காந்த கதிர்வீச்சை இவ்வெரிப்புகள் உருவாக்குகின்றன.
பார்வை வீச்சுக்கு வெளியே உள்ள அதிர்வெண்களில் பெரும்பாலான ஆற்றல் பரவுகிறது. எனவே பெரும்பாலான எரிப்புகள் வெற்றுக் கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதனால், அவை சிறப்பு கருவிகளைக் கொண்டு கவனிக்கப்பட வேண்டும். கொரோனாவை சூரிய உட்புறத்துடன் இணைக்க தீவிர காந்தப்புலங்கள் ஒளிமண்டலத்தில் ஊடுருவுகின்ற இடங்களான சூரிய புள்ளிகளைச் சுற்றியுள்ள செயற்பாட்டுப் பகுதிகளில் எரிப்பு ஏற்படுகிறது.
அங்கு. கொரோனாவில் சேமிக்கப்பட்ட காந்த ஆற்றலின் திடீர் வெளியேற்றம் மூலம் (நேர அளவுகள் ஒன்று முதல் பத்து நிமிடங்கள் வரை) எரிப்புகள் இயக்கப்படுகிறது. அதே ஆற்றல் வெளியீடுகள் கொரோனா துணிக்கை வெளியேற்றங்களை (CME கள்) உருவாக்கக்கூடும், இருப்பினும் CME களுக்கும் எரிப்புகளுக்கும் இடையிலான உறவு இன்னும் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை.
சூரிய எரிப்புகளால் வெளிப்படும் எக்ஸ்-கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு பூமியின் அயனி மண்டலத்தை பாதிக்கும் என்பதோடு நீண்ட தூர வானொலி தகவல் தொடர்புகளை சீர்குலைக்கும். பத்தின் மடங்குகளாலான அலைநீளங்களில் நேரடி வானொலியலை உமிழ்வு ரேடார்கள் மற்றும் அந்த அதிர்வெண்களைப் பயன்படுத்தும் பிற சாதனங்களின் செயல்பாட்டைத் தொந்தரவு செய்யலாம்.
முதன்முதலில் சூரியனில் சூரிய எரிவை ஒரு சூரியக் கரும்புள்ளி குழுவிற்குள் சிறிய பகுதிகளின் உள்ளமைப்பு மயமாக்கப்பட்ட பிரகாசங்களாக, ரிச்சர்ட் கிறிஸ்டோபர் கேரிங்டன் மற்றும் ரிச்சர்ட் ஹோட்சன் ஆகியோர் 1859 இல் கவனித்தனர். தொலைநோக்கியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஒளிவளையிகள் அல்லது பல்வேறு நட்சத்திரங்களின் செயற்கைக்கோள் தரவுகளைப் பார்ப்பதன் மூலம் நட்சத்திர எரிப்புகளை ஊகிக்க முடியும்.
சூரிய ஒளி எரிப்பு நிகழும் அதிர்வெண், சூரியன் குறிப்பாக “செயலில்” இருக்கும் போது அடிக்கடியும், சூரியன் “செயலற்றதாக” இருக்கும்போது வாரத்துக்கு ஒன்று எனவும், 11 ஆண்டு சுழற்சியை (சூரிய சுழற்சி) பின்பற்றி மாறுபடுகிறது. அதன்படி, சிறிய எரிப்புகளை விட பெரிய எரிப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
உருவாகக் காரணம்
துரிதப்படுத்தப்பட்ட ஏற்றமுடைய துகள்கள், முக்கியமாக எலக்ட்ரான்கள், பிளாஸ்மா ஊடகத்துடன் தொடர்பு கொள்ளும்போது எரிப்பு ஏற்படுகிறது. காந்த மறு இணைப்பு இடம்பெறுவதே ஏற்றமுடைய துகள்களின் இந்த முடுக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது என்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. சூரியனில், சூரிய ஆர்கேட்களில் (காந்தக் கோடுகளைப் பின்பற்றி நெருக்கமாக நிகழும் சுழல்களின் தொடர்) காந்த மறு இணைப்பு ஏற்படலாம். இந்த சக்தியின் கோடுகள் விரைவாக குறைந்த ஆர்கேட் நிலையுடைய சுழல்களுடன் மீண்டும் இணைகின்றன. அவ்வாறு இணையும் போது ஒரு திருகுசுழல் வடிவமுள்ள சக்திக்கோடுகள் காந்த சுழகளுடன் இணையாது மீதம் விடப்படுகிறது. இந்த மறு இணைப்பில் திடீரென ஆற்றல் வெளியீடப்படுவதே துகள் முடுக்கத்தின் தோற்றதுக்கு காரணமாகின்றது. இணைக்கப்படாத காந்த திருகுசுருள் புலம் மற்றும் அதில் உள்ள பொருள் ஆகியவை வன்முறையாக வெளிப்புறமாக விரிவடைந்து ஒரு கொரோனா துணிக்கை வெளியேற்றத்தை உருவாக்குகின்றன. சூரியனில் காந்தப்புலங்கள் மிகவும் வலுவாக செயலில் இருக்கும் உள்ள பகுதிகளிலிருந்து சூரிய எரிப்புகள் பொதுவாக ஏன் வெடிக்கின்றன என்பதையும் இது விளக்குகிறது.
ஒரு எரிப்பு ஆற்றலின் மூலம் தொடர்பான ஒரு பொதுவான உடன்பாடு இருந்தாலும், அது நடைபெறும் வழிமுறைகள் இன்னும் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை. காந்த ஆற்றல் எவ்வாறு துகள்களின் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது என்பது தெளிவாக இல்லை, அல்லது சில துகள்கள் எவ்வாறு GeV வரம்புக்கும் (109 எலக்ட்ரான் வோல்ட்) மற்றும் அதற்கு அப்பாலும் துரிதப்படுத்தப்படலாம் என்பது தெரியவில்லை. துரிதப்படுத்தப்பட்ட துகள்களின் மொத்த எண்ணிக்கையிலும் சில முரண்பாடுகள் உள்ளன, அவை சில நேரங்களில் கொரோனல் சுழற்சியில் உள்ள மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதாக தெரிகிறது. விஞ்ஞானிகளால் முழுமையாக எரிப்புகளை கணிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும் சூரிய எரிப்புகள் பூமியைத் தாக்கும் பட்சத்தில் அவை நம் தொலைதொடர்பாடல் துறையை மிகவும் மோசமாக பாதிக்கலாம் என்பது மற்றும் உறுதியாக தெரிவிக்கக்கூடியது.
இது போன்ற விண்வெளி சார் தகவல்களுக்கு எமது தொழில்நுட்ப பக்கத்தை நாடவும்.