விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
மனிதர்கள் முதல் தேவர்கள் வரை, யாராக இருந்தாலும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரும் கணங்களுக்கெல்லாம் அதிபதியும் விநாயகரை நாள்தோறும் வணங்கி வருவதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தை காண முடியும்.
சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை. கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.
மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு ஆவணி மாதம் 25ஆம் தேதி செப்டம்பர் 10ஆம் தேதி இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.
எப்படி வழிபாடு செய்வது?
வீட்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாசலில் மாவிலையைத் தோரணமாகக் கட்ட வேண்டும். பூஜையறையை நன்றாக சுத்தம் செய்து விளக்கு, பூஜை பொருட்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பூஜையறையில் சிறியதொரு மனையை அமைத்து அதில் கோலமிட்டு இலையை வைத்து கொள்ளவும். இலையின் நுனியை வடக்குப் பார்த்தபடி வைப்பது சிறப்பு. பின் இலையின் மேல் பச்சரிசியை பரப்பி அதன் நடுவே விநாயகர் சிலையை வைக்க வேண்டும். விநாயகர் சிலையை உங்களுக்கு தகுந்தாற்போல் அழகுப்படுத்தி கொள்ளலாம்.
பிறகு விநாயகருக்கு பல வகையான மலர்கள் சூட்டி வழிபடலாம். பல வகையான பழங்களையும் விநாயகருக்கு படைக்கலாம். விநாயகருக்கு பிடித்த அருகம்புல் அல்லது எருக்கம்பூ மாலை செய்து அணிவிக்கலாம்.
விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி நாளன்று விநாயகர் துதி, விநாயகரின் திருநாமங்கள், விநாயகர் அகவல் படித்து வணங்கலாம். விரதம் இருப்பவர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல், பூஜைகளை முடித்து, விநாயகரை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
நாட்டையும், மக்களையும் காக்க இந்த ஆண்டு நாம் எளிமையாக விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வணங்கி அனைத்து நலன்களையும் பெற வேண்டிக் கொள்வோம்.
நன்மைகள்
- விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும்.
- அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர்.
- அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள் நீங்கும்.
- வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும்.
- வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும்.
துன்பங்கள் விலகி இன்பம் பெற வினை தீர்க்கும் விநாயகரை விரதமிருந்து வழிபடுங்கள்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப்பேறும், துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும்.
விக்னங்கள் யாவற்றையும் நீக்கி பக்தர்கள் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் வள்ளலுமாகிய விநாயக பெருமானை விநாயகர் சதுர்த்தி அன்று விரதமிருந்து வணங்கி பேரருள் பெற்றிடுவோமாக.