இளைய தளபதி விஜய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
நடிகர் விஜய் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள் என்ற தமிழ் சினிமாவின் உச்சம் தொட்டு கொண்டிருக்கிறார். இந்த வெற்றிகளுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்த அவரது முதல் படம் நாளைய தீர்ப்பு. இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகின்றன 28 ஆண்டுகளில் 64 திரைப்படங்களில் நடித்து இருக்கும் விஜய்யின் வெற்றியை தனக்கே உரித்தான வெற்றியாய் அவரது ஒவ்வொரு ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்.
இளைய தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பிறகு தளபதியாக மாறியிருக்கும் நடிகர் விஜய் 1974 ஆம் ஆண்டு இதே நாளில் தான் பிறந்தார். இவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராக வலம் வந்தவர். அதேபோல் தாய் ஷோபா பாடகி.
கலைக் குடும்பத்தில் பிறந்த விஜய்க்கு சிறுவயது முதலே சினிமாவின் மீதான காதல் தொற்றிக் கொண்டது இதனால் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தை ஹீரோவாக வைத்து இயக்கிய வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றினார் விஜய்.
இந்த படத்தை தொடர்ந்து எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய குடும்பம், வசந்த ராகம் சட்டம் ஒரு விளையாட்டு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் விஜய். தன்னுடைய தந்தை சினிமா துறையில் சிறந்த இயக்குனராக இருந்ததால் அவரிடம் நிறைய நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
விஜயகாந்த் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் நான் சிகப்பு மனிதன் படத்தில் ரஜினிகாந்துடன் சிறு வேடத்தில் நடித்தார்.
ஒருபுறம் சினிமாவில் நடித்துக்கொண்டே இன்னொருபுறம் தன்னுடைய தாயிடம் பாடல் பாடுவதையும் கற்றுக்கொண்டார். அது தான் பின்னாளில் விஜய் சிறந்த பாடகராக வலம் வருவதற்கு உதவியது. நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு ஏழு ஆண்டுகள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார் விஜய் அதன் பின் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை தொடர்ந்த விஜய்யை 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படம் மூலமாக ஹீரோவாக மாற்றினார் எஸ். ஏ. சந்திரசேகர் இந்த படத்திற்கு விஜய்யின் தாய் கதை எழுதி இருந்தார். அவருடைய கதையை திரைக்கதை அமைத்து இயக்கினார் எஸ். ஏ. சந்திரசேகர் முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் விஜய். அந்த படத்தில் நடிக்கும்போது அவரே நினைத்திருக்க மாட்டார் பின்னாளில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட நடிகராக மாறுவோம் என்று. இது முதல் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை இருந்தாலும் தன்னம்பிக்கையோடு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்தார் விஜய்.
அந்த சமயத்தில் விஜயகாந்தோடு இணைந்து செந்தூர பாண்டி படத்தில் நடித்தார் விஜய். அப்போது விஜயகாந்த் முன்னணி நடிகராக ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றிருந்ததால் அது விஜய்க்கு உதவும் என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் செந்தூரபாண்டி படமும் சுமாரான வெற்றியை மட்டுமே பதிவு செய்தது இதை தொடர்ந்து அடுத்த படத்தை நிச்சயம் வெற்றி ஆக்க வேண்டும் என்று எஸ். ஏ. சந்திரசேகரும் சோபாவும் திட்டமிட்டனர். அதற்காக ஷோபா ஒரு சிறப்பான கதையை எழுத அதை கமர்சியல் விஷயங்களோடு ரசிகன் என்ற பெயரில் சூப்பராக இயக்கியிருந்தார் எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் நடிப்பில் வெளியான ரசிகன் திரைப்படமே விஜய்க்கு முதல் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்தது. ஆக்ஷன் காதல் என இரண்டிலும் மிக அற்புதமாக நடித்திருந்தார் 1994 ஆம் ஆண்டு வெளியான ரசிகன் படத்திற்கு பிறகு அவருடைய வெற்றி பயணம் தொடங்கியது அதை இன்றுவரை யாராலும் அசைக்க முடியாத வகையில் தொடர்கிறது.
ரசிகன் படத்திற்கு பிறகு விஜய் நடித்த தேவா படமும் அந்த படத்தின் பாடல்களும் வெற்றி பெற்றன. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் பாடகராகவும் அவதாரம் எடுத்தார். இதற்கு பிறகு பெரும்பாலான படங்களில் ஒரு பாடலை விஜய் பாடியிருக்கிறார். விஜய் ஹீரோவாக நடித்த முதல் நான்கு படங்களிலும் அவருடைய தாய் கதை எழுத அந்த கதைகளை தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி இருந்தார்.
தொடர்ந்து பெற்றோர்களின் படங்களில் நடித்து வந்த விஜய் ராஜாவின் பார்வையிலே படத்தில் வேறு இயக்குனரோடு கூட்டணி அமைத்தார் ஜானகி சௌந்தர் என்பவர் இயக்கிய அந்த படத்தில் இன்றைய போட்டியாளராக கருதப்படும் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். இதன் பின் விஷ்ணு, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, என அடுத்தடுத்த படங்களும் விஜய்யின் மார்க்கெட் டுக்கு முட்டுக்கட்டை போட்டது, இந்த நிலையில் தான் இயக்குனர் விக்ரமனோடு விஜய் கூட்டணி அமைத்தார் பூவேஉனக்காக படத்திற்காக இணைந்து இந்த கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
1992 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான விஜய்க்கு 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த பூவே உனக்காக படம் தான் சூப்பர் டூப்பர் மெகா ஹிட்டானது காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விஜய் என்ற நடிகனை தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்து கொண்டாட வைத்தது. அது வரை எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் திரையரங்குளில் 250 நாட்களை கடந்து ஓடிய பூவே உனக்காக படம் தான் விஜய்க்கு என்று தனி ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது குறிப்பாக அந்த படத்தின் பிறகு விஜய் அதிகபடியான பெண் ரசிகர்களை பெற்றார்.
விஜய் என்ற நடிகர் கலைதுறை குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அவருடைய வெற்றி கடுமையான உழைப்புக்கு பிறகே கிடைத்தது. இளைய தளபதி விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
இது போன்ற மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
Wall image source:https://www.mynation.com/south-movies/happy-birthday-vijay-celebs-wishes-bigil-s-thalapathy-pthmyc