மக்கள் மத்தியில் சித்தர்கள் வாழ்வானது சாமான்ய வாழ்வை விட உயர்ந்தது அது எல்லோருக்கும் பொருந்தாதது என நினைத்து சித்தர் வாழ்வைப் பற்றி அறிவதில் ஊக்கமின்றி இருக்கின்றனர். சித்தர்களுடைய வாழ்வு உண்மையில் எப்படியானது ? அது உயர்ந்ததா என்ற கேள்விக்கு இலங்கை சித்தர் பீடத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய யோகி கோபிநாத் அவர்கள் குழுச் செய்தியாக பகிர்ந்ததை நாம் அவரது அனுமதியோடு வெளியிடுகிறோம்.
சித்தர்கள் வழி தான் உயர்ந்ததா ?
சித்தர்கள் வழி சித்தர்களுக்கும், அவர் தம் மாணாக்கர்களுக்கும், சீடர்களுக்கும், அவர்களின் வழிதோன்றல்களுக்கும் உகந்தது. அதிலும், அவர்கள் யாரையும் இதுவரை எங்கள் வழியை தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை, மாறாக உங்கள் வழியில் உங்கள் மனம் லயம் கொள்ள வில்லை, அது உங்கள் ஆணவத்தையும் மாயையும் வளர்த்து விடுகின்றது என்றால் அதனை சுட்டிக்காட்டுவார்கள்.
நீங்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தீர்கள் என்றால் சாடவும் செய்வார்கள். அதிலாவது, அதற்காவது உண்மையாக இருங்களேன் என்ற ஆதங்கத்தில்!!! சித்தர்கள் வழி தனில் செல்ல முதன்மையானது மனச்செம்மை அஃதில்லை யெனின் அது மிகவும் கடுமையான ஒரு மார்க்கமாக உங்களுக்கு இருக்கும். பின்னர் அதனை நீங்கள் வெறுக்க ஆரம்பித்து விடுவீர்கள். அதன்பொருட்டே அவர்கள் யாரையும் எங்கள் வழியை பின்பற்றுங்கள் என்று அவர்களாக அழைப்பதில்லை. அப்படி அழைத்து இருந்தால் அவன் அதற்கு உரியவன் என்று அர்த்தம்.
மேலும் அவர்கள், உண்மையை உரைத்து இருக்கின்றார்கள். தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆத்ம நிலையைப் பற்றியும் விவரித்து இருக்கின்றார்கள், அதனை அடையும் வழியையும் எடுத்துரைத்து இருக்கின்றார்கள். பொய்யர்களையும், தர்மத்தை மீறுபவர்களையும் வெகுவாக சாடியும் இருக்கின்றார்கள். அதுவே அவர்கள் வழி. கூட்டம் சேர்க்க இயலாது. அதில் பெருமை, புகழ் சம்பாதிக்க இயலாது. தனம் கிடைக்கப்பெற்றாலும் அதனை முறையாக செலவு செய்திடல் வேண்டும். போய் கோவிலில் பூட்டி வைக்க இயலாது.
இப்படி பல ஊழ் வினையோடு சம்மந்தப்பட்ட சூட்சமமான காரியங்களை, அதாவது உலகம் உங்களை ஏளனமாக பார்த்து பரிகாசம் செய்தாலும் அவைகளை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். ஏன் அரசன் போல கூட வாழலாம், ஆனால் அதில் ஊழ்வினை சம்பாதித்து விடக் கூடாது. தர்மம் தவறி விடக் கூடாது. அதற்கு முதலில் மனம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். உலக பாடங்கள் செம்மையாக புரிந்திருக்க வேண்டும். இப்படி அந்த மார்க்கமே பலருக்கு எட்டாக் கனி! “யாருக்கு… எந்த ஆன்மாவிற்கு அது உகந்ததோ அவர்களுக்கு அது சித்தியாகும். சித்தர்கள் வழி யென்றால் என்ன?அதன் சாராம்சம் இன்னும் ஒரு முறை:
- உலக வாழ்க்கையையும் ஆன்மீக வாழ்க்கையையும் தனியாக அவர்கள் பிரித்து பார்ப்பதில்லை. எனவே அவரவர் ஊழ்வினைக்கு ஏற்ப இல்லறம் பூண்டு, உழைத்து இரை தேடி, உடன்பாடுகளை பூர்த்தி செய்து, மீதம் இருக்கும் காலத்தில் ஆத்ம விமோசனம் கொள்ளும் வழியை தேடிடல் வேண்டும். இயற்கை சார்ந்து, இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்திடல் வேண்டும்.
- உருவ வழிபாடு தவிர்த்து அருப வழிபாடு மூலம் இறைவனை உணர வேண்டும்.
- இதில் குருத்துவம் இன்றியமையாதது, மேற் சொன்ன இரண்டும் குரு நாதரின் உத்தரவு பெற்று அது உங்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கு இடையூறு இழைக்காத வண்ணம் வாழ்ந்திடல் வேண்டும்.
- குரு நாதர் வழி சென்று அவர் போதித்த வேதம் படி நின்று வாழ்ந்து காட்டிடல் வேண்டும். அவர் வழி சென்று அவர் நிலை அடைந்து இறைவனோடு ஒன்றித்து இருத்தல் வேண்டும்.
இதில் [2] கடினம். [4] மிக மிக கடினம்.சித்தர்கள் வழி கடினம், அதிலும் ஞான குருமார் வழியில் செல்வது மிக மிக கடினம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போல இருக்கும், எந்த உதவியும் கிடைக்காது, உங்களுக்கு நீச்சல் தெரியாது என்றாலும், பட்டென குளத்தில் “நீந்தி வா” என்று தள்ளி விட்டு விடுவார்கள். பொதுவாக, யாருக்கும் ஏதும் சொல்ல மாட்டார்கள், குறிப்பாக குறி சொல்ல மாட்டார்கள். மெளனம். மெளனம். எப்போதும் மெளனம். எப்போதும் நிர்சலனத்தில் இருப்பார்கள். இப்பொழுது உடல் இருந்தால் எப்படி மெளன நிலையில் இருந்திருப்பாரோ, அப்படி, உயிர், இன்று ஆழ் கடல் மெளன நிலையில் இருக்கின்றது.
அங்கிருந்து உங்களை உங்களுக்குள் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அதனால் உங்களது ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு தெரிந்து விடுகின்றது. உங்கள் நோக்கம். உங்களது எண்ணம் என்று அனைத்தும் அவர்களுக்கு வெட்ட வெளிச்சம். உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளலாம், ஆனால் அவர்களை ஏமாற்ற இயலாது! உங்கள் ஆதி முதல் அந்தம் வரை அவர்கள் அறிவார்கள். உங்கள் நோக்கத்தில் சிறு பிசகு இருந்தாலும் அவர்கள் தங்களை பொதுவாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை, இறங்கியும் வருவதில்லை. உங்களுக்கு அந்த பக்குவம் கிடைத்த பின் அவர்களே உங்களை மெல்ல ஆட்கொள்ள ஆரம்பிப்பார்கள். நீங்கள் யாசிக்க கூட வேண்டியதில்லை. உண்மையாய் இருங்கள். இயற்கையாக இருங்கள். யதார்த்தமாக வாழுங்கள். ஏதோ பெரியதாக உங்கள் குருமார்களுக்கு செய்ய போவதாக நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். உண்மையை சொன்னால் மனம் கசக்கும், அவர்களுக்கு தரும் அளவிற்கு உங்களிடம் ஏதும் இல்லை. உங்கள் சேவை கூட அவர்களுக்கு தேவை இல்லை. அவர்கள் ஏவல் சக்திகள் அல்ல, வழிபாடு செய்தால் தான் வீரியம் அடைவார்கள் என்பதற்கு, அவர்கள் சித்தர்கள். உங்களது வழிபாடு கூட அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. நீங்கள் எதுவும் அவர்களுக்கு செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை.
மாறாக தேவையெல்லாம் உங்களுக்கே, செய்வது எல்லாம் உங்களுக்காக தான், நீங்கள் தான் அவர்களிடம் யாசிக்கின்றீர்கள், நீங்கள் தான் அவர்களை நாடி செல்லுகின்றீர்கள், என்ற உண்மையான பணிவு முதலில் உங்களுக்குள் பிறக்க வேண்டும்! அதுவும், அவர்கள் எது உங்களதோ அதனை தான் பெற்றுத் தருவார்கள்! மாற்றானின் உடையதை அல்ல! நீங்கள் கேட்பதை எல்லாம் செய்து தருபவர்கள் அல்ல சித்தர் பெருமான்கள். சட்டென, நீங்கள் எதிர்பாராத நேரத்தில் ஞானத்தை அருளிவிட்டு தான் தான் செய்தேன் என்று பிரகடனம் கூட செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து விடுபவர்கள். எனவே அவர்கள் “அப்படி” இருந்தால் நீங்கள் அவர்களிடம் “எப்படி” இருக்க வேண்டுமென்று பார்த்து நடந்து கொள்ளுங்களேன்!ஒரு உண்மையான ஆத்ம தேடலில் உள்ளவனது வாழ்க்கை எளிதல்ல, மிக மிக கொடுமை, அதிலும் சித்தர்கள் வழி, கொடுமையிலும் கொடுமை, உண்மை சுட்டு எரித்து விடும், உறவுகள் அனைத்தையும் பொய்த்து போக செய்து விடும். எது உண்மை? சுடலையில் எது மட்டும் கடைசி வரை வரும்? யார், என்ன உடன் இருக்கும்? என்று படம் போட்டு காட்டி விடும். நாமே மாயை கொஞ்சம் கதகதப்பாய் இருக்கின்றதே என்று மாயைப் போர்வையாய் போர்த்தி கொண்டாலும் அதனை கிழித்து எறிந்து விடும். அதுவே ஆத்ம நிலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வளர்ந்து கொண்டே இருக்கும். இதில் கிடைக்கும் என்று தெரிந்தாலும் யாரையும் இது வரை மனம் உவந்து என்னால் அழைக்க இயலவில்லை, அந்த அழைப்பு இருந்தால் மட்டுமே சித்தர்கள் மரபில் ஜிவிக்க முடியும், இல்லை எங்கேனும் உள்ளுக்குள் ஏதேனும் ஆசா பாசங்களின் சீற்றம், நெடி மறைந்திருந்தால், அதற்கான இடத்தில் கொண்டு போய் சொருகி விட்டுவிட்டு வந்து விடுவார்கள். மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.
ஒரு பிறவியே போய் விடுகின்றது. எனவே தான் நான் யாரையும் சித்தர்கள் மரபிற்கு அழைப்பதில்லை, அழைக்குமாறு எனக்கு உத்தரவும் வந்ததில்லை. ஒரு சிலர் இருக்கின்றனர், அவர்கள் அதிலேயே வாழ்ந்து விட்டார்கள், எனவே அவர்களுக்கு அது பெரும் கஷ்டமாக தெரிவதில்லை, அதுவே அழைப்பின் பெயரில் வேறு ஒன்றில் இருந்து இங்கு வந்தவர்களுக்கு, இது மிகப்பெரிய சோதனை வென்றால் இறைவன் இல்லையென்றால் வெல்லும் வரை நரகம், பயிற்சி, பாடம், மருந்து, மருந்து…. திகட்டும்! அதற்கு மேல் எடுத்துக் கொள்ள முடியாத அளவு மருந்து கிடைக்கும். அதேபோல யாரும் கற்பனையில் கூட யூகிக்க முடியாத அளவிற்கு சந்தோஷத்தையும், இறை அனுபவத்தையும், பேர் அமைதியையும் கிடைக்கும். கொடுத்து அருளுவார்கள்.சித்தர்கள் வழி வந்தவர்கள் யாரும், ஜின், மற்றும் ஏவல் சக்திகளை பிரயோகம் செய்வதில்லை, அவைகளை உபயோகம் படுத்துவதுமில்லை, ஏனெனில் இயற்கையாக ஆன்மா பிரவேசம் அடைந்து காரியம் செய்ய வேண்டும், அதனையே அவர்கள் முன்னிறுத்துவார்கள், அதற்கு உதவியும் செய்கின்றார்கள். ஏதுவாக்கி தருகின்றார்கள், அப்படி அந்த நிலை கிடைக்கவில்லை எனின் அமைதியாக இருக்க வேண்டும், அதுவே அதற்கு மாறாக, தாங்களும் அனுபவிக்க வேண்டி, ஜின் மற்றும் ஏவல் சக்திகளை உபயோகப்படுத்தி இருந்தால், அதற்கான வினைப்பயனை அவர்கள் நிச்சயம் அனுபவித்து தான் ஆக வேண்டும். இதில் மாற்றம் ஏதும் இல்லை. நாங்கள் எவ்வளவு மாறுபடுகின்றோம். அனைத்தும் உயிரே என்றாலும், ஏன் உயிரற்ற பொருளும் சிவமே என்றாலும், அது வளர்ச்சி அடையும் பொருட்டு அதன் உத்தரவுடன் அதன் நிலையை உயர்த்த பாடுபட வேண்டும்.
எனவே உயர்ந்த நிலையதன் தன்னகம் கொண்ட ஒரு பொருளை குருவெனவே யாசித்து விண்டிடல் வேண்டும். அனைத்து உயிர்களுக்கும் அதுவே நியதி. அனைத்து உயிர்களும் ஒன்றே என்றாலும் அனைத்தையும் ஒரே போல பார்ப்பதில்லை… தரம் பிரித்து யாருக்கு என்ன எது என்று பார்த்து செய்கின்றோம். தவறான ஒரு உயிரை ஒரு தவறான இடத்தில் அமர்த்தி விட்டால் உலகத்தையே கூட அது அழித்து விடும். எனவே அந்த உயிர், அதன் வளர்ச்சி, அதன் தன்மை, அதன் பிராப்தம் என்று சகலமும் பார்த்து அதற்கேற்றாற் போல இயற்கையோடு சார்ந்து செயல்புரியும் ஒரு மரபு. சித்தர்கள் வழி. ஆன்மாவே மூலம். ஆத்ம வளர்ச்சியே குறிக்கோள். ஞானமே பிறவிபலன்.
சித்தர்கள் மரபு
சித்தர்கள் வழி இயற்கையோடு ஒன்றித்த ஒன்று. உண்ணாதே, உறங்காதே, உடலுறவு கொள்ளாதே என்று சொல்வதில்லை. இவையெல்லாம் உங்கள் வளர்ச்சியின் பொருட்டு அதுவாக குறைய ஆரம்பித்து விடும். ஒரு புள்ளியில் ஊன் மறந்து உயிர் மேல் உணர்வு அடங்கி விடும். அந்நிலையில் உன் இமைகள் மூடி இருந்தால் என்ன இல்லை பாதி திறந்து இருந்தால் என்ன? அதான் உணர்வே… சப்த நாடியும் அகத்தினுள் அடங்கி விட்டதே… பிறகு? அதுவே முதிர்ந்த நிலை. மாணாக்கர்கள் முட்டாள் தனமாக இந்த முதிர்ந்த நிலையை அடையாமலே அதனை அடைந்தது போல பாவனை காட்டி ஏமாற்றிக் கொள்கின்றார்கள்.
என்ன செய்ய? முதலில் மனம் அகத்தில் ஒடுங்குகின்றதா என்று பாருங்கள். கண்ணாடி வழிபாடு, அகல் ஏற்றி வழிபாடு செய்வது, அக்னி வளர்ப்பது, சப்தம் எழுப்புவது, இவை அனைத்தும் அந்நிலை அடையவே தவிர அவைகள் அந்நிலையல்ல என்பதில் திண்ணமாக இருங்கள். முதலில் யோகம் வசப்படட்டும் பிறகு ஞான நிலைகள் அதாவது சமாதி நிலைகள் வசமாகின்றதா என்று பார்ப்போம்? சமாதி நிலைகளில் உணர்வு அகத்தினுள் அடங்கி விடும்… அடங்கி விட்டால் உன் மனம் கண்கள் மேல் இருப்பதில்லை பிறகு எப்படி உனக்கு தெரியும் கண்கள் மூடி இருக்கின்றனவா இல்லை திறந்து இருக்கின்றனவா என்று? அதுவே உன் மனம் கண்கள் மேல் இருந்தால் அதாவது கண்களை திறந்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இருந்தால் எப்படி மனம் உள்ளுக்குள் அடங்கும். அப்படி மனம் அடங்கவில்லை என்றால் எப்படி உணர்வு உள்ளுக்குள் அடங்கும்? இதில் நீ கண்ணாடி வைத்து வழிபட்டால் என்ன இல்லை அகல் ஏற்றி வழிபட்டால் என்ன ஒருபயனும் இல்லை. முதலில் உனக்குள் அடங்கு. மனதை கண்கள் மேல் வைக்காமல் அகத்தின் மேல்… உயிரின் பால் இருத்து!சித்தர்கள் வழி கோடியில் ஒருவனுக்கு சித்தியானாலே அது “இயற்கைக்கு” பெரும் பேறு! முற்றும். குருவே துணை!
நன்றிகள் :
யோகி. கோபிநாத்.
சித்தர் பீடம் இலங்கை
இக்கட்டுரையில் சித்தர்களின் வாழ்க்கை பற்றி நாம் யாருமே அறியாத பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்திருக்கும் என்று நம்புகின்றோம். வாராந்தம் சமயம் சார்ந்த செய்திகளை வாசிக்க எமது சமயம் மற்றும் கலாச்சாரம் பகுதிகளுக்கு செல்லுங்கள்..