ஐயப்ப பக்தர்கள்
எப்போது கார்த்திகை பிறக்கும் என்ற ஐயப்ப பக்தர்களின் காத்திருப்பு வந்துவிட்டது. இன்று கார்த்திகை மாதம் பிறந்தது . நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலை அணிவது வழக்கம்.
இனிமேல் சாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷம் எங்கும் எதிரொலிக்க ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் புது புது மாலை வாங்கி அணியலாம். தொடர்ந்து செல்பவர்கள் ஒரே மாலையாக பயன்படுத்திக்கொள்வது சிறந்தது. ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலருடன் கூடிய 108 அல்லது 54 மணிகள் உள்ள துளசி மாலையை வாங்கி அணிய வேண்டும்.
மண்டல பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி (26.12.2021) நடைபெறும் எனவும், ஜனவரி 14ஆம் தேதி (14.01.2022) மகரவிளக்கு பூஜை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு கட்டுப்பாடு
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பம்பையில் புனித நீராடலாம் எனவும், சன்னிதானத்தில் தங்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடமும் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்ய செல்ல முடியாது. பக்தர்களிடம் நெய் பெற்ற பின் அதை அங்கு உள்ள ஊழியர்கள் கொண்டு சென்று அபிஷேகத்துக்கு கொடுப்பார்கள். இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.