இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.
கிருஷ்ண ஜெயந்தி
மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி திங்கட்கிழமை நாளை கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
எப்படி விரதம் இருக்க வேண்டும்?
கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் உட்பட எந்தவொரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம். சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் நள்ளிரவில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின் தான் விரதத்தை முடிப்பது வழக்கம்.
நீர், உணவு சரியான நேரத்தில் எடுத்து கொள்ளாவிட்டால், உடல் நிலை பாதிக்கப்படும் என்பதாலும், பலர் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருக்க விரும்புபவர்கள் திட ஆகாரத்தை எடுத்து கொள்ளாமல் நீர், பழங்கள், பழச்சாறு, பால் போன்ற திரவ ஆகாரத்தை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
மேலும், உப்பு சேர்த்த உணவுகள், தானியங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக விரதத்தின்போது எடுத்து கொள்ளக்கூடாது.
கிருஷ்ணரை முழு மனதோடு ஆராதித்து விரதம் இருப்பவர்கள் தங்களால் இயன்ற தான, தர்மங்களை செய்வது நல்லது.
இந்த நாளில் நாம் கிருஷ்ணரை முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினால், நம்மை காத்து அருளுவார்.
விரதம் இருக்கும் நேரத்தில் கிருஷ்ணர் குறித்த பஜனைகள், பாடல்கள், கீர்த்தனைகள் இசைத்தும், பகவத் கீதை, விஷ்ணு போற்றியை படிக்கலாம்.
குழந்தை வரம் வேண்டுவோர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விரதமாக கிருஷ்ண ஜெயந்தி விரதம் பார்க்கப்படுகின்றது.
என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு.
கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணெய், அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும்.
கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்ய வேண்டும்.
வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும்.
பாத கோலம் போட்டு அலங்கரித்தால் குட்டிக் கண்ணன் நம் வீடு தேடி வருவான் என்பது நம்பிக்கை.