இணைய வாசகர்களுக்கு இனிய வணக்கங்கள்!! இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்
பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர்களிடையே இருந்து வருகிறது. ஐயனார், காவல் தெய்வம் என்றும், கிராம தேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.
நாட்டுப்புற ஆண் தெய்வங்களுள் ஐயனார் முதன்மை இடம் பெறுகிறார். ஐயனார் கோயில்கள் ஆரம்பக்காலத்தில் அடர்ந்த வனத்திற்கு நடுவே, மலையிலும், எல்லைப்பகுதிகளிலும், காலப்போக்கில் சிற்றூர்களிலும் தோன்றின. இதன்பின் மக்கள் தாங்கள் குடியேறிய பகுதிகளில் உள்ள எல்லைகளில் கோயில் அமைத்து வழிபட்டனர்.
ஐயனார் என்றதும் நம் நினைவுக்கு வருவன, குதிரையும் அவர்தம் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் ஆயுதங்களுமே. கிராமங்களில் எல்லைச்சாமியாய், மண்ணையும் மக்களையும் காக்கும் காவல் தெய்வமாய் திகழ்பவர் ஐயனார்.
ஐயனார் வரலாறு :
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியை குலைக்க வேண்டியிருந்தது. இதற்காக பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டு தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தை கண்டவர்களின் மனதில் தடுமாற்றம் ஏற்பட்டது. மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்கு சென்று அவர்களின் மனதை அலைபாய செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.
பிச்சாண்டவராக வந்த சிவபெருமானுக்கும், மோகினியாக வந்த திருமாலுக்கும் ஏற்பட்ட காதலால் உருவான கடவுள் தான் ஐயனார்.
ஐயனார் ஊருக்குள் விரோதிகள், கள்வர்கள், கொடிய விலங்குகள், தொற்று வியாதிகள் வராமல் பாதுகாப்பார். வயல்களில் விளையும் பயிர்களை காப்பவரும் இவரே.
ஐயனார் வடிவம்
இவர் குதிரையின் மேல் சவாரி செய்வது போல் இருப்பார். குதிரையின் முன் கால்கள் தூக்கியபடி கம்பீரமாக இருக்கும். யானை மீது அமர்ந்த ஐயனாரும் சில ஊர்களில் காணப்படுகிறார்.
சில ஊர்களில் பெரிய அளவில் செய்யப்பட்ட ஐயனார் சிலை திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐயனார், கிரீடம் அணிந்து பெரிய மீசையுடன் காட்சி தருவார். நெற்றியில் திருநீறு அணிந்திருப்பார். வலது கையில் செங்கோல் அல்லது தண்டம் வைத்திருப்பார். சாட்டை, அரிவாள், வில், அம்பு ஆகியவற்றையும் வைத்திருப்பார். இடது காலை மடித்து வைத்துக்கொண்டு, வலது காலை கீழே தொங்கவிட்டிருப்பார்.
கோவிலின் கருவறையில் உள்ள ஐயனார் தமது மனைவியர்களான பூர்ணா, புஷ்கலா ஆகியோருடன் காட்சி தருகிறார். இவர் ஸ்ரீ பூர்ணா, புஷ்கலா சமேத ஐயனார் என்று அழைக்கப்படுகிறார். சில கோவில்களில் ஐயனார் துணைவியர்கள் இன்றி தனித்துக் காணப்படுகிறார்.
பரிவார தெய்வங்கள்
இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.
கருப்பர்
ஐயனார் வழிபாட்டில் கருப்பர் மிகவும் முக்கியமானவராகும். இவர் பக்தர்களான சாமியடிகள் மீது இறங்கி வந்து அருள்பாலிப்பார். சாமியடிகள் மூலம் வலம் வந்து தீயசக்திகளை விரட்டுகிறார் என்ற நம்பிக்கை இன்று வரை இருந்து வருகிறது.
நம்பியவருக்கு காவலன் எதிர்ப்பவர்களுக்கு எமன் காவல் தெய்வம் கருப்பசாமி
இந்தக் கட்டுரை போன்ற பக்திக் கட்டுரைகளுக்கு எமது கலாச்சாரம் பகுதிக்கு செல்லவும்.