இந்த முடிவுக்குப் பின்னர், அவனுடைய நண்பர்கள், உறவினர்கள், அவனுக்கே தெரியாமல் அவனை தொலைவிலிருந்து ரசித்துக்கொண்டும், அன்பு செலுத்திக்கொண்டு இருக்கும் பிரியர்கள் எல்லோரையும் ஏமாற்றுபவன் ஆக இவன் மாறிவிடுவான். அதற்குப் பிறகு அவர்கள் நினைத்தாலும் இவனிடம் கேள்வி கேட்க முடியாமல் போய்விடும். இல்லை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்கும் போது இவன் காதுகளுக்கு அது எட்டாமல் போயிருக்கும்.
நள்ளிரவு 02: 40
மூக்கின் நுனியில் வியர்வைத்துளி தனது கடைசி தரிப்பிடத்தை வந்தடைந்து இருந்தது. அவனுக்குள் நிறைந்திருந்த பதற்றத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய வகையில் அவனுடைய முகம் முழுவதுமாக உருமாறிப் போய் இருந்தது. பிடரியும், நெற்றியும் வியர்த்த வியர்வையில் முகம் முழுவதும் துளித்துளியாய் நிறைந்து போய் பார்ப்பதற்கே சிறிது அலங்கோலமாக மாறியிருந்தான்.
இவ்வளவுக்கும் காரணம் வெறுமனே பதற்றம். அவன் செய்யப்போகும் செயலின் விளைவு தொடர்பாக அவனுக்கு சரியான முடிவினை எடுக்க முடியாமல் இருந்ததனால் பதற்றமே உருவமாய் மாறிப்போய் இருந்தான். எந்த ஒரு விடயத்தையும் முதல் தடவையில் செய்யும்பொழுது மட்டும்தான் பதற்றமடைய வேண்டும் என்பதில்லை அல்லவா ?
இதற்கு முன் பல தடவை செய்த செயலை கூட புதிய இடத்திலோ, புதிய நபரிடமோ, புதிய முறையிலோ செய்யப் போகின்றோம் என்றால் பதற்றம் தானாகவே வந்து தொற்றிக்கொள்கிறது.
அவனுக்கும் அவ்வாறுதான். அவனுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையுமே புரட்டிப் போடக்கூடிய விடயமாக அவன் அதை கருதி இருந்தான்.
பாவம். சிறிது பயந்த சுபாவம் மிக்கவன். இதற்கு முன்பு அவன் இவ்வாறு இருந்ததில்லை. எதற்கெடுத்தாலும் சிறிதும் தயங்காமல் உடனடியாக செய்து முடிப்பான். பேசுவதிலும் பழகுவதிலும் கூட அவனை அனைவருக்கும் பிடித்திருந்தது. மனதில் பட்டதை நேரடியாகச் சொல்லும் பழக்கம் அவனுக்குள் இயல்பாகவே இருந்தது.
ஆனால் மனிதச் சமூகம் நாங்கள், மிகவும் வித்தியாசமானவர்கள் தானே ?
96 ராமை பார்த்து ரசித்துவிட்டு அப்படியொருவன் தன்னிடத்தில் வந்தால் போடா பழம் என்று விடுவோம்.
ஊரில் உள்ள பெண்ணை எல்லாம் முழுவதுமாக பார்த்துவிட்டு, உன்னை வேறு யாரும் பார்த்து விடக்கூடாது என தன் காதலியை மூடிக் கொள்ளச் சொல்வோம்.
அழுகின்ற ஆணை பேடி என்போம்.
குடிக்கும் பெண்ணை சிங்கப் பெண் என்போம்.
இவ்வாறான முரணான சமூக செயற்பாடுகளால் முற்று முழுவதுமாக சிதைக்கப்பட்டு, மனம் நொறுங்கிப் போய், உண்மையான வாழ்க்கையையும் வாழ முடியாமல், பொய்யான நடிப்பையும் நடிக்கத் தெரியாமல் ஒதுங்கிக் கிடந்தான் பல மாதங்களாக.
நள்ளிரவு 02:41
இன்று அவற்றுக்கெல்லாம் முடிவு வைப்பதற்கு அவனுக்கான தருணம் அமைந்திருக்கும் முக்கியமான நாள். யாரிடமும் பெரிதாகப் பேசுவதில்லை என்பதனால் அவன் செய்கின்ற செயல்கள் தொடர்பாக அவனுக்கு என இருந்த ஒன்றிரண்டு பேரை கொண்ட நட்பு வட்டாரத்திற்கு கூட எந்த தெளிவும் இருக்கவில்லை.
இந்த நேரத்தில் செய்தால்தான் யார் கவனத்திலும் சிக்காமல் இருக்கலாம் என்பதும் அவனுக்குத் தெரியும்.
சரியாக இன்றைய நாளில் அவன் தொடர்பாக யாருக்கும் எந்த எண்ணமும் எழவில்லை என்பதனை இரண்டு நாட்களாக எந்த கலந்துரையாடல்களும் இல்லாததைக் கொண்டு முடிவெடுத்திருந்தான்.
அவனொரு படகு : ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அவனொரு படகே !
நள்ளிரவு 02.43
அவன் காத்துக் கொண்டிருக்கிறான்..
அதற்குள் கதையைச் சொல்லி விடுகிறேன்…
வாழ்கின்ற வாழ்க்கைக்கு கொஞ்சமேனும் அர்த்தம் இருக்க வேண்டும் என்பது அவனுடைய எண்ணம். கடைசி கொஞ்ச நாட்களாக அவன் அடைந்திருந்த நிலையானது, மனிதர்களோடு எந்தவித உறவையும் அவனுக்கு ஏற்படுத்த கூடியதாக இல்லை.
காதல் பாடல்கள் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் பாடலில் நீண்ட வரிகள் வரும் பொழுது, அவற்றோடு சேர்ந்தே பாடிக்கொண்டு போவான் உச்சஸ்தாயியில் வைத்து இவனும் சேர்ந்து பாடலோடு பாடலாக கத்துவான். சமயங்களில் கைகளை கூட முற்றாக விரித்துக் கொள்வான். அந்த நொடியில் அவன் யாருடைய அன்பையும் எதிர்பார்ப்பதில்லை.
அவனுக்கு அவன் மட்டுமே. அந்த பாடல் மட்டுமே. அவன் கேட்கும் பாடலை எவ்வளவு ரசிக்கின்றான் என்பதைப் பார்க்க யாரும் இல்லை. அந்தப் பாடலில் அவன் ரசிக்கும் விடயங்களைச் சொல்லி காட்டவும் யாருமில்லை. ஆனாலும் அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை.
ஏனென்றால் அங்கிருப்பது அவனும் பாடலும் மட்டுமே.
வாழ்வின் கடைசிக் கட்டத்தில் வாழ்விலே ரசிக்கின்ற தருணங்கள் அனைத்தும் இதைப் போலத்தான் ஞாபகம் வரும். இவன் கூட இதனை முற்றாக எதிர்பார்த்திருக்கவில்லை.
அண்மையில் சில நாட்களாக சற்று விகாரமாகவே சிந்திக்கும் அவன் மனது, மோதலின் பின் உருவாவது காதல் போல, எனக்கென இருக்கின்ற ஒரே காதல் இந்த முடிவு மீதான காதல் தான் போலும்.”இத்தனை நாள் இவ்வாறன முடிவுகள் பிடிக்கவில்லை, இன்றோடு அது என்னைப் பிடித்துக் கொள்ளப் போகிறது” என எண்ணிக் கொண்டிருந்தான்.
முடிவு என்று ஒன்றை நாடும் ஒவ்வொரு நபருக்கும் அவரவருடைய கவலைகள் என்று ஒன்று இருக்கும். தன்னைச் சூழ எத்தனை பேர் இருந்தாலும் அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மறைக்கின்ற அளவுக்கு அந்த சமூகம் அந்நபரை சங்கடப்படுத்தி வைத்திருக்கும்.
அவ்வாறு, இவனுடைய காரணம், இவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கை கதை. சொல்லத் தொடங்கினால் நேரம் போதாது
என்ன காரணமாக இருந்தாலும் இவனுடைய முடிவு அவ்வளவு நல்லதல்ல…
இந்த முடிவுக்குப் பின்னர், அவனுடைய நண்பர்கள், உறவினர்கள், அவனுக்கே தெரியாமல் அவனை தொலைவிலிருந்து ரசித்துக்கொண்டும், அன்பு செலுத்திக்கொண்டு இருக்கும் பிரியர்கள் எல்லோரையும் ஏமாற்றுபவன் ஆக இவன் மாறிவிடுவான். அதற்குப் பிறகு அவர்கள் நினைத்தாலும் இவனிடம் கேள்வி கேட்க முடியாமல் போய்விடும். இல்லை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்கும் போது இவன் காதுகளுக்கு அது எட்டாமல் போயிருக்கும்.
நள்ளிரவு 02.53
அவன் எடுத்த முடிவை நிறைவேற்றுவதற்கு ஒரு கோடு பின்னால் நிற்கிறான்.
இதயமா பயங்கரமாக அடித்துக் கொள்கிறது.
லப் டப் லப் டப் ……
அவன் அடுத்த அடியை எடுத்து வைக்கும் பொழுது, இதுவரை இருந்த ஒட்டுமொத்த உலகமும் அவனுக்கு முடிந்து போய்விடும்.
இறுதி நொடிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன…
இதுவரை அவன் உலகம் முழுவதும் சுற்றிப்பார்த்து எடுத்துவைத்த புகைப்படங்களில் ஒவ்வொன்றாக ரசித்துக்கொண்டான்.மனதில் திடீரென்று ஒரு குளிர்ந்த உணர்வு பரவி தலை வரை வந்து விறைத்து, மயிர்க்கால்கள் நட்டுக் கொண்டன. கண்களில் நீர் தானாக வழிகிறது.
பிஞ்சு மனது பாவம், என்ன செய்யும். இயலாமையின் முடிவுகள் என்றுமே வலி நிறைந்தவை; அடைபவருக்கும், அதனைப் பற்றி அறிவோர்க்கும்.
நள்ளிரவு 02:56
கட்டாயம் நான் இந்த முடிவை எடுக்கத்தான் வேண்டுமா ?
அவனுக்குள் இப்பொழுது சந்தேகங்கள் துளிர்க்கத் தொடங்கியது.
ஆனால் சிந்திக்கின்ற அவனுடைய மூளையை விட , காயப்பட்டு இருந்த அந்த இதயம் அதிக ஆதிக்கத்தைச் செலுத்தியது.
நிச்சயம் செய்தே ஆக வேண்டும்.
சந்தோஷப் பட்டிருக்கிறேன். ஆனால் அது நூற்றில் ஒன்றுதான். கவலைகள் தான் என்னை சூழ்ந்து இருக்கின்றது. இப்பொழுது நான் இதை செய்யாவிட்டால் நிம்மதி கிடைக்க வாய்ப்பே இல்லை.
இதுவரை அவன் வெறுத்த அவனுடைய முகம், இந்த ஒரு முறை மட்டும் அவனுக்கு அழகாக தோன்றியது. இந்த கடைசித் தருணம் வரை நீதான் என்னுடன் இருந்திருக்கிறாய். எனக்கு நான். நான் மட்டுமே..
இந்த முடிவுக்கு பின்னரும் அதுவே தொடரப் போகிறது.
பக் பக் பக் பக்…….
நெஞ்சில் கையை வைத்து பார்த்தபொழுது அவனால் சத்தத்தை காது வழியாகக் கூட கேட்கக் கூடியதாக இருந்தது.
நான் ஒருவன் வாழ்ந்தேன் என்கின்ற எண்ணமே இனி யாருக்கும் வரப் போவதில்லை. எல்லாம் முடிந்து போகட்டும்.
சில நாட்கள் தேடுவார்கள். செய்தி அனுப்பி பார்ப்பார்கள். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். நான் வேண்டுமென்றே பதில் அனுப்பாமல் இருப்பதாக கூட நினைக்கட்டும்.ஆனால் பதில் வராததும் அவர்களாக புரிந்து கொள்ளட்டும். பதில் அனுப்ப நான் இருக்கப்போவதில்லை. என்னுடைய அடையாளம் இருக்கப்போவதில்லை.
இனிமேல் யார் பகைத்தால் என்ன ? விட்டால் என்ன ?
நள்ளிரவு 02:59
அவன் மனதுக்குள் கேட்கின்ற இந்த ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுடைய முடிவில் அவனை உறுதிபடச் செய்தன. இதற்கு மேலும் இறுகப்பற்றி பயனில்லை. யாராலும் கணக்கெடுக்கப்படாத இந்த வாழ்க்கைக்கு இதற்கு மேலும் அவகாசம் தேவையில்லை. இதற்கு மேல் எந்த விதமான வலிகளையும் தாங்க நான் படைக்கப்படவும் இல்லை, போதும் முடிந்து போகட்டும்.
இதுதான் தருணம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.
நள்ளிரவு 03:00
“Do you want to Delete your Instagram account Permanantly ? “
“Yes”.